50,000..!
இது ஒவ்வோர் ஆண்டும் பாம்புக்கடிக்கு உள்ளாகி இறக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை! 2011-ம் ஆண்டு வெளியான ‘மில்லியன் டெத்ஸ்’ எனும் ஆய்வில் இந்த எண்ணிக்கை சுமார் 46 ஆயிரமாக இருந்தது. கடந்த எட்டு ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மனித – விலங்கு எதிர்கொள்ளல் நிகழ்வுகளில் அதிக அளவு மரணங்களை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது, பாம்புக் கடி. இதில் பெரும்பாலும் கிராமப் புற மக்கள்தாம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
இந்தியாவின் பல கிராமங்களில், பாம்புக் கடி என்பது தொடர் நிகழ்வாகி வருகின்றன. அதனால், பாம்புகள் மீது மனிதர்களுக்கு இயல்பாகவே உள்ள பகையுணர்வும் அதிகரித்து வருகிறது. பாம்புகளுக்கு இடையிலான வித்தியாசம் தெரியாததால், விஷமில்லாத பாம்புகளையும் மக்கள் கொல்கிறார்கள். இது ஒரு கட்டத்தில், குறிப்பிட்ட பகுதியில், பாம்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கச் செய்யும். பாம்புகள் குறைந்தால், எலிகள் அதிகரிக்கும். எலிகள் அதிகரித்தால், வேளாண்மை பாதிக்கும். வேளாண்மை பாதித்தால் நாட்டில் வறுமை ஏற்படும். வறுமையால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆம்… இது ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வு!
ஜார்க்கண்ட், ஒடிசா, பிஹார், மத்தியப் பிரதேசம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில்தாம் நாட்டிலேயே அதிக அளவு பாம்புக்கடி மரணங்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பிடித்திருக்கிறது எனும் செய்தி, நம்மை மேலும் அதிர்வுக்கு உள்ளாக்குகிறது!
பகையுணர்வைக் குறைப்போம்
பாம்புக்கடியால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்காக, 2017-ல் ‘இந்தியா ஸ்னேக்பைட் இனிஷியேட்டிவ்’ எனும் ஆய்வு ஒன்று தொடங்கப்பட்டது. அதில் சென்னை முதலைப் பண்ணை அறக்கட்டளையும் ஓர் உறுப்பினர். அந்த அறக்கட்டளையின் இணை இயக்குநர் சாய் விட்டேகரிடம், ‘உலக பாம்புகள் நாளை’ முன்னிட்டு, பாம்புக்கடியால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் வழிகள் பற்றிக் கேட்டோம்.
“பெரும்பாலான கிராம மக்கள், போதிய அளவு பொருளாதார வசதியின்றி இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் கட்டில்கூட இருக்காது. இதனால் இரவில் தரையில்தான் தூங்க வேண்டும். பெரும்பாலான பாம்புக்கடி மரணங்கள், அப்படித் தரையில் தூங்கும்போதுதான் ஏற்படுகின்றன.
முன்பு சுமார் 240 பாம்பு இனங்கள் இந்தியாவில் இருப்பதாகக் கூறப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் மேலும் புதிய பாம்பு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆகவே, இப்போது சுமார் 300 வகையான பாம்புகள் தென்படுகின்றன. இவற்றில் சுமார் 60 வகையான பாம்புகள் மட்டுமே விஷம் உடையவை. அவையும்கூட, மனிதர்களால் தொந்தரவுக்கு உள்ளானால் மட்டுமே விஷத்தைச் செலுத்தும் பண்பைக் கொண்டவையாக இருக்கின்றன. அப்படியே, அவை விஷத்தைச் செலுத்தினாலும், அது மனிதர்களைச் சாகடிக்கும் அளவுக்கெல்லாம் வீரியம் மிக்கவையாக இருப்பதில்லை” என்பவர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடையேயும், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றின் வழியாகக் கிராமப் புற மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், பாம்புகள் மீதான மனிதர்களின் பகையுணர்வைக் குறைக்க முடியும் என்கிறார்.
விபத்து அல்ல… நோய்!
பாம்புக்கடிக்கான மருத்துவம் குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் சொன்ன தகவல்கள் நம்மை அதிர வைக்கின்றன.
“தரையில் தூங்கும்போது கொசுவலை பயன்படுத்துவது, காலனிகள் அணிவது, இரவில் டார்ச் லைட்டுகளைப் பயன்படுத்துவது போன்றவற்றின் மூலமாக, கிராமப்புறங்களில் பெருமளவுக்குப் பாம்புக்கடி நிகழ்வுகளைத் தடுக்க முடியும். பொதுவாக, பாம்புக்கடி நிகழ்வுகளை, ‘விபத்து’ என்றுதான் இதுநாள் வரை சொல்லி வந்தார்கள். ஆனால், 2017 ஜூன் 9 அன்று, உலக சுகாதார நிறுவனம் பாம்புக்கடியை, ‘புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்’ (நெக்லெக்டட் ட்ராபிக்கல் டிசீஸ்) என்று வகைப்படுத்தியுள்ளது.
