187 வகை தாவரங்கள், 98 வகை பறவைகள், 23 வகை விலங்குகள்... பல்லுயிரிய மரபு தளம் ஆகுமா வெள்ளிமலை கோயில்காடு?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: 187 வகை தாவரங்கள், 98 வகை பறவைகள், 23 வகை விலங்குகள் நிறைந்த வெள்ளிமலை கோயில்காடு பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை அருகே வெள்ளிமலை கோயில் காட்டினை பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க வேண்டும் என்று ஆட்சியர் சங்கீதாவிடம் மதுரை இடையப்பட்டி, தெற்கமூர், சொருகுளிப்பட்டி ஊர் மக்கள் மற்றும் வெள்ளிமலை கோயில்காடு பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் பொறுப்பாளர்கள் வெ. கார்த்திக், முரா. பாரதிதாசன் இன்று மனு வழங்கினர்.

மதுரை மாவட்டம் கிழக்கு மற்றும் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட இடையப்பட்டி, தெற்காமூர், சொருகுளிபட்டி, முக்கம்பட்டி, திருவாதவூர், வேப்படப்பு உள்ளிட்ட ஊர்களில் சுமார் 1,500 ஏக்கர் அளவிற்கு பரவி இருக்கிற பசுமை பரப்பாக வெள்ளிமலை கோயில்காடு திகழ்கிறது. இப்பகுதி மரங்கள் அடர்ந்து இயற்கையான புதர்காடாக இருந்தாலும் வருவாய்த்துறை ஆவணத்தில் தரிசுநிலம் என்றே குறிப்பிடப்படுகிறது.

அதன் காரணமாக, மத்திய ராணுவப்படை முகாம்கள், தமிழ்நாடு அரசின் காவலர் பயிற்சிப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்களுக்காக வெள்ளிமலை கோயில்காட்டின் பல ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் ஏறக்குறைய 500 ஏக்கர் கோயில்காட்டின் பரப்பு அழிக்கப்பட்டுள்ளது. மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக 10 வருடங்கள் மேற்கொண்ட ஆய்வில் வெள்ளிமலை கோயில்காட்டில் 187 வகை தாவரங்கள், 98 வகை பறவைகள், 23 பாலூட்டி வகை விலங்குகள், 43 வகை வண்ணத்துப்பூச்சிகள் ஆவணம் செய்யப்பட்டது.

இக்காட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட தாவரங்களை மக்கள் மூலிகையாக பயன்படுத்தி வருகின்றனர். அதனால், வெள்ளிமலை கோயில்காடு பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து ஆட்சியர் சங்கீதாவிடம் மதுரை இடையப்பட்டி, தெற்கமூர், சொருகுளிப்பட்டி ஊர் மக்கள் மற்றும் வெள்ளிமலை கோயில்காடு பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் பொறுப்பாளர்கள் வெ. கார்த்திக், முரா.பாரதிதாசன் இன்று மனு வழங்கினர்.

அவர்கள் அந்த மனுவில்,"இக்கோயில்காட்டில் வெள்ளிமலை, ஓவாமலை, ஒத்தமலை, குன்றுகளும், தாமரம் கண்மாய், சேங்கை, முத்துப்பிள்ளை ஊரணியும், தண்ணித்தாவு, தொந்தி கருப்பி ஊரணி உள்ளிட்ட நீர்நிலைகளும் உள்ளன. மதுரை எங்கும் பரவியிருந்த நீர் கடம்பு மரங்கள் இன்று அருகிவிட்டது. இயற்கையாக எங்கும் வளர்வதில்லை. ஆனால் வெள்ளிமலைக் கோயில்கட்டில், 200-க்கும் மேற்பட்ட நீர்க்கடம்ப மரக்கன்றுகள் இயற்கையாக வளருகின்றன.

300 ஆண்டுகள் பழமையான நீர்க்கடம்ப மரம் கடம்ப முனியாக இங்குள்ள மக்களால் வழிபடபடுகிறது. மதுரை மாவட்டத்தில் அரிதாகிப் போன தேற்றா மரம் வெள்ளிமலை கோயில்காட்டில் தெய்வமாக வழிபடப்படுகிறது. ஈராயிரமாண்டு பழமையான திருவாதவூர் ஓவாமலை தமிழி கல்வெட்டும், சமணர் படுக்கையும், பாறை ஓவியங்களும் வெள்ளிமலை புதர்காட்டில் காணப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்வன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டும் இக்கோயில் காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பண்பாட்டு நோக்கிலும், பல்லுயிரிய நோக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படும் வெள்ளிமலை கோயில்காடு பல்லுயிரிய மரபு தளமாக அறிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் 14.11.2023 பதில் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் வெள்ளிமலை கோயில் காட்டினை பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்கும் நடவடிக்கைகளை விரிவுப்படுத்த வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

18 hours ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

19 days ago

சுற்றுச்சூழல்

19 days ago

மேலும்