யானைக்கு ‘நல்வழி’ காட்டிய தீர்ப்பு

By த.முருகவேல்

யானை, இந்தியாவின் பாரம்பரியத்துக்கும் கலாச்சாரத்துக்கும் சின்னமாக விளங்கும் பேருயிர். யானைகளை ‘கீஸ்டோன்’ (keystone), அதாவது காட்டின் ‘அடிப்படை உயிரினம்’ என்பார்கள்.  இவற்றைச் சார்ந்துதான் இதர உயிரினங்களும் அவற்றின் வாழ்விடமும் இருக்கின்றன என்பது அதன் பொருள்.

ஆசிய யானைகளின் மொத்த எண்ணிக்கையில்   60 சதவீத  யானைகள்  இந்தியாவில் இருப்பதாக  இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐ.யூ.சி.என்.) அறிவித்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், 2017-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி  இந்தியாவில் 3 ஆயிரம் யானைகள், 2012 கணக்கெடுப்பு எண்ணிக்கையிலிருந்து குறைந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது நம் நாட்டில் மட்டும்  சுமாராக 27,657 யானைகள் இருப்பதாகத்  தெரிகிறது. இந்தியாவில், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

யானை வழித்தடங்கள்

யானை வழித்தடங்கள் என்பவை நாம் செல்லும் ஒற்றையடிப் பாதைகள் போல் நேரான குறுகிய இயற்கையான பாதைகள். உணவு, நீர் போன்ற தேவைகளுக்காக யானைகள் பல காலமாகப் பயன்படுத்தி வரும் பாதைகள் இவை. மொத்தம் 77.3 சதவீத வழித்தடங்கள் யானைகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.

யானைகள் கூட்டமாக  வாழும் பண்புடையவை. ஒவ்வொரு கூட்டமும்  சராசரியாக  350-500 சதுர கி.மீ. நிலப்பரப்பை வருடந்தோறும் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் 101 முக்கிய வழித்தடங்கள் இருப்பதாகவும், அவற்றில் 28 தென்னிந்தியாவிலும், 25 மத்திய இந்தியாவிலும், 23 வடகிழக்கு இந்தியாவிலும்,  மேற்கு வங்கத்தில் 14, வடமேற்கு இந்தியாவில்  11 உள்ளன என்று இந்தியாவின் வனவிலங்கு அறக்கட்டளையின் (WTI) ஆய்வறிக்கை கூறுகிறது .

வளர்ச்சியின் சின்னங்களாகக் கருதப்படும் தொழிற்சாலைகள், அணைகள், நெடுஞ்சாலைகள், ரயில்பாதைகள் போன்றவற்றோடு, கேளிக்கை விடுதிகள், கல்வி மற்றும் மத நிறுவனங்கள் பல, இந்த வழித்தடங்களில் உருவாக்கப்பட்டன. தேயிலை, யூகலிப்டஸ் போன்றவற்றை பயிர் செய்வதற்காகக் காடுகள் அழிக்கப்பட்டன. இந்தத் தடங்களை யானைகள் கடக்கும்போது,  மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தடைகளைத்  தவிர்க்க முடியாமல் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வர நேர்கிறது .

சீகூர் பீட பூமி

சீகூர் பீட பூமி தென்னிந்தியாவின் ஒரு முக்கிய யானை வழித்தடம். இது தென்மேற்குப் பகுதியில் நீலகிரி மலையையும் வட கிழக்குப் பகுதியில் மோயாறு பள்ளத்தாக்கையும் கொண்டுள்ளது. இந்தப் பகுதி, மேற்கு மலைத் தொடர்ச்சியையும் கிழக்குமலைத் தொடர்ச்சியையும்  இணைக்கிறது.

இந்த இரண்டு  இயற்கை அரண்களுக்கு இடையே ஒன்றரை கிலோமீட்டர் அகலமும், 22 கிலோமீட்டர் நீளமும் கொண்ட  பகுதியை, சீகூர் யானை வழித்தடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்குப் பருவமழை, மேற்குமலைத் தொடர்ச்சியில், ஜீன் மாதத்திலிருந்து செப்டம்பர்வரை இருக்கும். அதேபோல் கிழக்கு மலைத் தொடர்ச்சியில் அக்டோபர் தொடங்கி ஜனவரிவரை வடகிழக்குப் பருவமழை பொழியும்.

இந்த மழைக்காலங்களைப் பொறுத்தே யானைகள் உணவுக்காகவும் நீருக்காகவும் வலசை செல்கின்றன. அவ்வாறு அவை இடம்பெயர்ந்து செல்லும்போது சீகூர் பீடபூமியையும் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.  மேலும் இந்த யானை வழித்தடம் தமிழ்நாடு, கேரளாவில்  உள்ள பல முக்கியக் காப்பிடங்களையும் இணைக்கிறது.

