‘அமைதிப் பள்ளத்தாக்கு: ஒரு மழைக்காட்டின் கதை’ என்ற ஆவணப்படத்தை 1992-ல் பெங்களுரில் பார்த்தபோது அசந்துவிட்டேன். சென்னை இளைஞர் ஒருவரின் முதல் முயற்சி அது. மழைக்காட்டில்தான் நம் நதிகள் யாவும் பிறக்கின்றன. மழைக்காடு பல அரிய தாவரங்கள், உயிரிகள் ஆகியவற்றின் வாழ்விடம்.
அதில் ஒன்று வான்கோழி அளவான இருவாட்சி எனும் பறவை. இனப்பெருக்கக் காலத்தில் பெட்டை ஒரு மரப்பொந்தின் உள்ளே அமர்ந்துகொண்டு முட்டையிடும். ஆண் பறவை, பெட்டைக்கும் குஞ்சுகளுக்கும் இரை கொண்டு வந்து கொடுக்கும். இந்த அரிய காட்சி முதன்முறையாகத் திரையில் அந்தப் படத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இவர் இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தபோது வெகு சிலரே காட்டுயிர் பற்றிய படங்களை எடுக்கத் துணிந்திருந்தனர். சினிமா எடுப்பதற்குத் தேவையான உபகரணங்கள் இந்தியாவில் கிடைப்பது அரிதாக இருந்த காலம். இவரது முதல் படமே தேசிய விருது பெற்றது!
அந்தப் படத்தை எடுத்த சேகர் தத்தாத்ரி இன்று, பன்னாட்டளவில் புகழ்பெற்ற இயற்கை சார்ந்த ஆவணப் படங்களை எடுப்பவராக வளர்ந்துவிட்டார். பல படைப்புகளைத் தொடர்ந்து, ரோலக்ஸ் விருது உட்படப் பல பன்னாட்டு விருதுகள் இவரைத் தேடி வந்தன. இந்திய தேசிய விருதை நான்கு முறை பெற்றார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அவருக்கு 8 மாதப் பயிற்சி எடுக்க ஒரு நிதி நல்கை கொடுத்தது. அங்கே பல காட்டுயிர் பட விற்பன்னர்களைச் சந்தித்தார். காட்டுயிர் படம் எடுப்பதில் உள்ள நெளிவு சுழிவுகளை முறைப்படி கற்றார். படமெடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய ஆய்வு, திரைக்கதையை எழுதுவது போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். நேஷனல் ஜியாக்ராஃபிக், டிஸ்கவரி சேனல் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் இவரது படங்களை ஒளிபரப்பின.
நான்கு அம்சங்கள்
‘காட்டுயிர் சார்ந்த படங்களுக்குக் கடவுள்தான் இயக்குநர்’ என்றார் ஒரு படைப்பாளி. ஏனென்றால், படமெடுப்பவருக்கு நடிகர்கள் மேல், அதாவது காட்டுயிர்கள் மேல் எந்த விதக் கட்டுப்பாடும் கிடையாது. கிடைத்த காட்சியைப் படமாக்க வேண்டும்.
இதனால் எண்மயமாக்கலுக்கு (digitalization) முந்தைய காலத்தில், காட்டுயிர் படமெடுக்க ஃபிலிம் எக்கச்சக்கமாகச் செலவாகும். அவற்றைத் திரையிடுவதற்கு வாய்ப்புகளும் குறைவு. 16mm புரொஜக்டர் இருப்பவர்கள் படத்தைப் போட்டுக் காட்டலாம். இந்தப் பின்புலத்தில்தான் சேகர், தன் படங்களை எடுத்தார்.
காட்டுயிர் படங்களுக்கு நான்கு அம்சங்கள் உண்டு. முதலாவது, உயிரிகளை அதனதன் உறைவிடத்தில் பார்வையாளர்களுக்குக் காட்டுவது. மட்டுமல்லாமல், அந்த வாழிடத்துக்கும் அந்தப் பிராணிக்கும் உள்ள நெருங்கிய பிணைப்பைப் பற்றிப் பேசுவது. இரண்டாவதாக, காட்டுயிர் மேலாண்மையில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளைத் திரையில் காட்சிப்படுத்தலாம். இவரது படமொன்றில் குடகு காபித் தோட்டமொன்றில் யானைகள் மேயும் காட்சி, மனிதர் - விலங்கு எதிர்கொள்ளல் போன்றவை காட்டப்படுகின்றன.
மூன்றாவதாக, காட்டுயிர்களின் வாழிடத்தைப் பதிவு செய்கின்றன. இது முக்கியம். ஏனென்றால், இவ்வுலகில் காடுகளும் ஏரிகளும் வேகமாக அழிந்து கொண்டிருக்கின்றன. நான்காவதாக, இதுவரை யாரும் பார்த்திராத ஒரு விலங்கின் நடவடிக்கையைப் படமெடுப்பவர் பதிவுசெய்ய முடியும். தனது ‘நாகர்ஹொளே’ என்ற படத்தில் செந்நாய்கள் கூட்டம் ஒரு புள்ளிமானைச் சூழ்ந்து இரையாக்குவதை சேகர் படமாக்கியிருந்தார்.
