யாருக்கானது இந்தக் கொலை?

By ந.வினோத் குமார்

இதுவரை, ‘இந்திய விவசாயிகளின் தற்கொலைத் தலைநகரம்’ என்ற ‘பெருமை’க்கு ஆளாகி வந்த யவத்மால் மாவட்டத்துக்கு, இப்போது இன்னொரு ‘பெருமை’ கிடைத்திருக்கிறது. இங்குதான் அவ்னி கொல்லப்பட்டாள். ஆம்… இன்னொரு நாள், இன்னும் ஒரு புலி மனிதர்களின் பேராசைக்கு இரையாகியிருக்கிறது. அவ்னி, நம் நாட்டில் புலிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு இன்னொரு சான்று!

மகாராஷ்டிர மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்கவாடா எனும் காட்டுக்குள் தன் இரண்டு குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது அவ்னி எனும் பெண் புலி. கடந்த இரண்டு ஆண்டுகளில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 13 நபர்கள், அந்தப் புலியால் கொல்லப்பட்டார்கள் என்பது அதன் மீதான குற்றச்சாட்டு.

உண்மையில், அந்த 13 பேரில் இதுவரை மூவரின் சடலங்களின் மீது மட்டுமே டி.என்.ஏ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில், இருவர் மட்டுமே புலியை எதிர்கொண்டு இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இருவருமே, அவ்னியால்தான் மரணமடைந்தார்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

இப்படியான ஒரு சூழலில்தான், கடந்த 2-ம் தேதி மகாராஷ்டிர அரசு அனுமதியுடன் அவ்னி கொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு, அரசு சொன்ன காரணம்… ‘அவ்னி ஆட்கொல்லியாக (மேன் ஈட்டர்) மாறிவிட்டது’ என்பது. ‘மேன் ஈட்டர்’ என்பதே, தவறான சொல்லாடல்தான். அது ஆங்கிலேயர் கால, சொற்பிரயோகம். புலிகள் எப்போதும் மனிதர்களை இரையாகப் பார்ப்பதில்லை. மாறாக, ‘இரைகொல்லியாக’ (ப்ரிடேட்டர்) பார்க்கின்றன. எனவே, ‘புலிகள் மனிதர்களைக் கொன்று தின்றுவிட்டன’ என்று தவறாகப் பொருள் கொள்ளும்படியான ‘மேன் ஈட்டர்’ என்ற பதம் முற்றிலும் தவறானது!

வணிகத்துக்காகக் கொலை..?

இது இப்படியிருக்க, சில தனியார் நிறுவனங்களின் வியாபாரத்தைக் காப்பாற்றவே அந்தப் புலி கொல்லப்பட்டது என்ற தகவலும் வரத் தொடங்கியிருக்கிறது.

இங்குதான் அனில் அம்பானி, தன் சிமெண்ட் நிறுவனத்தைத் தொடங்கத் திட்டமிட்டதாகத் தெரிகிறது. வெறும் 40 கோடி ரூபாய்க்கு, இந்த வனத்தின் சுமார் 500 ஹெக்டேர் அம்பானியின் நிறுவனத்துக்குத் தாரை வார்க்கப்பட்டது. சிறிது காலம் கழித்து, இன்னும் தொடங்கப்படாத அந்த சிமெண்ட் ஆலை, வேறொரு தனியார் நிறுவனத்துக்குச் சுமார் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், அதில் அந்த 500 ஹெக்டேர்களின் உண்மையான மதிப்பு எவ்வளவு இருக்கும்?

மீறப்பட்ட விதிகள்

காடுகளின் பரப்பளவு குறைவது, வயது மூப்பின் காரணமாக உடல் நலிவடைந்து இரை தேட முடியாமல் போவது, காட்டில் போதுமான அளவு இரை இல்லாதது போன்ற காரணங்களால், புலிகள், காட்டோரங்களில் உள்ள மக்களின் வசிப்பிடங்களுக்குள் வந்து ஆடு, மாடு போன்ற கால்நடைகளைக் கொன்று புசிக்கின்றன. இதில் புலியின் தவறு எதுவும் இல்லை. காடுகளுக்குள் வீடுகளைக் கட்டிக் குடியிருப்பது மனிதர்களின் தவறு.

புலிகள், மனிதர்களின் இருப்பிடங்களுக்கு வந்து மனிதர்களைக் கொல்லும்போதுதான், அவற்றை ‘ஆட்கொல்லி’ என்று அடையாளப்படுத்த வேண்டும் என்பது விதி. அவ்னி விஷயத்தில், மனிதர்கள்தாம் புலிகளின் வாழிடமான காட்டுக்குள் வந்து, ஆடு, மாடுகளை மேய்த்து வந்திருக்கிறார்கள்.

