பஞ்சத்தை விளைவிக்கக் கூடிய படைப்புழுக்கள்

By ரமேஷ் கருப்பையா

மக்காச்சோளம் எல்லாம் குதறப்பட்டு, பயிர்க்களமே படுகளமாகியிருக்கிறது. மக்காச்சோளத்தைத் தாக்கியிருப்பது, ஏதோவொரு குருத்துப்புழு, தண்டுத் துளைப்பான் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். அதனால் பூச்சிக்கொல்லியின் மூலம் அதை விரட்டிவிடலாம் என்று அஜாக்கிரதையாக இருந்தனர். ஆனால், ஆப்பிரிக்க நாடுகளில் பேரிழப்பை ஏற்படுத்தி, ஆசிய கண்டத்தில் நுழைந்திருக்கும் அமெரிக்கக் கண்டத்து படைப்புழு அது என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

வேளாண் ஆய்வாளர்களே தற்போதுதான் இந்தப் படைப்புழுக்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவை பல மைல் தூரம் பயணித்து, செல்லும் வழியெல்லாம். சேதாரம் ஏற்படுத்திச் செல்பவை.

பயிர்த்தொழிலில் பேரிடர்

குறிப்பாக, மானாவாரிப் பயிர்களில் ஒன்றான மக்காச்சோளம் பயிரிட்ட பகுதிகளில் இந்திய அளவில் ஒரு பூச்சியினம் பேரிடர் தாக்குதலைச் சத்தமின்றி நிகழ்த்திவிட்டது. இப்படைப்புழுவின் தாக்கம் என்னமாதிரியான விளைவுகளை ஒட்டுமொத்த பயிர்த்தொழிலில், எதிர்காலத்தில் ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை.

அமெரிக்காவின் வெப்பமண்டல, மித வெப்பமண்டலப் பகுதியைச் சேர்ந்த பூச்சியினம் ஃபால் ஆர்மிவோர்ம்

(Fall Armyworm) - (FAW). இப்பூச்சியின் அறிவியல் பெயர் Spodoptera frugiperda. அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இப்பூச்சியினம் 2016-ன் தொடக்கத்தில் ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது. அதே ஆண்டில் ஆப்ரிக்கக் கண்டத்தின் 44 நாடுகளில் பரவி மக்காச்சோளப் பயிரில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது இந்தியாவில் 2018-ல் மக்காச்சோளப் பயிரில் ஏற்படுத்தி இருக்கும் விளைவுகள் வாயிலாக இந்தியாவில் கண்டறியப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.மேலும் பல நாடுகளுக்குப் பரவ வாய்ப்பு இருக்கிறது.

மக்காச்சோளப் பயிரை முதன்மையாகத் தாக்கும் இவை, எண்பதுக்கும் மேலான பயிர்களை நெல், கரும்பு, சோளம், நிலக்கடலை, பல தானியப்பயிர்கள், காய்கறிகள், பருத்தி, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட தாக்கக் கூடியவை.

மாற்றாக வந்த மக்காச்சோளம்

கடந்த காலத்தில் ஏற்பட்ட, படிப்பினைகளில் இருந்தும், நிலையற்ற பருவமழைப் பொழிவாலும், குறைந்த காலத்தில், நல்ல மகசூலை வழங்கிய வீரிய ஓட்டு ரக மக்காச்சோளப் பயிருக்கு மானாவாரி உழவர்கள் மாறினர்.

கடந்த ஆண்டு பருத்தி பயிரிட்ட பலரும், மக்காச்சோளப் பயிருக்கு மாறி இருக்கின்றனர். பருத்தியை ஒப்பிடும்போது இதில் செலவு குறைவு.

பருத்தியைப் போன்று பூச்சிக்கொல்லிகள் தேவையில்லை. இரண்டு முறை உரம் இட்டுக் களை பறித்தால் போதுமானது. 90 முதல் 110 நாட்களில் இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்யலாம். நிலத்துக்கே வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வர். வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களில் மக்காச்சோளப் பயிர்களுக்கு முன்னுரிமை அளித்து பயிர்க் காப்பீட்டுத் தொகையும் அளிக்கப்பட்டது.

கம்பு, சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் இழுபறிநிலை ஏற்பட்டது. இதனாலும் மக்காச்சோளப் பயிருக்கு மாறினர். ஆனால், இன்று அனைத்தையும் இழந்து நிற்கின்ற நிலையாகிவிட்டது.

