கரும்புக்கு இனி காலம் உண்டா?

By ந.வினோத் குமார்

 

‘நா

ட்டில் வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நீரில் சுமார் 60 சதவீதம், நெல் மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்காக மட்டுமே செலவாகிறது. இந்த இரண்டு பயிர்கள், முறையே, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் பாசன வளத்தைச் சுரண்டி வருகின்றன’ என்று சமீபத்தில் அதிர்ச்சிகரமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை ‘சர்வதேசப் பொருளாதார உறவு குறித்த ஆய்வுக்கான இந்திய கவுன்சில்’ (இந்தியன் கவுன்சில் ஃபார் ரிஸர்ச் ஆன் இண்டர்நேஷனல் எகனாமிக் ரிலேஷன்ஸ்) எனும் அமைப்பு வெளியிட்டது.

அந்தக் கட்டுரை வெளியான அடுத்த சில தினங்களில், ‘இந்தியாவின் பல மாநிலங்களில் நிலத்தடி நீர் குறைந்துகொண்டே வருகிறது. குறைந்த மழைப்பொழிவே இதற்குக் காரணம்’ என்று ‘ஜியோபிசிக்கல் ரிஸர்ச் லெட்டர்ஸ்’ எனும் ஆய்விதழில் ஓர் அறிக்கை வெளியானது.

இந்த இரண்டு ஆய்வு அறிக்கைகளும், தமிழகத்திலுள்ள கரும்பு விவசாயிகளைக் கலங்கடிக்கச் செய்துள்ளன. காரணம், நெல்லுக்காவது சுமார் மூன்று மாதங்கள் வரைதான் தண்ணீர் தேவை. ஆனால், கரும்புக்கோ ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவை. போதிய நீர் இல்லை என்பது ஒரு பிரச்சினை என்றால், சர்க்கரை ஆலைகளிடமிருந்து கிடைக்காத நிலுவைத் தொகை இன்னொரு பிரச்சினை.

இந்த இரண்டு பிரச்சினைகளால் தமிழகத்தில் கரும்பு விவசாயம் என்ன மாதிரியான சிக்கல்களைச் சந்திக்கிறது என்பது பற்றி சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த (மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ்) ஆய்வாளர்கள் பேராசிரியர் உமாநாத் மற்றும் ஆய்வு மாணவர் பரமசிவம் ஆகியோர் ஆராய்ந்து வருகிறார்கள். அவர்களின் ஆய்வு சொல்லும் தகவல்கள், ‘தமிழகத்தில் இனி கரும்பின் நிலை என்னவாகும்?’ என்ற கேள்வியை எழுப்புகின்றன.

லாபத்தில் பாதி கூலிக்கே!

நாம் பயன்படுத்தும் சர்க்கரையில் சுமார் 60 சதவீத அளவு சர்க்கரை கரும்பிலிருந்தே பெறப்படுகிறது. சர்க்கரை மட்டுமல்லாது, மதுவுக்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள், காகிதம், பெட்ரோலுக்கு மாற்றாகக் கருதப்படும் எத்தனால் என கரும்பிலிருந்து பெறப்படும் உபரிப் பொருட்களும் கிடைக்கின்றன. எனவே, கரும்பு மற்றும் அதன் உபரிப் பொருட்கள் சுமார் 25 தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியர்கள் நுகரும் மொத்த கலோரி அளவில் சுமார் 10 சதவீதம் கரும்பிலிருந்தே கிடைக்கிறது.

இவ்வளவு பயன்கள் தரும் கரும்பு விவசாயம், ஏன் சிக்கலில் சிக்குண்டு கிடக்கிறது? விளக்குகிறார் உமாநாத்.

“இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ஹரியாணா ஆகிய 7 மாநிலங்களில்தான் கரும்பு பெருமளவில் பயிரிடப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு அதிகமாக இருப்பதால் அங்கே உற்பத்தியும் அதிகமாக இருப்பது இயல்பு. ஆனால் தமிழகத்தில் பரப்பளவு குறைவாக இருந்தாலும், உற்பத்தித் திறன் அதிகமாக இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், நம் விவசாயிகளின் மேலாண்மைத் திறன்தான்.

07chnvk_paramasivam.jpg பரமசிவம்

அப்படியென்றால், லாபம் கணிசமாகக் கிடைத்திருக்க வேண்டுமே? கிடைக்கவில்லை. ஏன்? காரணம், கரும்பு விவசாயம், விவசாயக் கூலியாட்களை நம்பியிருக்கும் ஒரு தொழில். கரும்புத் தோட்டத்தில் பணியாற்றும் ஒரு விவசாயிக்கு ஒரு மணி நேரத்துக்கு 49 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. அவர் ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் பணியாற்றினால், அவருக்குச் சுமார் 500 ரூபாய் வரை கூலி கொடுத்தாக வேண்டும். இந்தக் கூலிதான் லாபத்தை நிர்ணயிக்கிறது.

