14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழக அரசு விதித்திருக்கும் தடைக்குப் பொதுவெளியில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இதையொட்டி முழுமையான புரிதலை மக்களிடம் முழுமையாகக் கொண்டு செல்ல பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
இவற்றுக்கு மத்தியில் வெறுமனே விழிப்புணர்வு என்பதற்கப்பால், பிளாஸ்டிக்கின் மறுபக்கம் குறித்தும் அதன் ஒட்டுமொத்த உபயோகத்தை மறுபரிசீலனை செய்யக் கோரியும் இயற்கை ஆர்வலர்கள், அறிவியலாளர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கம் பெரம்பலூரில் நடைபெற்றது.
‘தமிழ்க் காடு’ ‘மண்ணின் மக்கள்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் விழிப்புணர்வுக் கண்காட்சி, பசுமை நூல்கள், சணற்பைகள் மற்றும் துணிப்பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஞெகிழியும் ஞாலமும்
‘ஞெகிழியும் ஞாலமும்’ என்ற தலைப்பிலான அமர்வில் பிளாஸ்டிக்கின் விளைவுகள், அதை எதிர்கொள்வது குறித்து ஆழமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பிளாஸ்டிக் தடைக்கு வரவேற்பு அல்லது எதிர்ப்பு ஆகிய இரு முனைகளுக்கு மத்தியில் பிரச்சினையின் மையத்தை அலசும் வகையில் இந்த அமர்வு அமைந்தது.
“குரூட் ஆயில், நாப்தா வரிசையில் இப்போது பயன்பாட்டில் இருப்பது மூன்றாம் தலைமுறை பிளாஸ்டிக். இதை நாம் முறையாகக் கையாளாவிட்டால் நெடிய பிரச்சினைகளுக்குக் காரணமாகி விடுவோம்” என அண்ணா பல்கலைக்கழகத்தின் பெட்ரோலிய வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் எம்.ரெங்கசாமி பேசினார். திருச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல்ஹமீது
‘மரபுப் பொருட்களின் பயன்பாடும் பிளாஸ்டிக் பொருட்களின் தீங்கும்’ என்ற தலைப்பில் நடைமுறை உதாரணங்களுடன் விளக்கிப் பேசினார். அரசு தோல்நோய் மருத்துவரான தி.சுதாகர், தோலில் தொடங்கி நாளமில்லாச் சுரப்பிகள் வரை மனித உடலில் பிளாஸ்டிக் அச்சுறுத்தலான விளைவுகள் ஏற்படுத்துவதை எடுத்துக் கூறினார்.
அரசு கால்நடை மருத்துவர் ராஜேஷ்கண்ணா மனிதர்களின் பிளாஸ்டிக் மோகத்திற்கு கால்நடைகள் பலியாவதன் வேதனையை விளக்கி, உயிர்ச்சூழலுக்கு பிளாஸ்டிக் ஏற்படுத்தும் சிக்கல்களைப் பட்டியலிட்டார். தனியார் கல்வி நிறுவனச் செயலரான கே.மித்ரா, ‘பிளாஸ்டிக் குறித்து இளம்தலைமுறையினர் பெற வேண்டிய விழிப்புணர்வை’ விளக்கினார். அரசு பொது மருத்துவர் மருதபாண்டியன் மனித உடலில் கலந்துவிட்ட பிளாஸ்டிக் பற்றிய அறிவியல் தகவல்களைக் கூறினார்.
துணிப்பை இயக்க ஒருங்கிணைப்பாளரும் சுற்றுச் சூழல் செயற்பாட்டளருமான ரமேஷ் கருப்பையா, பிளாஸ்டிக்கை அதன் மூலப்பொருளாக எடுப்பதில் தொடங்கிப் பிரித்தெடுப்பது, உபயோகம், அப்புறப்படுத்தல் என அவை கடந்துவரும் அனைத்துக் கட்டங்களிலும் நேரும் சிக்கல்களை விளக்கினார்.
இது பிளாஸ்டிக் காலம்
ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தீங்கு குறித்தும், ஏதோவொரு கட்டத்தில் பிளாஸ்டிக் தீங்கானது என்பதையும் தற்போது உணரத் தொடங்கி இருக்கிறோம். ஆனால் பிளாஸ்டிக்கின் ஆபத்தான முகத்தை உலகம் இன்னமும் முழுமையாக அறிந்தபாடில்லை. கற்காலம், உலோகக் காலம் போல, தற்காலத்தை பிளாஸ்டிக் காலம் என்று அடையாளம் காணுமளவுக்கு இந்தச் சீரழிவு பீடித்துள்ளது. இதற்கு முந்தைய மனித கண்டுபிடிப்புகளில் பிளாஸ்டிக் அளவிற்கு சகலத்தையும் ஆக்கிரமித்து தீங்கு உண்டாக்கும் பொருள் இல்லை.
