விடைபெறும் 2018: சுற்றுச்சூழல் நிகழ்வுகள்

By செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு: 13 பேர் பலி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராகவும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் நடைபெற்றுவந்த போராட்டம் 100-வது நாளை எட்டியதால்,  பேரணியாகச் சென்று தங்கள் கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப் போராட்டக் குழுவினர் முடிவெடுத்தனர். இந்தப் பேரணிக்கு தடைவிதித்து, 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது.

ஆனாலும் தடையை மீறி மே 22 அன்று பேரணி சென்ற மக்கள் மீது, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையைத் தமிழக அரசு மே 28-ல் பிறப்பித்தது. தூத்துக்குடியில் உள்ள அந்த ஆலையைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டுமெனத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அதற்கு எதிராகத் தமிழக அரசு மேல் முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது.

பலிகொண்ட காட்டுத்தீ

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய 20 டிரெக்கிங் பயணிகள் மார்ச் 11-ல் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மைச் முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டார். குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தை அடுத்து, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. கானுலா, மலையேற்றம் செய்பவர்களும் சுற்றுலாப் பயணிகளும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

நியூட்ரினோ-அனுமதியும் தடையும்

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை உள்ளது. இம்மலையில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக அம்பரப்பர் மலையைக் குடைந்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என எதிர்ப்பு உருவானது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தத் திட்டத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கியது. இதற்குத் தடை விதிக்க தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. அதேநேரம், இத்திட்டத்துக்குத் தேசிய வனவிலங்கு வாரிய அனுமதியைப் பெறும்வரை தேனியில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று தீர்ப்பாயம் தடை விதித்தது.

பசுமை வழிச் சாலை?

சென்னை - சேலம் இடையே 277 கி.மீ. தொலைவுக்கு எட்டுவழிச் சாலை ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான திட்டப்பணிகள் ஜூன் 26-ல் தொடங்கின. இந்த எட்டுவழிச் சாலைத் திட்டம் திடீரென மாற்றப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் இத்திட்டத்தில் மாற்றம் செய்து மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியது.

கஜா புயல் பேரழிவு

வங்கக் கடலில் உருவான ‘கஜா’ புயல், வேதாரண்யம் அருகே பலத்த சூறைக்காற்றுடன் நவ. 16-ல் கரையைக் கடந்தது. புயலின் கோரத் தாண்டவத்தால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கஜா புயலின் தாக்கத்தால் மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், வேதாரண்யம், புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. கஜா புயலால் 45 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு

நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. அத்துடன் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்ற நேரக் கட்டுப்பாட்டையும் விதித்தது.

பிளாஸ்டிக் தடை

2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட உள்ளது. பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, மக்காத பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், பயன்படுத்துதல் ஆகியவை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்யப்பட்டது.

காணாமல் போகும் நிலத்தடி நீர்

‘நிதி ஆயோக்’ அமைப்பு வெளியிட்ட ‘கூட்டு நீர் மேலாண்மைக் குறியீட்’டில் (Composite Water Management Index). நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்தது. பஞ்சாப் 2-ம் இடத்திலும் ஆந்திரா 3-ம் இடத்திலும் உள்ளன. கடந்த 2007 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலத்தில் தமிழகத்தில் 87 சதவீதக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. அதேபோல் சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. நாட்டின் தண்ணீர் பிரச்சினை இதே விகிதத்தில் தொடர்ந்தால் 2030-ல் நாட்டில் 40 சதவீதம் பேருக்குத் தண்ணீரே கிடைக்காது.

விவசாயிகள் போராட்டம்

நாடாளுமன்றத்தில் விவசாயப் பிரச்சினைகளைப் பேசுவதற்குச் சிறப்பு அமர்வைக் கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர்.

கேரள வெள்ளம்

கேரளத்தில் ஆகஸ்ட் 8–லிருந்து தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்துவந்தது. இதனால் 40 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும்  திறக்கப்பட்டன. இந்த வெள்ளத்தில் 29 பேர் பலியாயினர், 54,000 பேர் வீடு இழந்தனர். வட கேரளத்தின் ஏழு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

மேலும்