பொறுப்பற்ற சுற்றுலா

இந்தப் பகுதியின் இயற்கை வளங்களையும் காட்டுயிர்களின் அழகையும் ரசிப்பதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்து, சுற்றுலா பயணிகளாக மக்கள் வருகைதர ஆரம்பித்தனர். இவர்களின் வசதிக்காகப் பல கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட்டன. இவை, சிறு விடுதி முதல் 5-நட்சத்திர விடுதிகள் வரை பல தரப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதாக இருந்தன. மேலும் இங்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளை ‘சஃபாரி’ அழைத்துச் செல்ல, ஜீப் போன்ற வாகனங்களில் கூட்டிச் செல்வதும் அதிகமானது.

காலை, மாலை வேளைகளில் விலங்குகள் நடமாட்டம் இங்கு அதிகமாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் ‘சஃபாரி’ வாகனங்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். சில ஊழல் அரசு அதிகாரிகளின் துணையோடு இரவு முழுவதும்கூட இந்த வாகனங்கள் வனப்பகுதிக்குள் வலம்வந்தன. இந்த வாகனங்களின் விளக்கொளியும் இரைச்சலும் வனவுயிர்களுக்கு எவ்வளவு இடையூறாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

சுரண்டப்படும் பழங்குடியினர்

சரணாலயங்களில் மைய மண்டலம் (core zone), நன்கு பாதுகாக்கப்பட்ட பகுதி. ஆனால்,  சுற்றுப்பகுதி (buffer zone) பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும், பழங்குடியினர் அங்கே  குடியிருக்க  அனுமதி உண்டு. அங்கு அவர்கள் தங்கள் தேவைக்குப் பயிர் செய்து வாழ்வர்.

 விடுதி  நடத்து பவர்கள் பழங்குடியினரின் நிலத்தை வாங்க, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கிறோம் என்ற  போர்வையில் பழங்குடியினரைத் தங்கள் விடுதிகளில் துப்புரவு, பராமரிப்பு, தோட்ட வேலை போன்ற ஏவல் வேலைகளுக்கு அமர்த்தி அவர்களைச் சுரண்டி வந்தனர்.

வழித்தடங்களும் வழக்குகளும்

1996-ம்  ஆண்டு ரங்கராஜன் என்பவர் சிங்காரா பகுதியிலிருந்து கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களுக்கு மின்சாரம் கடத்தும் கட்டமைப்புகளை நிறுவுவதால் யானைகள் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படும் என்று வழக்கு தொடுத்தார். அதன் பிறகு பலரும் யானை வழித்தடங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் விலங்குகளின் நடமாட்டத்துக்கு இடையூறாக   இருக்கும் எல்லா விதமான கட்டமைப்புகளும் அகற்றப்பட வேண்டும் என்றும்  நீதிமன்றத்தை அணுகினர்.

உயர் நீதிமன்றமும் யானை வழித்தடப் பகுதிகளில் உள்ள மின்வேலிகளை எல்லாம் அகற்றுமாறு உத்தரவிட்டது.  இந்தத் தீர்ப்பை எதிர்த்து, விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்குப் போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்ததன் பேரில்   2011-ம்  ஆண்டு இந்தக் கேளிக்கை விடுதிகளை இடிக்கவோ அகற்றவோ கூடாது என்று நீதிமன்றம்  தடை விதித்தது.

இறுதியாக, எட்டு ஆண்டு களுக்குப்  பிறகு, இந்த ஆகஸ்ட் மாதம்  வழக்கறிஞர்  ‘யானை’ ராஜேந்திரன், உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, மேற்கண்ட யானை வழித்தடத்தில் உள்ள 27 ரிசார்ட்டுகளை ஆட்சியரின் அறிக்கையின்படி சீல் வைக்க  வேண்டும் என்று உத்தரவிட்டது. அதோடு மீதம் உள்ள 12 விடுதி உரிமையாளர்கள், தக்க ஆவணங்களை 48 மணி நேரத்துக் குள்ளாக ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறினால் அவையும் மூடப்பட வேண்டும்  என்றும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

யானை வழித்தடங்களில் இருக்கும் தடைகளை நீக்கி வனவுயிர்கள் சுதந்திரமாகத்  தங்கள் வழியில் செல்ல வழிவகுத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது. இதைப்போலவே தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் யானை வழித்தடங்களில் சட்டத்துக்குப்  புறம்பாகக் கட்டப்பட்ட  அனைத்து கட்டமைப்புக்களையும் இரைச்சலையும் அகற்றுவது மட்டுமே யானை மட்டுமல்லாமல் புலி போன்ற மற்ற வனவுயிர்களும் வாழ்வதற்கு  வழிவகுக்கும்!

கட்டுரையாளர், காட்டுயிர் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: mcwhale.t@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

மேலும்