அவ்வாறு, மனிதர்கள் காட்டுக்குள் வரும்போது, எதிர்பாராதவிதமாக, மனிதர் – விலங்கு எதிர்கொள்ளல் நிகழ்கிறது. பெரும்பாலான நேரம், அப்படியான எதிர்கொள்ளலின்போது, மனிதர்கள்தாம் முதலில் விலங்குகள் மீது தாக்குதலை மேற்கொள்கிறார்கள். தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விலங்குகள் திரும்பித் தாக்குகின்றன. அதுபோன்ற தருணங்களில், இரண்டு புறங்களிலும் உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குறிப்பிட்ட ஒரு பகுதியில், குறிப்பிட்ட ஒரு விலங்கால் மனித உயிரிழப்புகள் அதிகரிக்கும்போது, முடிந்த அளவு பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர் துணையுடன் பகல் நேரத்தில், அந்த விலங்கின் மீது மயக்க மருந்து செலுத்தி, உயிருடன் பிடித்து வேறு பகுதிக்கோ விலங்குக்காட்சி சாலைகளுக்கோ கொண்டு செல்லப்படும்.

உயிருடன் பிடிக்க முடியாமலோ மயக்க மருந்து செலுத்த முடியாமலோ வேறு பகுதிக்குக் கொண்டு செல்ல முடியாமலோ இருக்கும்போது மட்டுமே, இறுதித் தேர்வாகவே விலங்குகளைச் சுட்டுக்கொல்லும் நிகழ்வுகள் நடைமுறையில் இருக்கின்றன.

ஆனால், அவ்னியின் விஷயத்தில் மேற்கண்ட விதிகள் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. நள்ளிரவில், கால்நடை மருத்துவர் துணை இல்லாமல், ஆனால் மயக்க மருந்து இருந்தும், தற்காப்பு நடவடிக்கையாக அந்தப் புலி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், புலியைச் சுடும் அனுமதி ஷஃபத் அலி கான் என்பவருக்குத்தான் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது மகன் அஸ்கர் அலி கான், அந்தப் புலியைச் சுட்டிருக்கிறார். காட்டுயிர்களை வேட்டையாடியது, சமூக விரோதிகளுக்கு ஆயுதம் வழங்கியது என ஷஃபத் அலி கான் மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படியான ஒருவருக்குப் புலியைச் சுடும் அனுமதி வழங்கப்பட்டது எப்படி?

ஜிப்ஸி ஜீப்பில் இருந்தபோது, தங்களைத் தாக்க, புலி பாய்ந்து வந்ததாகவும், அதை 8 முதல் 10 மீட்டர் இடைவெளியில் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வளவு குறைந்த தூரத்தில் புலி இருக்கும்போது, அதைச் சுலபமாக மயக்க மருந்து செலுத்தி, உயிருடனேயே பிடித்திருக்க முடியும் என்கிறார்கள் காட்டுயிர்ப் பாதுகாவலர்கள். அப்படியென்றால், அவ்னி கொல்லப்பட்ட விஷயத்தில் சந்தேகம் எழுவது இயற்கையே!

சந்தி சிரிக்கும் அரசியல்

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும்போதும் சரி… பந்தர்கவாடா வனத்தைத் தனியார் நிறுவனங்களுக்குக் கைமாற்றி காசு பார்ப்பதிலேயே குறியாக இருந்திருக்கின்றன.

காங்கிரஸ் ஆட்சியின்போது அது முடியாமல் போக, பா.ஜ.க. அந்தப் பலனை அறுவடை செய்திருக்கிறது. அதனால்தான் என்னவோ, மும்பை உயர் நீதிமன்றமும், பின்னர் உச்ச நீதிமன்றமும் ‘புலியைக் கொல்வதற்கு முன்பு, அதை மயக்க மருந்து செலுத்தி உயிருடன் பிடிக்கப் பாருங்கள்’ என்று உத்தரவிட்டு இரண்டு மாதங்களில் ஒரு முறைகூட, மயக்க மருந்து செலுத்த எந்த ஒரு முயற்சியையும், மகாராஷ்டிர மாநில வனத்துறை எடுக்கவில்லை.

அந்தத் துறையின் அமைச்சர் சுதிர் முங்கந்திவார், புலியைக் கொல்வதிலேயே குறியாக இருந்திருக்கிறார். அப்போதுதானே, அந்தக் காட்டை விலை பேச முடியும்? தன் செய்கைக்கு, இப்போது, தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர், மேனகா காந்தியிடமிருந்து விமர்சனத்தையும் அவர்  எதிர்கொண்டிருக்கிறார்.

‘புலிகள் பாதுகாப்பு என்பது புலிகள் காப்பகங்களில் மட்டுமே சாத்தியம். பந்தர்கவாடா போன்ற இதர காடுகளில் அது சாத்தியமில்லை. எனவே, புலியைச் சுட்டுக்கொன்றது சரிதான்’ என்ற கருத்துகளும் சொல்லப்படுகின்றன. ஒரு வாதத்துக்காக, அது சரி என்று கொண்டாலுமே, விலங்குகளைக் கொல்வதற்கென்று ஏற்படுத்தப்பட்ட விதிகளை மீறுவது எப்படி சரியாகும்?

இதுபோன்ற நிகழ்வுகளில், விலங்குகளைச் சுட்டுக்கொல்வதில் அர்த்தமே இல்லை என்றும், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் காட்டுயிர் ஆர்வலர்கள் பல காலமாகச் சொல்லி வருகிறார்கள். ஆனால், அரசுகள் அதற்குச் செவிமடுத்ததாகத் தெரியவில்லை. பாவம், புலிகளுக்கு ‘இது மனிதர்கள் நடமாடும் பகுதி’ என்ற அறிவையாவது இயற்கை கொடுத்திருக்கலாம்!

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

மேலும்