 “விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இவற்றை எதிர் கொள்ள முடியும். தாக்குதல் நடந்த பிறகு தடுப்பதைவிட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது. இந்தப் புழுக்களின் வாழ்நாள் முப்பது நாட்கள்தாம். இது, தாய் அந்துப்பூச்சியாக மாறும் போது, 500 முதல் 2,000 முட்டைகள்வரை இடும். சில நாட்களில் ஆயிரக்கணக்கில் பெருகிவிடும்.

இந்த அந்துப்பூச்சி, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பறக்கும் ஆற்றல் வாய்ந்தது” என இந்தப் படைப்புழுக்களின் இயல்புகளைக் குறிப்பிடுகிறார் தமிழக வேளாண்மைத்துறை உதவி இயக்குநரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம்.

இந்தப் புழுவைப் பூச்சிக்கொல்லி களால் அழிக்க முடியாது எனச் சொன்ன அவர், இதைக் கட்டுப்படுத்த சில யோசனைகளையும் சொன்னார்: “இது மக்காச்சோளத்தின் குருத்துப்பகுதிக்குள் சென்று, தண்டைத் தின்று தின்று கழிவுகளை வெளியே தள்ளும். அந்தக் கழிவுகள், தண்டின் மேல் பக்கம் அடைத்துக்கொள்ளும். புழு உள்ளே பாதுகாப்பாக இருக்கும்.

புழு இருக்கும் ஓட்டைகள் அடைத்துக் கொள்வதால், பூச்சிக்கொல்லி தெளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையில் மட்டுமே இதனைக் கட்டுப்படுத்த முடியும். மக்காச்சோளம், சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ள நிலங்களின் வரப்புகளில்,

கோ.எப்.எஸ் 29 தீவன சோளத்தையும், கம்பு நேப்பியர் புல்லையும் பயிரிட வேண்டும். இதன்மூலம் வயலில் இருக்கும் முதன்மைப் பயிரில் தாய் அந்துப்பூச்சி முட்டையிடுவதைத் தவிர்க்கலாம். அத்துடன், மஞ்சள்நிறப் பூக்கள் கொண்ட செடிகள், தட்டைப் பயறு, ஆமணக்கு போன்ற பயிர்கள் வரப்புகளில் இருந்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.’’

வெள்ளாமை இல்லாத வேளாண்மை

படைப்புழுவின் தாக்குதலால் பாதிப்படைந்த மக்காச்சோளப் பயிர்களை ஏந்திக்கொண்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களையும் நோக்கி விவசாயிகள் முற்றுகையிடுகிறார்கள்.

தற்போது பயிர்கள் முழுவதும் புழுக்கள் சூழ்ந்துள்ளதால் மாடுகளுக்குத் தீவனமாகக்கூட இதைப் போட முடியாது. முற்றிலும் அழிப்பது, தீயிட்டு எரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. மக்காச் சோளப் பயிர் முடிவுக்கு வந்த பின்னர் அருகில் உள்ள கம்பு, சோளம் போன்ற பயிர்களிலும் ஊடுருவித் தாக்குதலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

மாற வேண்டிய நேரம்

ஓரினப்பயிராக பயிரிடும்போது, ஒரே நேரத்தில் மிக எளிதாக பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை தவிர்க்க முடியாததாகிறது. ஒருங்கிணைந்த பயிர்முறையில் பல்வேறு பயிர்களைப் பயிரிடும்போது, பூச்சித்தாக்குதல் கட்டுக்குள்வருகிறது. பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையைப் பின்பற்றினால், பாதிப்பும் இழப்பும் இல்லாமல் விவசாயிகள் எளிதில் லாபம் ஈட்ட முடியும்.

உணவுப் பயிர்களுக்கே முன்னுரிமை

உணவு உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு, அனைவருக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு எனக் கூறிக்கொண்டு, வணிகப் பயிர்களுக்கே முன்னுரிமை அளிப்பது மிகப் பெரிய முரண்பாடு. குறிப்பாக, உள்ளூர் அளவில் வரகு, சோளம் போன்ற பயிர்கள் பயிரிடும் வழக்கு ஒழிந்து விட்டது. இவற்றைப் பயிரிட மக்களை ஊக்குவிக்க வேண்டும். வணிகப் பயிர்களுக்கு வழங்கப்படும், அனைத்து உதவிகளும், உரிய விலையும் வழங்கப்பட வேண்டும்.

