மார்லிமந்து நீர்த்தேக்கம் மாசுபடும் அபாயம் - உதகை நகராட்சி முடிவால் சர்ச்சை

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியிலுள்ள 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், ஓல்டு ஊட்டி, கோரிசோலை, அப்பர் தொட்டபெட்டா, லோயர் தொட்டபெட்டா உள்ளிட்ட நீராதார பகுதிகளிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அந்தந்த வார்டுகளிலுள்ள நீர்த்தேக்க தொட்டியில் சேமித்த பின் வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

அதில், மார்லிமந்து அணை கட்டுமான பணி, பிரிட்டீஷ் காலத்தில், 1868-ம் ஆண்டு தொடங்கி 1870-ம் ஆண்டு நிறைவடைந்தது. அந்த காலத்தில் உதகை நகராட்சிக்கு முக்கிய நீராதாரமாக மார்லிமந்து நீர்த்தேக்கம் இருந்தது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. அதன்பின், மக்கள்தொகைக்கு ஏற்ப பிற நீராதாரங்கள் உருவாக்கப்பட்டன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மார்லிமந்து நீர்த்தேக்கத்திலிருந்து, தற்போது நகராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அணையை சுற்றி சோலை வனப்பகுதியாக 50 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை விவசாய பயன்பாட்டுக்கு குத்தகைக்குவிட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை சொற்ப தொகைக்கு சிலர் குத்தகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக நகர்மன்ற ஒப்புதலுக்கு கொண்டுவரப்பட்டு, கவுன்சிலர்களின் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டது. தீர்மானத்துக்கு ஒப்புதல் பெற சமீபத்தில் முன்னறிவிப்பின்றி அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்தை கைவிட வேண்டுமென, ஆரம்பம் முதல் அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, "இப்பகுதியில் பல்வேறு வகை மரங்கள் உள்ளன. நகராட்சிக்கு வருவாய் தேவைப்படும்பட்சத்தில், அரசிடம் அனுமதி பெற்று கற்பூர மரங்களை வெட்டி விற்பனை செய்தாலே பல கோடி ரூபாய் கிடைக்கும். இதை தவிர்த்து, தனி நபருக்காக 3 ஆண்டுகளுக்கு சொற்ப தொகைக்கு ஏலம் விட முயற்சி நடக்கிறது.

நீர்த்தேக்க பகுதியில் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு தேவையான தண்ணீர் நீர்த்தேக்கத்திலிருந்துதான் எடுக்கப்படும். மேலும், மண் மற்றும் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் கலந்து தண்ணீர் விஷமாவதுடன், அப்பகுதியிலுள்ள வன சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். மக்களுக்கும் நோய் அபாயம் உள்ளது. இந்த முடிவை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்" என்றனர்.

1927-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது மார்லிமந்து நீர்த்தேக்கத்தின் தோற்றம்.

நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் வேணுகோபால் கூறும்போது, "1971-ம் ஆண்டு உதகை நகரம், அதன் வரலாற்றில் மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டது. அப்போது, உதகையின் நீர்த்தேக்கங்களுக்கு துணைபுரியும் வகையில் பார்சன்ஸ்வேலி நீர், உதகை நகரத்தை காப்பாற்றியது. தற்போது, முன்மொழியப்பட்டுள்ள மார்லிமந்து திட்டம், உதகை நகரின் எதிர்கால நீர் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது.

முதலில் தோடா குக்கிராமமாக மார்லிமந்து இருந்தது. இது நகரின் பழமையான குடிநீர் தேக்கம். நீர்த்தேக்கத்தின் தோண்டுதல் பணி 1868-ல் தொடங்கி 1870-ல் நிறைவடைந்தது. கரையில் உள்ள கற்பூர மரங்கள் 1860-ம் ஆண்டு நடப்பட்டவை. இவை நீர்த்தேக்கத்தைவிட பழமையானவை. நீர்த்தேக்கத்தின் முக்கியத்துவம் கருதி, 1877-ம் ஆண்டு நீர்த்தேக்கத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை, உரிமையாளர்களுக்கு இழப்பீடு கொடுத்து பிரிட்டிஷ் அரசு கையகப்படுத்தியது.

மேலும், வருங்காலத்தில் நீர்த்தேக்கத்தைப் பாதுகாக்க, நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள 177 ஏக்கர் நிலத்தை 1899-ம் ஆண்டு ரூ.2 லட்சத்துக்கு அரசு வாங்கியது. ஆனால், தற்போது நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியான காடுகளை அழித்து விவசாய பணிக்கு அனுமதிக்கும் நகராட்சியின் முன்மொழிவு, நகர் மற்றும் நீர் திட்டமிடல் விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.

1978-ம் ஆண்டு உதகையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம், கோடப்பமந்து நீர்த்தேக்கத்துக்கு மேல் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியில் காடுகளை அழித்ததால் பெரும் நிலச்சரிவுக்கு வழிவகுத்து, நகரம் முழுவதையும் சிதைத்தது என்பதை அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டால், மார்லிமந்து நீர்த்தேக்கத்துக்கும் இதே கதிதான் ஏற்படும்.

மார்லிமந்து அணையை ஒட்டி பல ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட திட்டமிட்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். இதுகுறித்து முதல்வர், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது" என்றார். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "நகர்மன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டால் மட்டுமே நிலம் குத்தகைக்கு விடப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

மேலும்