சூழலியல் போராட்டம்: யாருக்கான ஆலை இது?

By பிருந்தா சீனிவாசன்

ரசு தன் கடமையைச் சரிவர செய்ய வேண்டுமென்றால் மக்களும் மண்ணும் மீட்கவே முடியாத அளவுக்குப் பாதிப்புக்குள்ளாக வேண்டும். அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக இனம் காண முடியாத நோய்களால் மக்கள் செத்து மடிய வேண்டும். அல்லது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை சாலையில் திரண்டு போராட வேண்டும். தூத்துக்குடியில் இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த தூத்துக்குடி மக்களின் குரல், இப்போது பேரிரைச்சலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் பிறகே அந்த ஊரில் காத்திருக்கும் பேராபத்து குறித்துப் பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் செயல்பட்டுவருகிறது வேதாந்தா நிறுவனத்தின் ஓர் அங்கமான ஸ்டெர்லைட் காப்பர். அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு, சுற்றுச்சூழலைச் சீரழிப்பதோடு சுற்றுப்புற மக்களின் ஆரோக்கியத்தையும் குலைக்கிறது என்பதால் அந்த நிறுவனத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கையோடு பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கடந்த ஒன்றரை மாதமாக போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்கள். ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட வேண்டும் என்பது மட்டுமல்ல, அவர்களது கோரிக்கை.

மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அளவிட முடியாத பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தும் அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்த அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரியம், புகார்களுக்குத் தகுந்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் என அதிகாரத்தின் பல மட்டங்களில் இருக்கிறவர்களையும் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே, அந்த நிறுவனம் சீர்கேட்டை உருவாக்கியிருக்கும் நிலையில் தற்போது அபிவிருத்திப் பணியில் இறங்கியிருப்பதே வலுவடைந்திருக்கும் போராட்டத்துக்குக் காரணம் என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

புறக்கணிப்பின் விளைவு

தொழிற்சாலையின் வளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட பகுதி மக்களும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்பதாலேயே பல நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளிக்கிறது. பொருளாதாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அத்தியாவசியமான விஷயங்களைப் புறக்கணிப்பதுதான் பின்னாளில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அப்படி மோசமான விளைவுகளைச் சந்தித்துவரும் மக்கள்தான் இப்போது போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். ஸ்டெர்லைட் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவால் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளோடு புற்றுநோயும் ஏற்படுகிறது என்பதுதான் ஸ்டெர்லைட் நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் குற்றச்சாட்டு.

ஸ்டெர்லைட் மட்டுமல்ல வேதிப்பொருட்களுடன் தொடர்புடைய எந்தத் தொழிற்சாலையாக இருந்தாலும் கட்டுமானத்தில் தொடங்கி கழிவை வெளியேற்றுவதுவரை பல்வேறு கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் உண்டு. ஆனால், ஸ்டெர்லைட் நிறுவனத்தில் அடிப்படையிலேயே விதிமீறல் நடந்திருக்கிறது என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

“ஆபத்தான தொழிற்சாலைகளைக் குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கக் கூடாது என்ற விதியைப் பலரும் மதிப்பதே இல்லை. ஸ்டெர்லைட் நிறுவனமும் பல வகைகளில் விதிமீறலைச் செய்திருக்கிறது. ஆனால் ஒவ்வொன்றிலிருந்தும் தந்திரமாகத் தப்பித்தும் வந்திருக்கிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ‘நீரி’யும் (National Environmental Engineering Research Institute) கண் துடைப்புக்காகச் சில ஆய்வுகளைச் செய்து, ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று சொல்லிவிட்டன.

பாதிப்பு எதுவும் இல்லையென்றால் பிறகு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஏன் தொடர்ந்து உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாக வேண்டும், இப்படி வீதிக்கு வந்து போராட வேண்டும்?” என்று கேட்கும் நித்யானந்த், ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கப் பணிகளை நிறுத்த வேண்டும் என்கிறார்.

அரசாங்கம் கறைபடிந்திருக்கும்போது எல்லா இடத்திலும் ஊழலும் சுரண்டலும் மலிந்துவிடும் என்பதற்கு இந்த நிறுவனமும் ஒரு சாட்சி என்று சுட்டிக்காட்டும் அவர், ஸ்டெர்லைட் நிறுவனச் செயல்பாடுகளைக் கண்காணிக்கத் தகுந்த நபர்களைக் கொண்ட குழுவை உருவாக்குவது அவசியம் எனவும் வலியுறுத்துகிறார்.