தப்பித்துக்கொள்ளும் தனியார் நிறுவனங்கள்

விதைகளுக்கான முற்றுரிமை முழுமையாகத் தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் விதைகளை விவசாயிகளுக்கு விற்றுவிட்டனர். இடுபொருட்களையும்,

பூச்சிக்கொல்லிகளையும் விற்றனர். தங்களுக்கு உரிய வருமானத்தை ஈட்டியதும் விலகிக்கொண்டன. இப்போது முழுமையான இழப்பில் இருக்கும் விவசாயிகள் அரசாங்கத்திடம் முறையிட்டு நிற்கின்றனர். இது போன்ற நிலைகளில் தனியார் நிறுவனங்களுக்கும் பொறுப்பு ஏற்கும் நிலையை உருவாக்க வேண்டும். விதைகள் எப்போதும் மக்களுக்கும் அரசுக்கும் உரிமையுடையதாக இருக்க வேண்டும்.

வேண்டாத வெளிநாட்டு விருந்தாளி

படைப்புழுத் தாக்குதல் என்பது நமது நாட்டுக்கு ஒன்றும் புதியது அல்ல. ஓர் இரவுக்குள் படையாக வந்து நெல், கடலை, எள், வெற்றிலை ஆகியவற்றைத் தாக்கிவிடும் பூச்சிகளை ‘படைப்புழுத் தாக்குதல்’ என அழைப்பது உண்டு. இவை நம்நாட்டுப் பூச்சி வகை. இவை குறைந்த தூரமே இடப்பெயர்ச்சி அடையும். இவற்றை எளியமுறையில் கட்டுப்படுத்திவிட முடியும்.

இது போன்ற படைப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வரப்பு ஓரத்தில் நீண்ட வாய்க்கால் போன்ற குழியை வெட்டி வைத்தால், புழுக்கள் இதில் விழுந்துவிடும். இவற்றைச் சாம்பல் நிரம்பிய கூடைகளில் சேகரித்து அழித்து விடுவர். தற்போது மக்காசோளத்தில் தாக்கியிருப்பது வெளிநாட்டுப் படைப்புழுக்கள். இவை நீண்ட தொலைவு ஓர் இரவுக்குள் இடப்பெயர்ச்சி அடையும்.

பல நூறு முட்டைகளை உருவாக்கிவிடக் கூடியவை. ஆப்ரிக்காவில் பஞ்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இதன் தாக்குதல் மக்காசோளத்தில் நிகழ்ந்துள்ளது என்று உள்நாட்டு, வெளிநாட்டு படைப்புழுத் தாக்குதல் குறித்து தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் உதவி இயக்குநரும் விவசாயியுமான ச.அசன்முகம்மது .

பாதிக்கப்பட்ட விவசாயிகள்

பொறியியல் படித்து வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுவரும் பிரகாஷ், மூன்று ஏக்கரில் மக்காச்சோளம் விதைத்து உள்ளார். நம்பிக்கையோடு களமிறங்கியவர் ஒவ்வொரு நாளும் புழுக்கள் பல்கிப் பெருகி சல்லடையாகத் துளைத்து நிற்பதைக் கண்டு திகைத்து உள்ளார். ஒரு குருத்தை ஒடித்துப் பார்த்தால், மற்றவற்றில் இருக்காது என்று எண்ணி நம்பிக்கையோடு உடைத்துப் பார்த்தால் அனைத்தும் துளைக்கப்பட்டு இருக்கிறது.

நுனிக் குருத்தோடு முடிந்துவிடும் எனப் பார்த்தால், தற்போது மக்காச்சோளக் கதிரையும் மேய்ந்துகொண்டே இருக்கின்றன படைப்புழுக்கள்.

பெரம்பலூர் மாவட்டம் மக்காச்சோளச் சாகுபடியில் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தமிழக அளவில் முதலிடத்தைப் பெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் கடந்த 2014-2015-ம் ஆண்டில் வீரிய ரக மக்காச்சோளத்தில் அதிக மகசூல் ஒரு ஏக்கருக்கு 51 மூட்டை என்று ஒரு ஹெக்டேரில் 143 மூட்டைகள் அறுவடை செய்தவர் பூங்கோதை.

மத்திய அரசின் ‘க்ருஷி கர்மான்’ எனப்படும் தனிநபர் சாதனையாளர் விருதை பிரதமர் கையால் பெற்ற பெருமைக்குரியவர் பூங்கோதை. இவரது பயிரும் படைப்புழுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பல மூட்டைகள் அறுவடை செய்து பாராட்டு பெற்றவர், இன்று சில மூட்டைகளாவது தேறுமா என்று சந்தேகத்தில் உள்ளார்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: mazhai5678@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

23 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

மேலும்