சிலையால் நிர்மூலமாகும் வாழ்வு

By முகமது ஹுசைன்

சர்தார் வல்லபபாய் பட்டேல்  இந்தியாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவர். காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், நேருவின் முதன்மைத் தளபதி, சுதந்திர இந்தியாவைக் கட்டமைத்தவர், இந்தியாவின் முதல் துணைப் பிரதமர், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் என பட்டேலின் சிறப்புகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

அவரைப் போற்றும்விதமாக, கடந்த அக்டோபர் 31-ல், பட்டேலின் 143-ம் பிறந்த நாள் அன்று,   பட்டேலைவிட நூறு மடங்கு அதிக உயரம்கொண்ட ‘ ஒற்றுமைக்கான சிலை’யைப் பிரதமர் திறந்து வைத்தார். நாட்டின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் உயர்ந்த மனிதருக்கு உலகிலேயே உயர்ந்த சிலை அவர் பிறந்த மாநிலமான குஜராத்திலேயே நிறுவப்பட்டுள்ளது.

சிறப்பும் எதிர்ப்பும்

3,600 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த பட்டேல் சிலை 182 மீட்டர் உயரம்கொண்டது. இந்தச் சிலை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட நான்கு மடங்கு அதிக உயரம் கொண்டது. நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவாடியாவில் இந்தச் சிலை திறப்பு வைபவத்தை ஒரு பண்டிகையைப் போல் ஆளுங்கட்சி கொண்டாடியது.

சதுபேட் தீவில் அமைந்திருக்கும் அந்தச் சிலை நர்மதா நதியின் மேல் கம்பீரமாக நின்றது. மூவண்ண கொடியை ஏற்படுத்தும் வகையில் புகையை கக்கிச் சென்ற விமானங்கள், வானிலிருந்து சிலையின் மீது மலர்களைத் தூவின. “இந்தச் சிலையால் நாட்டுக்கே பெருமை” என்று பிரதமர் மோடி சொன்னார்.

மேலும், ‘இந்தியாவை இனி யாராலும் குறைவாக எடை போட முடியாது. இந்தச் சிலை நமது வலுவுக்கும் திறனுக்கும் சான்று’ என விழா மேடையில் அவர் முழங்கினார். ஆனால், அந்த முழக்கத்தை அங்கு வசிக்கும் ஆதிவாசிகளின் எதிர்ப்பு குரல்கள்   நீர்த்துப் போகச்செய்தன. அந்தக் குரல்கள் சடுதியில் தேசத்தின் / உலகத்தின் பேசு பொருளாக மாறின.

வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள்

இந்தப் பிராந்தியத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற அரசு முடிவு செய்திருப்பதால், இதை வெறும் சிலை என்ற மட்டில்  கடந்து சென்றுவிட முடியாது. ஐந்து வருடங்களுக்கு முன்பு வரைகூட இந்தப் பகுதி ஒர் அடர் வனமாக இருந்தது. எதைப் போட்டாலும் விளையும் செழிப்பான நிலமும், அபரிமிதமான நீர் வளமும், சுத்தமான காற்றும், இயற்கையின் பேரழகும் இந்தப் பகுதியின் தனித்துவச் சிறப்புகளாக இருந்தன.

ஆதிவாசிகளின் குடியிருப்பாக இந்தப் பகுதி காலங்காலமாக விளங்குகிறது. அங்கு வசிக்கும் ஆதிவாசிகளிடம் பணம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உணவுப் பஞ்சத்துக்கு அவர்கள் ஒருபோதும் ஆளானது இல்லை.

இந்தப் பகுதியைச் சுற்றுலா தலமாக்கும் அரசின் திட்டம் முழுமையாக நிறைவேறினால், இங்கு வசிக்கும் பூர்விகக் குடிகளான ஆதிவாசிகளின் வீடுகளையும் விவசாய நிலங்களையும், அங்கு அமைய இருக்கும் மலர்களின் பள்ளத்தாக்கும் மாநில அரசுகளின் கெஸ்ட் ஹவுஸ்களும் விடுதிகளும் படகுகள் ஓடும் ஏரியும் ஆக்கிரமிக்கும்.

இந்தப் படகுத்துறைக்காக நதியின் குறுக்கே ஒரு தடுப்பு அணை கட்டப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பு அணையினால், ஏற்கெனவே அங்கு இருக்கும் ஆறு கிராமங்கள் செழிப்பான விவசாய நிலத்தை இழந்துள்ளன. இந்தப் பணிகள் முழுமையாக முடியும்போது கூடுதலாக ஏழு கிராமங்களை நர்மதா விழுங்கி இருக்கும். இங்கு வசிக்கும் ஆதிவாசிகள் தங்கள் இருப்பிடத்தை மட்டுமல்லாமல்; தங்கள் வாழ்வாதாரத்தையும் சேர்த்தே இழக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. 

