‘ஒரு பேரரசின் நிலைத்தன்மை, அதன் சூழலியலின் நிலைத்தன்மையைச் சார்ந்துள்ளது’
- சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்
விஷ்னோய் (பிஷ்னோய் என்றும் அழைக்கப்படுகிறது) சமய மரபு, இந்து மதத்தின் ஒரு கிளை. இது, குரு மகராஜ் ஜம்போஜி என்ற ஜம்பேஷ்வர் (1451 – 1536) என்பவரால் 1485-ம் ஆண்டு மேற்கு ராஜஸ்தானின் மார்வார் (ஜோத்பூர்) பகுதியின் தார் பாலைவனப் பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது.
இந்தக் கிளைமதம் 120 சப்தங்களை உள்ளடக்கிய 29 நெறிமுறைகளின் அடிப்படையில் அமைந்தது. இந்த நெறிமுறைகளில் பெரும்பாலானவை சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்துகின்றன. மரங்களுக்கும் விலங்குகளுக்கும் ஊறு விளைவிக்கும் செயல்களை விஷ்னோய்கள் மிகவும் வலுவாகத் தடைசெய்கின்றனர்.
வறட்சிக் காலத்தில் விலங்குகளுக்கு உணவு கொடுப்பதற்காக மரங்களை ஒட்டுமொத்தமாக வெட்டுவதையும், அப்படிச் செய்தும் வறட்சி தொடர்ந்து, அந்த விலங்குகளும் இறந்து மடிவதையும் ஜம்போஜி கண்டார். மேலும், அவருடைய வட்டாரச் சூழலியல் தொகுதியில் மரங்களின் முக்கியத்துவத்தை, அதாவது விலங்குகளை உயிர் வாழச் செய்யும் அவற்றின் முக்கியத்துவத்தை அவர் கண்டுணர்ந்தார். இதன் காரணமாகப் பசுமையான மரங்களை வெட்டுவதையும் பறவைகளையும் விலங்குகளையும் கொல்வதையும், அவர் தடை செய்தார்.
இயற்கையின் மேல் ஜம்போஜிக்கு இருந்த ஆன்மிக மரியாதை, வட்டாரச் சூழ்நிலையுடன் ஒரு ஒத்திசைவான வாழ்க்கை மரபுக்கு வழிவகுத்தது. அதாவது, ஒரு வறண்ட பகுதியின் நடுவில், மிகவும் பசுமையான தாவரத் தொகுப்பை (பாலைவனச் சோலை) உருவாக்கி வளர்த்ததற்காகவும், விலங்குகளை மிகவும் பரிவுடன் பாதுகாத்து வந்ததற்காகவும், குடிக்கக் கூடிய தரமான நிலத்தடி நீரைச் சேகரித்ததற்காகவும் விஷ்னோய் மக்கள் பிரபலமடைந்தார்கள். வெளிமானைக் கொன்றதற்காக, பிரபல நடிகர் சல்மான் கானுக்குத் தண்டனை பெற்றுத் தந்தவர்களும் இவர்கள்தாம்!
பஞ்சத்தில் கைகொடுத்த மரம்
விஷ்னோய்கள், மிகவும் குறிப்பாக கேஜ்ரி மரத்தையும் வெளிமானையும் மிகவும் புனிதமாகக் கருதினர். உதாரணத்துக்கு, ஒரு கிணறு வெட்டுவதற்கு முன்பு விஷ்னோய் மக்கள் கேஜ்ரி மரத்தடியில் வழிபாடு செய்வர். கேஜ்ரி மரம் விறகு, கால்நடைத் தீவனம் போன்றவற்றைக் கொடுப்பதோடு மண் வளத்தையும் பாதுகாக்கிறது.
இந்த மரத்தின் கனியிலிருந்து ஒரு பிரபலமான வட்டார உணவான ‘சாங்ரி’ தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ கனி, ஏறத்தாழ 300 ரூபாய் வருமானத்தைக் கொடுக்கக்கூடியது. அதன், மரப்பட்டை, ஒரு வகை மாவாக மாற்றப்பட்டு, உண்ணப்படுகிறது. இது 1868-ம் ஆண்டு பஞ்சத்தின்போது ஆயிரக்கணக்கான விஷ்னோய் மக்களின் வாழ்க்கையைக் காப்பாற்ற உதவியது.
இந்த மரம், தமிழகத்திலும் புனிதமாகக் கருதப்படுகிறது. ‘வன்னி’ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மரம், சில முருகன் கோயில்களில் தல மரமாகத் திகழ்கிறது. இந்த மரத்தோடு நெருங்கிய தொடர்புடைய ‘சீமைக் கருவேலம்’, தமிழகத்தில் பலரால் வெறுக்கப்பட்ட ஒரு தாவரம்.
(அடுத்த வாரம்: மரத்துக்காக மரணித்த மனிதர்கள்!)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
23 days ago
சுற்றுச்சூழல்
25 days ago