இன்று ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை 2, 300 ரூபாய். அதனுடன் மாநில அரசின் ‘பரிந்துரை விலை’யான (ஸ்டேட் அட்வைஸ்ட் பிரைஸ்) 550 ரூபாயையும் சேர்த்து 2,850 ரூபாய் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்குகின்றன. இந்த 2,850 ரூபாயில், சுமார் 500 ரூபாய் கூலிக்கே செல்கிறதென்றால், அதில் எப்படி லாபம் காண முடியும்? இதர மாநிலங்களில், உற்பத்திச் செலவில் சுமார் 30 சதவீதம் அளவுக்குத்தான் கூலி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அது 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது” என்கிறார் உமாநாத்.

2016-17-ம் ஆண்டில் இருந்த அதே குறைந்தபட்ச ஆதார விலைதான் 2017-18-ம் ஆண்டிலும் தொடர்கிறது. சமீபத்தில், நெல், பருத்தி உட்பட ஐந்து பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் கரும்புக்கு விலை உயர்த்தப்படவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

வறட்சியால் வெளியேறும் விவசாயிகள்

“அந்த 2,850 ரூபாயை சர்க்கரை ஆலைகளிடமிருந்து பெறுவதற்கு விவசாயிகள் படாதபாடு பட வேண்டியதாக உள்ளது” என்கிறார் பரமசிவம். கடலூர், விழுப்புரம், ஈரோடு மாவட்டங்களில்தான் அதிக அளவு கரும்பு பயிரிடப்படுகிறது. அங்கெல்லாம் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வரும் அவர், கரும்பு விவசாயம் சந்திக்கும் பிரச்சினையின் இன்னொரு பக்கத்தை நமக்குச் சொல்கிறார்.

“ஒரு சர்க்கரை ஆலைக்கும் இன்னொரு சர்க்கரை ஆலைக்கும் இவ்வளவு தூரம் இருக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இருக்கும்பட்சத்தில், விவசாயிகள் அங்கு செல்வார்கள். இல்லாதபட்சத்தில் அவர்கள், தனியார் சர்க்கரை ஆலைகளைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஆலைக்குக் கரும்பைக் கொடுத்த 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய தொகையை வழங்கிவிட வேண்டும் என்று விதி இருக்கிறது. பெரும்பாலும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் அந்த விதியைப் பின்பற்றுகின்றன. ஆனால் தனியார் சர்க்கரை ஆலைகள்தான் இழுத்தடிக்கின்றன” என்பவர், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொன்னார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் வறட்சியைச் சந்தித்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. போர்வெல் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே கரும்பு பயிரிட முன் வருகிறார்கள். அந்த அளவுக்கு வசதியில்லாத விவசாயிகள், கரும்பைக் கைவிட்டு, வேறு பயிர்களை விளைவிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால், இதுவரை கரும்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த விவசாயக் கூலிகளும் வேறு ஊர்களுக்குச் சென்று, கட்டிடத் தொழிலாளர்களாக மாறிவிட்டார்கள்” என்கிறார்.

உபரி லாபம் பகிரப்படுமா?

குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தாதது, சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காதது, தண்ணீர்ப் பிரச்சினை ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் விவசாயிகள், சமீபமாக இன்னொரு கோரிக்கையையும் எழுப்பி வருகிறார்கள்.

சர்க்கரை ஆலைகள், கரும்புச் சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றன. சில ஆலைகள், அந்த மின்சாரத்தைத் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கே பயன்படுத்த, வேறு சில ஆலைகள் அந்த மின்சாரத்தை அரசுக்கு விற்கவும் செய்கிறார்கள். அதற்கு, அரசு அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துகிறது. இவ்வாறு, கரும்பின் உபரிப் பொருட்களிலிருந்து கிடைக்கும் லாபம் தனி. இதுவரை சர்க்கரை ஆலைகள், சர்க்கரை உற்பத்தியிலிருந்து கிடைக்கும் லாபத்தை மட்டுமே விவசாயிகளுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். உபரிப் பொருளால் கிடைக்கும் லாபத்தை விவசாயிகளுக்குப் பகிர்வதில்லை. அந்த லாபத்தைப் பகிர்ந்தால், தங்களால் ஓரளவு செலவுகளைச் சமாளிக்க முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.

ஆலைகள் முன் வருமா? இனிய செய்தி கிடைக்குமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

23 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

மேலும்