குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் அடையாளத்தை இழந்து வரும் பாலாறு

By ந. சரவணன்

வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் பாலாறு பகுதிகளில் கொட்டி தீயிட்டு எரிக்கப்படுவதால் பாலாறு தனது அடையாளத்தை மெல்ல, மெல்ல இழந்து வருகிறது. பாலாற்றை மீட்டெடுக்க தமிழக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூர் நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு அம்மாநிலத்தில் 93 கி.மீ., தொலைவு பயணித்து, அங்கிருந்து ஆந்திர மாநிலத்தில் நுழைந்து அங்கு 33 கி.மீ., தொலைவுக்கு பயணிக்கும் பாலாறு தமிழகத்தில் 222 கி.மீ., தொலைவுக்கு பயணித்து வட மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஜீவநதியாக விளங்கி வயலூர் என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது.

வற்றாத ஜீவநதியாக இருந்த பாலாறு கர்நாடகா, ஆந்திர மாநில அரசுகள் கட்டிய தடுப்பணைகளாலும், எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாததால் தமிழக பாலாறு கடந்த பல ஆண்டுகளாக வறண்ட பாலைவனமாக உள்ளது. இருப்பினும், பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதியிலும், பாலாற்றுக்கு வரும் கானாறுகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் காலங்களில் மட்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

அதிலும், தோல் கழிவுநீர், ரசாயனக்கழிவுகள், குப்பைக்கழிவுகள் கலக்கப்படுவதால் விவசாயிகளின் ஜீவநதியாக இருந்த பாலாறு ஜீவனை இழந்து தனது அடையாளத்தை முழுமையாக இழந்து வருகிறது. பாலாற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இல்லாததால் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் கழிவுகளை கொட்டும் இடமாகவே பாலாற்றை மாற்றிவிட்டனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.

பாலாற்றில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகள், தோல் கழிவுகள், இறைச்சிக்கழிவுகளால் துர்றாற்றம் உற்பத்தியாகும் இடமாக பாலாறு மாறிவிட்டதாக ஆதங்கப்படும் சமூக ஆர்வலர்கள் பாலாற்றை மீட்டெடுக்க அரசு என்ன திட்டத்தை வைத்துள்ளது? அதை எப்போது அறிவிக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பாலாற்று நீர்வள ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சேதுராமன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு தமிழகத்தில் அதிக கி.மீ., தொலைவுக்கு பயணிக்கிறது. அதில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெரும் பங்கு வகிக்கிறது.

வாணியம்பாடி பெரியபேட்டை கோட்டை பகுதி பாலாறு
பகுதிகளில் குவிந்துள்ள கழிவுகள்.

பாலாற்றை பாதுகாக்க நம்மில் பலர் தவறிவிட்டதால் எதிர்கால சந்ததியினர்களுக்கு பாலாறு என்ற நதி முன்பு ஒரு காலத்தில் இருந்தது என சொல்ல வேண்டிய நிலை உருவாகிவிடும். இதை தவிர்க்க பாலாற்றை மீட்டெடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதற்கிடையே, வாணியம்பாடி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மறுசுழற்சி செய்யப் படுவதாக தெரியவில்லை. நகர் பகுதியிலேயே மலைப்போல் குப்பை கழிவுகள் சேமிக்கப்பட்டுள்ளதால் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் குப்பை கழிவுகள் பாலாற்று கரையோரங்களில் கொட்டி அவற்றை தீ வைத்தும் எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.

குவியல், குவியலாக உள்ள குப்பைக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் பாலாற்று நிலத்தடியில் ஊறி தண்ணீரையும் மாசடைய செய்கிறது. வாணியம்பாடி பெரியபேட்டை கோட்டை பகுதியின் மையப்பகுதியில் உள்ள பாலாறு பகுதி, அம்பூர்பேட்டை பாலாறு பகுதி, சென்னாம்பேட்டை பாலாறு பகுதிகளில் தினசரி குப்பைக்கழிவுகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்படுகின்றன.

நகராட்சி ஊழியர்களே குப்பையை கொட்டி அவற்றிற்கு தீ வைப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல, வாணியம்பாடி நகர் பகுதியில் உள்ள இறைச்சிக்கடைகள், மீன் இறைச்சி கழிவுகளும் பாலாற்றில் தான் கொட்டப்படுகின்றன. நீர்நிலைகளில் கழிவுகள் கொட்டக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கவிடப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளே நீர்நிலைகளை பாதுகாக்க முன் வராததால் பொதுமக்களுக்கும் பாலாற்றின் மீது அக்கறை இல்லாமல் போய்விட்டது. பாலாற்றில் இது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்து வருவதை மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது பெரும் கவலையளிக்கிறது.

எப்படியாவது பாலாற்றை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் சில தனியார் அமைப்புகளும், இளைஞர்களும் போராடி வருவதை போல அதிகாரம் உள்ளவர்களும் எங்களின் முயற்சிக்கு மதிப்பளித்து பாலாற்றை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். பாலாற்றில் அத்துமீறி குப்பையை கொட்டும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்பதே எங்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது’’ என்றார்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘வாணியம்பாடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாலாற்றில் குப்பையை கொட்டுவது நகராட்சி ஊழியர்கள் இல்லை. பொதுமக்கள் சிலர் இந்த வேலையை செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் பாலாற்றில் குவியும் குப்பையை நகராட்சி நிர்வாகம் தான் அகற்றி வருகிறது. பெரியபேட்டை பாலாற்று பகுதியில் சேரும் குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

மேலும்