வானகமே இளவெயிலே மரச்செறிவே 15: மாய மலரைத் தேடி...

By சு.தியடோர் பாஸ்கரன்

இமயமலைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்குமான உயிரியல் பிணைப்பு ஒன்று இன்றும் அறிவியலாளர்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறது. அங்கிருக்கும் சில காட்டுயிர்கள் இங்குள்ள மலைகளில் உள்ளன. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா?

இடையில் உள்ள 2,500 கிமீ பரப்பில் இந்த உயிரினங்கள் ஏதும் இல்லை. எடுத்துக்காட்டாக வரையாடு, கரும் வெருகு, இருவாட்சிப் பறவை, ரோடோடென்ரான் மரம் முதலியவை. இதில் ஒன்றுதான் காலணி ஆர்கிட். ஒரு காலணி வடிவில் இருக்கும் இந்த இனத்தில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் ‘டுரூரி ஆர்கிட்’ (Paphiopedilum druryi). தென்னிந்தியாவில் உள்ள ஒரே காலணி ஆர்கிட் இது!

நான் ஷில்லாங்கில் வசித்தபோது  ஒரு தாவரவியலாளர், இந்த ஆர்கிட்டைப் பற்றிச் சொன்னார். இது அரிதாகிக்கொண்டே வருகிறது என்றும் அதைக் குற்றாலத்தில் தேடினால் காண முடியும் என்றும் கூறினார். 1974-ல் இதைத் தேடி குற்றாலத்துக்குச் சென்றேன். போவதற்கு முன், கோயம்புத்தூர் தாவரவியல் மதிப்பாய்வு மையத்தில் (Botanical Survey of India) பதப்படுத்தி வைத்திருக்கும் மலருடன் கூடிய இந்தச் செடியைப் பார்த்துக்கொண்டேன். அடையாளம் கண்டுகொள்ள உதவும் அல்லவா?

டுரூரி காட்டிய ‘டுரூரி’

மலர்ந்த பின் பல நாட்கள் வாடாமல் இருக்கும் தன்மைகொண்ட இந்த ஆர்கிட் தாவரம், உலகின் எல்லா வகையான வாழிடங்களிலும் இருக்கிறது.  பல ஆர்கிடுகள், மரத்தைத் தொற்றிக்கொண்டு கொடிபோல் வளரும். சில வகை, தரையில் இருக்கும். இதுவரை 28 ஆயிரம் வகை ஆர்கிட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அருவிகளின் ஓரங்களில் நீர்ச்சாரலிடையே பூக்கும் ஆர்கிட்,  வெப்பக் காடுகளில் உள்ள ஆர்கிட் எனப் பல வகை உண்டு.

கோவையில் மருதமலையில் ஏறி, அதைத் தாண்டி சில கிலோ மீட்டர் ஒற்றையடிப் பாதை ஒன்றில், காட்டின் குறுக்கே அனுபாவியை நோக்கி நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது, தரையில் வளரும் ஒளிர் மஞ்சள் நிற ஆர்கிடைப் (Golden Vanda) பார்த்ததுண்டு.

19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசு நம் நாட்டின் இயற்கை வளத்தைப் புரிந்துகொள்ள, அதன் வணிகச் சாத்தியக்கூறுகளை அறிந்துகொள்ள இந்தப் பொருளில் ஆர்வம் கொண்டவர்களைக் காடுகளில் சுற்றி தாவரங்களைப் பதிவு செய்ய ஊக்கமூட்டியது. ராணுவத்தில் அதிகாரியாக இருந்த கர்னல். ஹீபர் டுரூரி இந்த நோக்கத்துடன் தென்னிந்தியக் காடுகளில் பயணித்தபோது,  அகத்திய மலையில் இருக்கும் இந்த காலணி ஆர்கிடைக் கண்டறிந்தார். இவர் 1873-ல்  எழுதிய ‘தி ஹேண்ட்புக் ஆஃப் இந்தியன் ஃபுளோரா’ (The Handbook of Indian Flora) என்ற நூலில் இந்தச் செடியைப்பற்றி விவரித்தார். அவரது பெயரே இந்தச் செடிக்குச் சூட்டப்பட்டது.

குற்றாலத்தில் கண்ட சாது

குற்றாலத்தில் மலை ஏற உள்ளூர் வழிகாட்டி ஒருவருடன் ஒரு நாள் காலை புறப்பட்டேன். செண்பகாதேவி அருவியைத் தாண்டி, ஒரு சிறு பள்ளத்தாக்கில் இருந்த ஓடையருகே பாறையென்றில் ஒருவர் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார். இது ஒரு அருமையான படம் என்று கீழே இறங்கி அவருக்குப் பின்புறமிருந்து ஒரு படமெடுத்தேன். என் அசாகி பெண்டாக்ஸ் கேமராவின் ஷட்டர் ஒலி கேட்டு அவர் திரும்பிப் பார்த்தார்.