அறுவடையை இழந்த விவசாயிகள்

மூழ்கிய / மூழ்கப் போகும் இந்தக் கிராமங்களில் விவசாயம் பெரும்பாலும் மழையைச் சார்ந்ததாகவே உள்ளது. தங்களது விவசாயத்துக்கு அருகில் உள்ள சர்தார் சரோவர் அணையிலிருந்து தண்ணீர் விட வேண்டும் என்று அரசிடம் பல ஆண்டுகளாக  அவர்கள் கோரி வருகின்றனர். அவர்களின் அந்தக் கோரிக்கைக்குச் செவி சாய்க்காத அரசு, இன்று இந்தச் சிலையைச் சுற்றி இருக்கும் கால்வாயை நிரப்புவதற்காக அந்த அணையிலிருந்து தண்ணிர்  திறந்துவிட்டது.

ஆதிவாசி மக்களின் மீது அக்கறையற்று, எவ்வித முன்னறிவிப்புமின்றி அணை திறந்துவிடப்பட்டதால், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடையை இழந்தனர். வீடுகளையும் கடைகளையும் இழந்த மக்கள் வேதனையுடன் போராடியபோது, அவர்கள் மீது தடியடி கட்டவிழ்த்து விடப்பட்டது. அன்று விரட்டியடிக்கப்பட்ட அந்த மக்கள், தங்கள் வசிப்படத்துக்கு வெகுதொலைவில் வலுக்கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டனர். 

இருப்பே கேள்விக்குறி

அரசின் இந்தத் திட்டத்தால் இங்கு வசிக்கும் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. சுற்றுலா மூலமாகக் கிடைக்கும் வருமானத்தின் மீதும் பெரும் நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபத்தின் மீதும் மட்டுமே குறியாக இருக்கும் அரசுக்கு, அங்கு வாழும் மக்களின் வாழ்வு மீது அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

நர்மதா மாவட்டத்தில் உள்ள 72 கிராமங்களில் வசிக்கும் 75,000 ஆதிவாசி மக்களை இந்தத் திட்டம் பாதிப்புக்கு உள்ளாக்கும். அவற்றில் 32 கிராமங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும். இந்த 72 கிராமங்களில் 19 கிராமங்களுக்கு இழப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை. மேலும், சிலையிருந்து சில கி.மீ. தொலைவில் ‘சர்தார் சரோவர் அணை’ உள்ளது. இந்த அணையினால் ஏற்கெனவே இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள், தங்கள் வசிப்பிடங்களை இழந்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சன்கேதா பகுதியில் இருந்த அரசு கூட்டுறவு சங்கம் நடத்தி வந்த சர்தார் சர்க்கரை ஆலை நிர்வாகக் கோளாறுகளால் இழுத்து மூடப்பட்டது. அந்த ஆலைக்கு 2,62,000 டன் கரும்பை இந்தப் பகுதியைச் சேர்ந்த 1,500 விவசாயிகள் அளித்துள்ளனர். அதற்கான, சுமார் 12 கோடி ரூபாய் அந்த விவசாயிகளுக்கு இன்றும் வழங்கப்படவில்லை. அதற்காகப் போராடிவரும் இந்த நிலையில், இந்தச் சிலையும் அதன் பின்னிருக்கும் அரசியலும் இந்த ஆதிவாசி மக்களின் இருப்பையே இன்று கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

ஏவப்பட்ட அடக்குமுறை

’சிலையை அமைக்க எங்கள் விவசாய நிலத்தை ஏன் கையகப்படுத்துகிறீர்கள்?’ எனக் கேட்டதற்காக அந்தச் சிலை திறப்புக்கு முந்தைய நாளே, 300-ற்கும் மேற்பட்ட ஆதிவாசி விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சிலை அமைந்துள்ள பிராந்தியத்தைச் சுற்றிவளைத்து ராணுவம் அரணாக நின்றது. இந்த அடக்குமுறையை எல்லாம் மீறியே அவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

’இந்த நிலம் மட்டும் பட்டிதார்களுக்குச் (பட்டேல் இனத்தாருக்கு) சொந்தமான நிலமாக இருந்திருந்தால், அரசு அதைத் தொடவே அஞ்சியிருக்கும். ஆதிவாசிகளான நாங்கள் பேசமாட்டோம், எதிர்க்க மாட்டோம், அடங்கி போவோம், என்ற நம்பிக்கையில் அவர்கள் எங்கள் நிலத்தை அபகரித்துள்ளார்கள். அரசுக்குக் கேட்கும்வரை, எங்கள் உடலில் உயிர் அடங்கும்வரை, எங்கள் எதிர்ப்புக் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும்’ என அங்கு வசிக்கும் முஸாஃபிர் வேதனையுடன் கூறுகிறார்.

பிரதம மந்திரி விவசாய மேம்பாட்டு நிதியின் கீழ் குஜராத் மாநில விவசாய வளர்ச்சிக்குச் கோரியிருந்த தொகையைவிட இந்தச் சிலை அமைக்க ஆன செலவு இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3,600 கோடி ரூபாயில் 40,192 ஹெக்டேர் நிலத்துக்கு நீர் பாசனம் அளித்திருக்கலாம். 162 குறு நீர் பாசனத் திட்டங்களைப் புணரமைத்து இருக்கலாம். 425 சிறு தடுப்பு அணைகளைக் கட்டியிருக்கலாம். ஆனால், மக்களின் நலன் பின்னுக்குச் சென்றுவிட்டதால், ஆதிவாசிகளின் ஜீவிதத்தின் மீது இந்தச் சிலை உயர்ந்து நிற்கிறது.

தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

மேலும்