கழிவில் நிறைந்திருக்கும் ஆபத்து

முறையாகச் சுத்திகரித்த பிறகே தொழிற்சாலைக் கழிவை வெளியேற்ற வேண்டும் என்பது அடிப்படை விதிகளில் ஒன்று. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் வேதிப்பொருள் கலந்த கழிவு வெளியேற்றப்படும்போது, அவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். காற்றிலும் மண்ணிலும் நிலத்தடி நீரிலும் கலக்கும் கழிவு, சுற்றுச்சூழலையும் மக்களையும் மிகவும் பாதிக்கும். அதுவும் உடனடியாகப் பாதிப்பு ஏற்படாது. வேதிப் பொருட்கள் மண்ணிலும் மனிதர்களின் உடம்பிலும் குறிப்பிட்ட அளவு சேர்ந்த பிறகு பிரச்சினையின் வீரியம் வெளிப்பட ஆரம்பிக்கும்.

தாதுப் பொருட்களைப் பிரித்தெடுக்கும்போது ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு வேதிப்பொருட்கள் கழிவாக வெளியேறும். அவை ஏற்படுத்தும் பாதிப்பும் பெரிதாகத்தான் இருக்கும் என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பேராசிரியர் அருணாசலம். கேரள மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் இவர் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து கவனப்படுத்திவருகிறார். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் திடக் கழிவுகளை எங்கே கொட்டுகிறார்கள் என்பதுகூட மர்மமாக இருப்பதாக அவர் சொல்கிறார்.

“தாமிரத்தைப் பிரித்தெடுக்கும்போது அதிலிருந்து பல்வேறு திட உலோகங்கள் வெளியேறும். காட்மியம், பாதரசம், ஆர்சனிக், இரும்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை. இவை எல்லாமே மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆர்சனிக், காட்மியம், பாதரசம் போன்றவை நரம்புக்கோளாறுகளை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் மூட்டு வலியாகத் தொடங்கிப் பிறகு குறிப்பிடத்தகுந்த பாதிப்பை உண்டாக்கும்.

சில வேதிப்பொருட்கள் புற்றுநோயைக்கூட ஏற்படுத்தும். அடுத்துவரும் தலைமுறையையும் இது பாதிக்கும்” என்று சொல்லும் அருணாசலம், பெரும்பாலான நிறுவனங்கள் கழிவுப் பொருட்களை மறுசுழற்சிக்கோ சுத்திகரிப்புக்கோ உட்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்.

“உலோகத்தைப் பிரித்தெடுப்பில் ஈடுபடும் நிறுவனங்கள், அவற்றின் துணைப் பொருளாகக் கிடைக்கிறவற்றையும் தகுந்த முறையில் கையாள வேண்டும். ஆனால், அதற்கான செலவு முதலீட்டுத் தொகையில் கிட்டத்தட்ட பாதியளவு ஆகும் என்பதால் பலரும் அதைச் செய்வதில்லை. அதனால் அவற்றைக் கழிவாக வெளியேற்றிவிடுகிறார்கள். தாமிரம் பிரித்தெடுத்தலின்போது கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகிய இரண்டும் அதிக அளவில் வெளியேறும்.

இங்கே புகைபோக்கியின் உயரம் குறைவாக இருப்பதால் அதன் வழியே வெளியேறும் புகை, வாயு மண்டலத்துடன் எளிதில் கலந்துவிடும். காற்றில் இருக்கிற ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு கந்தக அமிலமாகவும் நைட்ரிக் அமிலமாகவும் மாறும். மழை நாட்களில் அமில மழையாகப் பொழிந்து மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த அதிக சாத்தியம் உண்டு” என்று ரசாயனக் கழிவில் நிறைந்திருக்கிற ஆபத்து குறித்து சுட்டிக்காட்டுகிறார்.

எது வளர்ச்சி?

புதுப்புது நிறுவனங்களைத் தொடங்குவது நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடையது, அதை எப்படித் தடுக்க முடியும் என சிலர் வாதிடுகிறார்கள். இயற்கைக்கும் மக்களுக்கும் எதிரான ஒன்று எப்படி வளர்ச்சியாகும்? ஆயிரம் பேருக்கு வேலை தந்துவிட்டு லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் சிதைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எல்லாவற்றுக்கும் அளவும் எல்லையும் இருக்கிறது. எல்லை மீறப்படுவதை எத்தனை காலம் பொறுத்துக்கொள்ள முடியும் என்பதையே தூத்துக்குடி மக்களின் இந்தப் போராட்டமும் உணர்த்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

21 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

மேலும்