இயற்கையைப் பற்றிப் படமெடுப்பவருக்கு நல்ல உடல் உறுதி வேண்டும். கேமராவைத் தூக்கிக்கொண்டு ஓட வேண்டி வரும். பல ஆபத்தான தருணங்களைச் சந்திக்க வேண்டி வரும். காட்டுயிர் படமெடுப்பவர் சிலர், வேலை செய்யும்போது உயிரிழந்திருக்கின்றனர். அது மட்டுமல்ல; காட்டின் இயல்புகள் பற்றியும், விலங்குகளின் நடவடிக்கை பற்றியும், உடல்மொழி பற்றியும் நல்ல பட்டறிவு இருந்தால்தான் இத்துறையில் இறங்கவே முடியும். ஒரு கமாண்டோ போலத் தனியாக இயங்கும் திறமை வேண்டும்.
இருவாட்சி தனது பெட்டைக்கு இரையூட்டும் காட்சியை எடுக்க சேகர், ஒரு உயரமான மரத்தில் ஏறி மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்க வேண்டியிருந்தது. காட்டுயிர் பற்றித் திரைப்படமெடுப்பவருக்கே இருக்க வேண்டிய ஒரு முக்கியப் பண்பு என்னவென்று நான் அவரைக் கேட்டபோது ‘பொறுமை’ என்றார். சிறுத்தை ஒன்றைப் படமாக்க ஒரு குட்டையருகே, மறைப்பு ஒன்றைக் கட்டி அதில் பல நாட்கள் உட்கார்ந்திருந்ததை நினைவு கூர்ந்தார்.
குறையும் காட்டுயிர் படங்கள்
வாங்கக்கூடிய விருதுகள் எல்லாவற்றையும் பெற்றபின், இவர் இயற்கை சார்ந்த படங்கள் மூலம் சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட முடிவெடுத்தார். கர்நாடகாவில் குதிரைமுக் மலைப்பகுதியில் சுரங்கம் போட்டு இரும்புக் கனிமம் எடுக்கும் திட்டத்தால், காடுகள், பல அரிய உயிர்கள் அழியும் ஆபத்தை ‘மைண்ட்லெஸ் மைனிங்’ (Mindless Mining) என்ற ஒரு குறும்படம் மூலம் சேகர் விளக்கினார். இது அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் திரையிடப்பட்டது. அது மட்டுமல்ல; உச்ச நீதிமன்றத்தில் அப்படம் ஒரு சாட்சியாகக் காட்டப்பட்டபின், அத்திட்டம் கைவிடப்பட்டது.
அதேபோல ஒடிசாவிலுள்ள சிலிகா நீர்நிலையில் வாழும் ஆற்று ஓங்கிலை (Irawady dolphin) ஒரு குறும்படத்தில் காட்டினார். பார்வையற்ற இந்த விலங்கு ஏறக்குறைய அற்றுப்போகும் நிலையிலுள்ளது. இந்தப் படத்தால் சிலிகா நீர்நிலைக்கே ஒரு புதிய கவனிப்பு கிடைத்தது. நாகாலாந்துக்கு வலசை வரும் அமூர் வல்லூறு நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதைத் தடுக்கும் முயற்சிக்குக் கைகொடுக்க அருமையான ஆவணப் படம் ஒன்றை உருவாக்கினார்.
வேங்கைப்புலியைப் பாதுகாக்க ‘தி ட்ரூத் அபெளட் தி டைகர்’ (The Truth about the Tiger) என்ற ஒரு படத்தை எடுத்து, அதன் 35 ஆயிரம் குறுந்தட்டுகளை இலவசமாகப் பள்ளிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் கொடுத்தார்.
திரைப்படமெடுப்பது எண்மயமாக்கப் பட்டுவிட்டாலும், கேமராக்களும் லென்ஸுகளும் நம் நாட்டிலேயே கிடைத்தாலும், பல புதிய பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன என்கிறார். முதலில் காட்டில் படமெடுக்க அனுமதி கிடைப்பது மிகவும் கடினம். அதற்குச் செலுத்த வேண்டிய தொகையும் அதிகம்.
ஒரு நாளைக்கு 30,000 ரூபாய். அது மட்டுமல்ல; இந்த அனுமதியும் சுற்றுலாப் பயணிகள் அனுதிக்கப்படும் இடங்களுக்கு மட்டுமே தரப்படுகிறது. ஆப்பிரிக்காவைப் போலல்லாமல் இந்தியக் காடுகளில் காட்டுயிர்களைக் காண்பதே சிரமம். இப்போது புரிகிறதா ஏன் இந்தியக் காட்டுயிர் பற்றிப் படங்கள் வெகு அரிதாகவே நேஷனல் ஜியாகிரஃபிக் போன்ற தொலைக்காட்சிகளில் காட்டப்படுகின்றன என்று..!
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com | படம்: நித்திலா பாஸ்கரன்
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
23 days ago
சுற்றுச்சூழல்
24 days ago
சுற்றுச்சூழல்
24 days ago
சுற்றுச்சூழல்
24 days ago