காதருன்நிஷா
வட இந்தியாவில் காற்று மாசுபாடு அபாய எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டது. இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஆட்கொல்லியாகக் காற்று மாசுபாடு உள்ளது. காற்று மாசுபாட்டின் பாதிப்பு, ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் மக்கள் காற்று மாசு பாதிப்பால் மடிகிறார்கள்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசால் ஏற்படும் பாதிப்பு சமீப காலமாகத் தேசத்தின் பேசு பொருளாக உள்ளது. டெல்லியின் காற்று மாசுபாடு அளவு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 101-ல் இருந்து 200 புள்ளிகளாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக 500 புள்ளிகள்வரை உயர்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லியின் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு, அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளே காரணம் எனச் சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அந்த மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் மாதத்தில் ஏற்கெனவே அறுவடையான நெற்பயிரின் மீதங்களை தீயிட்டுக் கொளுத்துகின்றனர். அதனால், எழும் புகை, காற்றின் போக்கில் டெல்லியின் மீது கவிந்து, அந்த நகரின் காற்று மாசுபாட்டுக்குக் காரணமாகி விடுகிறது.
சுற்றுச்சூழலுக்கு நேரும் பாதகத்தை உணர்ந்த அம்மாநில அரசுகள், நெற்பயிரின் மீதங்களை எரிப்பதற்குத் தடைவிதித்துள்ளன. மீதங்களை அகற்றும் மாற்று ஏற்பாடுகள் அதிக செலவு பிடிப்பதால், இந்தத் தடையை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், மீரட்டைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள், தங்களது புத்திசாலித்தனத்தால், மலிவான விலையில் அதற்கு மாற்று ஏற்பாட்டைக் கண்டுபிடித்து, நாட்டின் மற்ற பாகங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு வழிகாட்டியாக மாறியுள்ளனர். மீரட்டில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த 250 விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக, அறுவடைக்குப் பின்னான மீதங்களை எரிப்பதில்லை. இதன் காரணமாக ஆண்டுக்குச் சுமார் 22,50,000 கிலோ கார்பன் - டை- ஆக்சைடு வெளியேறி விண்ணில் கலப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், விவசாய மீதங்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்ற பேச்சு எழுந்தது. அந்தக் காலகட்டத்தில், எரிப்பதற்கு மாற்றாக, குறைந்த செலவில், ஒரு மாற்று ஏற்பாட்டை உருவாக்க வேண்டும் என லலித், ராமன் எனும் இரண்டு நண்பர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஒராண்டு முயற்சியின் இறுதியில், ஓர் உரக்குழியை அமைத்தனர். அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் அமைத்தனர். அது தற்போது எல்-ஆர் (லலித் - ராமன்) மாடல் என்று அழைக்கப்படுகிறது.
குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட உரக்குழியின் வெளியளவு 8x3x1 மீட்டர் எனவும் உள்ளளவு 7.1x2.1x1 மீட்டர் எனவும் வடிவமைத்தார்கள். அதிகக் கொள்ளளவு கொண்ட அந்தக் குழியில், நெற்பயிரின் மீதங்கள், கரும்பு தோகைகள், மாட்டு சாணம், மண், தண்ணீர் ஆகியவற்றை இட்டு நிரப்பினர். இரண்டு மாதங்களில் அந்தக் கலவை மக்கி உரமானது. அந்த உரத்தின் அளவு அவர்களின் ஒட்டுமொத்த விவசாய நிலத்துக்கும் போதுமானதாக இருந்தது. பயிருக்கு நீர் பாய்ச்சும்போது, தண்ணீரோடு இந்த உரத்தையும் கலந்து அவர்கள் பாய்ச்சினார்கள். நல்ல மகசூலும் கண்டனர். இந்த முறையால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. மண்ணின் தரம் உயர்த்தப்படுகிறது. இந்த உரக் குழி அமைக்க 25,000 ரூபாய் செலவு பிடிக்கும்.
எந்தப் புது திட்டத்தையும் எடுத்தவுடனே ஆதரிக்கும் மனோபவம் மனிதர்களுக்கு இருப்பதில்லை. லலித் - ராமரின் இந்த எளியக் கண்டுபிடிப்புக்கும் தொடக்கத்தில் பெரிய ஆதரவு இல்லை. ராமரும் லலித்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ரசாயன உரத்தை விடவும் பூச்சிக்கொல்லி மருந்தை விடவும், இந்த உரம் தரத்திலும் வீரியத்திலும் உயர்ந்தது என விவசாயிகளிடம் அவர்கள் எடுத்து உரைத்தார்கள்.
உரக்குழியை அமைப்பதற்கு, முதலில் ஒரு விவசாயி மட்டும், மிகுந்த தயக்கத்துக்குப்பின் ஒப்புக்கொண்டார். அந்த உரக்குழி அமைப்பதற்கு ஆன மொத்தச் செலவையும் லலித்தும் ராமருமே ஏற்றுக்கொண்டனர். அந்த விவசாயி பெற்ற அதிக மகசூல், அந்தக் கிராமத்தின் ஏனைய விவசாயிகளின் கவனத்தைக் கவர்ந்தது. உரக்குழியை அமைப்பதற்கு அவர்கள் தாமாகவே முன்வந்தனர். இன்று இந்த எல்-ஆர் மாடல் உரக்குழியை, மீரட் மாவட்டத்தில், 50 கிராமங்களைச் சேர்ந்த 250 விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். லலித்தும் ராமரும் தங்களது கண்டுபிடிப்பை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் முனைப்பில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள். விவசாயத்தால் காற்று மாசடையாத நிலை தேசம் முழுவதும் ஏற்படும் என்ற நம்பிக்கையை விவசாயிகளின் மனத்தில் இவர்கள் அழுத்தமாக விதைத்து இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 min ago
சுற்றுச்சூழல்
23 hours ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
21 days ago