காட்டுயிர்களான யானைகள், மான்கள் உயிருக்கு பிளாஸ்டிக் உலை வைக்கிறது. கடலை நம்பியிருக்கும் பெரும்பாலான கடற்பறவைகளின் உடலிலும், மீன்களின் உடலிலும் பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் கரையை ஒட்டி பிளாஸ்டிக் கூளங்களாலான சிறு தீவுகள் உருவாகிவிட்டன. சர்வதேச அளவில் விற்பனையாகும் பிளாஸ்டிக் குப்பியில் அடைக்கப்பட தண்ணீரை ஆய்வு செய்ததில் அதில் மனித உடலுக்கு ஊறு செய்யும் பிளாஸ்டிக் கலந்திருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
தேவை மறுபரிசீலனை
ஒட்டுமொத்தமாய் பிளாஸ்டிக் உபயோகத்தை மறுபரிசீலனை செய்தாக வேண்டும். அதன் தோற்றம், தாக்கங்கள், விளைவுகளை முழுமையாக உணர்ந்துகொள்வது இதற்கான முதல்படி. பிளாஸ்டிக்கின் தோற்றுவாய் பெட்ரோலியத்தையும் எரிவாயு உற்பத்தியையும் சார்ந்திருக்கிறது. எனவே மரபுசாரா எரிபொருள்களுக்கு மாறவேண்டியதை வலியுறுத்தும் காரணங்களில் பிளாஸ்டிக்கும் சேர்ந்திருக்கிறது.
பெட்ரோலியப் பொருள்களில் இருந்து பிளாஸ்டிக்கைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் மூலமாகவும் தீங்கு பரவும். அமெரிக்காவின் மிசிசிபி ஆற்றங்கரையில் பிளாஸ்டிக்கைப் பிரித்தெடுக்கும் பகுதியில் வாழும் மக்களில் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது இதற்கான அவலச் சான்று. இதுபோலவே பிளாஸ்டிக்கில் பொருட்கள் தயாரிக்கப்படும்போதும் பாதிப்புகள் தொடருகின்றன. அன்றாட வாழ்வில் நுகர்வோர் பயன்பாட்டினாலான பிளாஸ்டிக் பாதிப்புகள் நாமறிந்ததுதான்.
இயற்கையின் விதிப்படி ஒரு பொருளானது ஐம்பூதங்களால் உருவாக்கப்பட்டு மீண்டும் பூமிக்கே மூலப்பொருளாகத் திரும்பும். இந்தச் சுழற்சியால் தீங்கு ஏற்படாததுடன், எந்தக் கட்டத்திலும் உயிர் சங்கிலியின் கண்ணிகள் பாதிக்கப்படாது. ஆனால் இந்த இயற்கை விதிக்குச் சவாலாக பிளாஸ்டிக் அசுர வடிவம் காட்டுகிறது. எனவே நமது நோக்கம் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுதும் மறுபரிசீலனை செய்வதாக அமையட்டும்.
நுகர்வோர் வீசிச்செல்லும் பிளாஸ்டிக்கை அப்புறப் படுத்துவதும், மறுசுழற்சிக்கான ஏற்பாடுகளும் சுற்றுச்சூழலுக்குச் சவாலாகின்றன. அதற்கான முழுமையான தொழில்நுட்பம் இன்னமும் கண்டறியப்படவில்லை. வளர்ந்த நாடுகள் தங்களது பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா, இந்தோனேஷியா போன்ற வளரும் நாடுகளுக்கு தள்ளி விடுகின்றன.
சாமானியர்கள் பிளாஸ்டிக் அப்புறப்படுத்தும் முயற்சியில் எரிப்பது, புதைப்பது அல்லது நீர்நிலைகளில் எறிவதை அதிகம் செய்கிறார்கள். எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சென்னையின் பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நிலங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. பிளாஸ்டிக்கை எரிப்பதால் ஏற்படும் பாதிப்பு நாம் உணரக்கூடியது. மறுசுழற்சி முயற்சியில் ஈடுபடும் தொழிற்சாலைகளாலும் சூழல் பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும்.
மாற்றுத் தீர்வாகச் சாலை போடுவது, கட்டுமானப் பொருட்களாக பயன்படுத்துவது, துகள்களாக அரைத்து கற்கள் உருவாக்குவது, சிமெண்ட் தொழிற்சாலை, சிறுதொழில் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிப்பது ஆகியவற்றை அறிவியலாளர்கள் முன்வைக்கின்றனர். தாரில் கலப்பதற்காக பிளாஸ்டிக்கை சேர்த்து எரிக்கையில் நச்சு வாயுக்கள் வெளியாகும்.
கட்டுமானப்பொருள் உருவாக்கத்துக்காக பிளாஸ்டிக்கை அதீத அழுத்தத்துக்கு உள்ளாக்கும்போது அதிலிருந்து திவாலையாக வெளியாகும் வேதி திரவம் மிகப்பெரும் கேடு தரும். சுற்றுச்சூழல் விதிகளை ஒழுங்காக பின்பற்றாத பெரு நிறுவனங்கள் பிளாஸ்டிக்கை எரிபொருளாக பயன்படுத்துவது கேள்விக்குரியது.
பொறுப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள்
பொதுமக்கள் சிறு வணிகர்களுக்கு அப்பாலும் பிளாஸ்டிக் தடையின் கரங்கள் நீள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதில் மென்பானம், உணவு தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகளை இந்த நிறுவனங்கள் முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. பிளாஸ்டிக் கழிவை கையாள் வதிலும் மேலாண்மை செய்வதிலும் பன்னாட்டு நிறுவனங்களை பொறுப்புடையவர்களாக மாற்ற வேண்டும். இதுபோன்ற கருத்துகள் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
9 days ago