நரசிங்கம்பட்டி பெருமாள்மலையை பல்லுயிரிய மரபு தளமாக தமிழக அரசு அறிவிக்குமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ஏழு வகை பெருங்கற்கால சின்னங்கள் நரசிங்கம்பட்டி பெருமாள்மலை அடிவாரத்தினை பல்லுயிரிய மரபு தளமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பல்லுயிரிய மரபு தளங்கள் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகள் தனித்துவமான மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் அமைப்புகளாகக் கருதப்படுகின்றன. அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் சூழலியல் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மீனாட்சிபுரம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட 53.580 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மலைக் குன்றுகளையும், அரிட்டாபட்டி வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட 139.635 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மலைக் குன்றுகளையும் உள்ளடக்கிய மொத்தம் 193.215 ஹெக்டேர் (477.4 ஏக்கர்) பரப்பை பல்லுயிரிய மரபு தளமாக கடந்த 22.11.2022 அன்று தமிழகத்தின் முதல் பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவித்தது தமிழக அரசு.

இந்த பல்லுயிரிய மரபு தளத்துடன் நரசிங்கம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட பெருமாள்மலை அடிவாரத்தில் பெருங்கற்கால சின்னங்களையும் இணைத்து மரபு தளமாக அறிவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 02.10.24 அன்று நடைபெற்ற நரசிங்கம்பட்டி கிராம சபை கூட்டத்தில் ஊர் மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன் கூறியதாவது: “அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள கழிஞ்சமலை, நாட்டார் மலை, ராமாயி மலை, ஆப்ட்டான் மலை, கழுகு மலை, ஓவா மலை, தேன்கூடு மலை, கூகைக்கத்தி மலை உள்ளிட்ட ஏழு மலைக்குன்றுகள் பல்லுயிரிய மரபு தளமாக விளங்குகிறது. வரலாற்று நோக்கில் பார்த்தால் இங்கு கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டு, சமணர் கற்படுக்கை, தீர்த்தங்கர் புடைப்புச் சிற்பம், வட்டெழுத்துக் கல்வெட்டு, பிற்கால பாண்டியர்களின் குடைவரைக் கோயில், கற்கோயில், மடைத்தூண் கல்வெட்டு காணப்படுகின்றன.

வனத்துறையின் கீழ் பாதுகாப்பட்ட வனப்பகுதியாக விளங்கும் பெருமாள் மலையின் வடக்குச் சரிவில் இந்த அரிட்டாபட்டி கிராமமும் அம்மலையின் தெற்குச் சரிவில் நரசிங்கம்பட்டி கிராமமும் அமைந்துள்ளது. பெரிய பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்களை அமைத்து மக்கள் வாழ்ந்த காலத்தைப் பெருங்கற்காலம் என வரலாற்று ஆசிரியர்கள் வரையறை செய்துள்ளனர். பெருங்கற்காலம் 5000 முதல் 3000 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்டதாக இருக்கலாம். இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ அல்லது அவர்களது எலும்புகளைப் புதைத்த இடத்திலோ பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் பெருங்கற்படைச் சின்னங்கள் என்பர்.

தீபகற்ப இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பெருங்கற்படைச் சின்னங்கள் உள்ளன. இவற்றை தாழிகள் (Urns), ஈமப்பேழைகள் (Sacrophagus), கற்பதுக்கைகள் (Cists), கற்திட்டைகள் (Dolmens), குத்துக்கற்கள், நெடுங்கற்கள் (Menhirs), மனித உருவ குத்துக்கற்கள் (Anthropomorphic), கல்வட்டங்கள் (Stone Circle), கற்குவை வட்டங்கள் (Cairn Circle), குத்துக்கல் வரிசை (Stone Alignment), இரட்டைக்கல் வரிசை (Stone Avenue), தொப்பிக்கல், குடைக்கல் (Cap Stone) போன்றவை உள்ளன.

இவற்றில் தாழிகள், கற்பதுக்கைகள், கற்திட்டைகள், குத்துக்கற்கள், கல்வட்டம், கற்குவை வட்டங்கள், குத்துக்கள் வரிசை உள்ளிட்ட ஏழு வகை பெருங்கற்கால சின்னங்கள் நரசிங்கம்பட்டி ஏமக்கோவில் பகுதியில் உள்ள ஈமாக்காட்டில் காணப்படுகிறது. ஏமக்கோயில் ஈமக்காடு பெருமாள் மடலின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பெருங்கற்கால சின்னங்களை கொண்ட நரசிங்கமபட்டி ஈமாக்காடு வனப்பகுதிக்குட்பட்ட இடத்திலும், வருவாய்துறைக்குட்பட்ட இடத்திலும் என சுமார் இருபது ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது.

வனப்பகுதியான பெருமாள் மலை அடிவாரம் என்பதால் புள்ளிமான்கள், மிளா, கேளையாடு, தேவாங்கு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பாலூட்டி வகை காட்டுயிர்கள் இங்கே வாழ்கின்றன. கழுகு, பருந்து, வல்லூறு, மரங்கொத்தி, பூங்குயில், நாகணவாய், தேன்சிட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பறவைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. வரலாற்று நோக்கிலும், பல்லுயிரிய நோக்கிலும் முக்கியம் வாய்ந்த பகுதியான நரசிங்கம்பட்டி ஈமக்காடு பாதுகாக்கப்பட வேண்டும்.

நரசிங்கம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட பெருமாள்மலை அடிவாரத்தில் பெருங்கற்கால சின்னங்கள் அமைந்துள்ள 30 ஏக்கர் பரப்பளவு நிலத்தை வனத்துறையும், வரவாய்த்துறையும் அளவீடு செய்து பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

15 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

19 days ago

சுற்றுச்சூழல்

19 days ago

சுற்றுச்சூழல்

21 days ago

சுற்றுச்சூழல்

23 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

மேலும்