ரிஷிகள்போல அவர் கோபம் கொள்ளவில்லை. மாறாக நலம் விசாரித்தார். நான் அஞ்சல் துறையில் இருக்கிறேன் என்பதை அறிந்து உற்சாகமடைந்தார். அவர் செங்கோட்டையில் தபால்காரராகப் பணியாற்றிக்கொண்டிருந்ததாகவும், தொழுநோய் தாக்கியதால் ஊரைவிட்டு வந்து காட்டில் வசிப்பதாகவும் சொன்னார்.

ஓடைக்கு ஓரத்திலிருந்த ஒரு பாறைக் குகைக்கு ஒரு சிறிய மரக்கதவு போட்டு, அதில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு ஒரு முறை அவர் மனைவி அரிசி, பருப்பு கொண்டுவந்து கொடுப்பாராம். காட்டுக்கு வந்து சில மாதங்களில் தனது குரு சொன்ன மூலிகைகளைச் சாப்பிட்டு, நோயிலிருந்து பூரண குணம் பெற்றுவிட்டதாகச் சொன்னார். குருவைப் பற்றிக் கேட்டேன்.

அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், இன்னும் தன்னை வந்து சந்திக்கிறார் என்றார். அவர் வேறு உலகில் சஞ்சரிப்பது புரிந்தது. நான் இந்த ஆர்கிடைப் பற்றிச் சொன்னதும் தானும் வருகிறேன் என்றும் தேனருவியில் உள்ள அரிய குகை ஒன்றைக் காண்பிப்பதாகவும் சொன்னார்.

பரதேசியான ‘பாரடைஸ்’

தேனருவிக்குச் செல்லும் பாதையில் செல்லாமல் காட்டினூடே இந்தச் செடியைத் தேடிக்கொண்டே சென்றோம். தேனருவியை அடைந்து அங்கு நாங்கள் கொண்டு சென்ற பிளாஸ்க்கை எடுத்து காபி அருந்த அருவிக்கு நேரே உள்ள ஒரு பாறையில் உட்கார்ந்தோம். முதலில் எங்கள் சாது நண்பருக்குக் கொடுத்தேன். ஒருவர் காபியை அவ்வளவு ரசித்துக் குடித்ததை நான் பார்த்ததில்லை. இரு கண்களை மூடிக்கொண்டு மெல்ல மெல்ல   குடித்தார்.

பின்னர் அங்கிருந்து மேலே சென்று பரதேசி குகைக்கு எங்களைக் கூட்டிச் சென்றார். அங்கே குகையை அடுத்துள்ள ஒரு காபி எஸ்டேட்டின் பெயர்  ‘பாரடைஸ் எஸ்டேட்’ (Paradise Estate). பாரடைஸ், பரதேசியாகிவிட்டது.

எங்கள் நடையில் டுரூரி ஆர்கிடின் தடயம் ஏதும் கிடைக்கவில்ல. பல ஆண்டுகள் கழித்துத்தான், அந்தத் தாவரம் மண்ணுக்கு அடியில் இருக்குமென்றும் மலரும்போது மட்டும் (அக்டோபர் - நவம்பர் மாதங்களில்)  ஒரு சிறிய தென்னங்கன்று உருவில் தரைக்கு மேல தோன்றும் என்றும் தெரிந்துகொண்டேன். காலணி ஆர்கிடைப் பார்க்காமலேயே திரும்பிவிட்டோம்.

42 ஆண்டுகளுக்குப் பிறகு…

அந்த ஆர்கிட் மலரைக் காணும் வாய்ப்பு, சென்ற ஆண்டுதான் கிடைத்தது. பெங்களூரில் ஆர்வலர் ஒருவர் இந்தச் செடியை வளர்க்கிறார் என்றறிந்து அவரைத் தொடர்புகொண்டேன். முன் ஜாக்கிரதையாகப் பல கேள்விகள் கேட்ட பின், தன்னைப் பற்றி ஏதும் எழுதக் கூடாது என்ற நிபந்தனையுடன்  தனது முகவரியைத் தந்தார்.

அவர் ஒரு மாடி முழுவதிலும் ஆர்கிட் செடிகளை வளர்க்கிறார். ஒரு அறையில் அவ்வப்போது சாரல் அடிக்க தானியங்கி பம்ப் பொருத்தியிருக்கிறார். செடிகளுக்கு இசை நல்லது என்று நம்பும் இவர், செவ்வியல் இசை மெலிதாக ஒலித்துக்கொண்டிருக்கும் கருவிகளை அமைத்துள்ளார்.

பால்கனிக்குக் கூட்டிச்சென்று இதுதான் டுரூரி ஆர்கிட் என்று இரு செடிகளைக் காட்டினார். இரண்டிலும் மலர்கள் இருந்தன. படம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார். அதை அதன் வாழிடத்தில் பார்க்க முடியாவிட்டாலும் அகத்தியமலை இயற்கை வளத்தின் ஒரு குறியீடான இந்த எழிலார்ந்த மலரைத் தேட ஆரம்பித்து, 42 ஆண்டுகள் கழித்து அன்று  காண முடிந்தது.

(அடுத்த கட்டுரை: அக்டோபர் 27 இதழில்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

23 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

மேலும்