இன்று எந்தப் பாம்புக்கடிக்கும் மருந்து உள்ளது. எந்தப் பாம்பு கடித்தது என்ற வித்தியாசம் தெரியாவிட்டாலும் கவலையில்லை. பாம்புக்கடிக்கு உள்ளானவருக்கு ஏற்படும் அறிகுறிகளைக் கொண்டு, அதற்கேற்றவாறு விஷமுறி மருந்து கொடுக்கப்படுகிறது. ஒரே விஷயம்… பாம்புக்கடிக்கு உள்ளானவரை, ஒரு மணி நேரத்துக்குள் அருகிலிருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, விஷமுறி கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால், கிராம மக்கள் பலர், நாட்டு வைத்தியம், கை வைத்தியம், மாந்தரீகம் என்று சொல்லி நேரத்தை வீணாக்கிவிடுகிறார்கள். இதனால், உயிர் பறிபோகிறது. முதலில் பாம்புக்கடிக்கு உள்ளானவரின் பதற்றத்தைக் குறைக்க வேண்டும். ஆனால், அதை அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் செய்யுங்கள்” என்கிறார்.
பாம்புக்கடி மருத்துவத்தில் வேறு ஒரு முக்கியப் பிரச்சினை உண்டு. பொதுவாக, ஒரு பகுதியில் தென்படும் பாம்புக்கும், நாட்டின் வேறொரு பகுதியில் தென்படும் பாம்புக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முக்கியமாக, அவற்றின் விஷத்தில்! இதனால், இன்று இருக்கும் விஷமுறி மருந்து, ஒரு நாட்டின், அனைத்துப் பகுதியில் தென்படும் பாம்பு விஷங்களுக்கும் எவ்வளவு தூரம் ஏற்றதாக, வீரியம் மிக்கதாக இருக்கிறது என்பது சந்தேகம்தான்.
“இதற்காகத்தான், நாடு முழுவதுமுள்ள பாம்பு இனங்களிலிருந்து விஷம் எடுத்து, அவற்றின் வீரியம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது” என்றார் சாய் விட்டேகர்.
பாம்புகளுக்காக ஒரு ‘ஆப்’
பாம்புகளில், நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை ஆகிய நான்கும் மிக வீரியமான விஷம் கொண்டவை. இந்தியாவில், பெரும்பாலான பாம்புக்கடி மரணங்கள் இந்த நான்கு இனங்களால்தாம் ஏற்படுகின்றன. எனவே, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் இந்தப் பாம்புகள் எங்கெல்லாம் உள்ளன எனும் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதற்குப் பொறுப்பாளராக, இந்தியக் காட்டுயிர் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த ஜோஸ் லூயிஸ் இருக்கிறார்.
அவரிடம் பேசியபோது, “இந்த ஆய்வில் நாடு முழுவதிலும் இருந்து 15 முதல் 20 அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. தற்போது, அதிக ஆபத்தான நான்கு பாம்புகளின் பரவலாக்கத்தைச் சேகரித்து வருகிறோம். அதற்காக ‘பிக்4 மேப்பர்’ (Big4 Mapper) எனும் ‘ஆப்’ ஒன்றை வடிவமைத்துள்ளோம். இதை ஆண்ட்ராய்ட் போனில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
நான்கு பாம்பு இனங்களில், தங்கள் பகுதியில் எந்தப் பாம்பு இனம் தென்படுகிறதோ, அதை ஒளிப்படம் எடுத்து இந்த ‘ஆப்’பில் பதிவேற்றலாம். அதேபோல, எங்களின் வலைதளத்துக்கு (http://snakebiteinitiative.in/) சென்று, பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் தங்கள் பகுதியில் இருந்தால், அவை குறித்தும் தகவலைப் பதிவேற்றலாம். தற்போது, பாம்புகளை மீட்பவர்கள், விஷமுறி மருந்தை இருப்பில் வைத்திருக்கும் மருத்துவமனைகள் போன்ற தரவுகளையும் ஒன்றிணைக்க முயல்கிறோம்” என்கிறார்.
இதுவரை அவர்கள் சேகரித்த தரவுகள் மூலம், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையில்தான் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், அந்த நேரத்தில்தான் அதிக அளவில் மனித-பாம்பு எதிர்கொள்ளல், பாம்புக்கடி நிகழ்வுகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு அத்தனையும் எந்த ஒரு அரசு ஆதரவுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக, பாம்புக்கடி மரணங்களைக் குறைப்பதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவுக்கு விஷமுறி மருந்துகள் வைத்திருப்பது, மருத்துவர்களுக்குப் பாம்புக்கடி சிகிச்சை பயிற்சியளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல கடமைகள் இருக்கின்றன. அவை நிறைவேறும்பட்சத்தில் பாம்பு தீண்டும் துன்பம் வெகுவாகக் குறையும்!
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
23 days ago
சுற்றுச்சூழல்
25 days ago