கடலை கவனியுங்கள்

By செய்திப்பிரிவு


சி .வேல்விழி

கடலில் சேரும் குப்பைகள் உலகளவில் பெரிய சவாலான பிரச்சனையாக மாறி வருகிறது. கடற்கரை பகுதிகளில் கைவிடப்பட்ட, வீணடிக்கப்பட்ட தூக்கிவீசப்பட்ட, ஓதுங்கியபொருட்கல் குப்பைகளாக மாறுகின்றன. 99% கடல் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்களாகும்.

ஆண்டுதோறும் சுமார் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் நுழைகின்றன, 150 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் ஏற்கனவே கடல்களை மாசுபடுத்திவிட்டன, மேலும் 100,000 கடல் விலங்குகள் ஆண்டுதோறும் பிளாஸ்டிக் கடல் குப்பைகளில் சிக்கி இறக்கின்றன. கடலிலுள்ள குப்பைகள் பெருங்கடல்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மனித நல்வாழ்வை அச்சுறுத்துகிறது.

மூன்று வகைகள்

உலகளவில், கடலோரப் பகுதிகளில் மூன்று விதங்களில் இந்த குப்பைகள் கடலுக்கு வந்து சேருகின்றன . முதலாவது, நிலம் சார்ந்த ஆதாரங்கள் - வீட்டுக் கழிவுகள், விவசாய கழிவுகள் மற்றும் மருத்துவமனை கழிவுகள். இரண்டாவது கடல் சார்ந்த ஆதாரங்கள் - கப்பல் போக்குவரத்து, மீன்பிடித்தல், சுற்றுலா மூலம் வரக்கூடிய கழிவுகள். மூன்றவாது இயற்கை காரணிகள் - அதிக காற்று, நீரோட்டம் , மற்றும் ஆறுகள் மூலமாக அடித்துவரக்கூடிய கழிவுகள்.

இவ்வாறு வரும் குப்பைகள் கடல் சுற்றுச்சூழலின் ஆரோக்கியம், சார்ந்திருக்கும் மக்களின் சமூக-பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை அதிகமாக பாதிக்கிறது. மேலும் இவ்வாறு வரும் கடல் குப்பைகளை சேகரிப்பது என்பது இந்தியா போன்ற நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த கடல் குப்பைகள் நீடித்த கடற்கரை மாசுபாடு, கடலோர சுற்றுச்சூழல் மற்றும் மனித நல்வாழ்வுக்கான தீங்குகளை விளைவிப்பதுடன் கடல் சார்ந்த பல்லுயிர்களுக்கு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன

இந்த நிலையில் கடல் குப்பைகளை திறம்பட சமாளிக்க வேண்டுமானால் இருப்பிடம் சார்ந்த ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை உத்திகள், நாடு தழுவிய மேம்படுத்தப்பட்ட கொள்கை கட்டமைப்புகள், தொடர்ச்சியான சமூக ஈடுபாடு மற்றும் கல்வி மற்றும் (iv) மிக முக்கியமாக, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேவையாக உள்ளது.

மீனவ சமூகங்களில்

கடல் குப்பைகள் மீதான உலகளாவிய அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் ம.ச.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடலோர வளங்கள் மற்றும் மீன்வளம் பிரிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் தொடர் கடலோர தூய்மைப் பணிகளை கடலோர சமூகத்துடன் இணைந்து ஒருங்கிணைத்து வருகிறது.இந்த முயற்சி ஒரு சிறிய திட்டமாகத் தொடங்கி, தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் சமூகக் கூட்டு இயக்கமாக மாறியுள்ளது. சுற்றுச்சூழலில் கடல் குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மீனவ சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களை கடல் குப்பை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தி அவற்றை மீண்டும் கடற்கரையை வந்து அடையாமல் மேலாண்மை செய்வதும் இந்த முயற்சிகளின் முதன்மையான நோக்கமாகும்.

இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக கடந்த 2019 ஆண்டு முதல் சர்வதேச கடலோர தூய்மை தினத்தன்று கடலோர தூய்மை பணி (ICCD) ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் தொடர்ந்து நடத்த பட்டு வரும் இந்த முயற்சிகளின் விளைவாக சுமார் 22.58 டன் குப்பைகள் இதுவரை கடற்கரை ஓரங்களிலிருந்து வெற்றிகரமாக அகற்றபட்டுள்ளன. இதில் பிளாஸ்டிக் குப்பைகள், பாட்டில்கள், பாதணிகள் மற்றும் நகர்ப்புற வீடுகளில் இருந்து கடலில் கலக்கும் பிற கழிவுகளும் அடங்கும். இந்த கூட்டு முயற்சியில் உள்ளூர் மீனவ சமூகங்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 1676க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 25 மீனவர் சங்கங்கள் மற்றும் -1100 க்கும் மேற்பட்ட விசை படகு உரிமையாளர்கள் இந்த கூட்டு உறுதிப்பாட்டை ஆதரித்து, கரையோரங்களில் உள்ள குப்பைகளை தாமாகவே முன்வந்து வழக்கமான அடிப்படையில் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். கடல் குப்பைகளை எதிர்த்துபபோராடுவதிலும் பெருங்கடல்களைப் பாதுகாப்பதிலும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

அந்தவகையில் ஒவ்வொரு நாளும் கடலோர சுத்தப்படுத்தும் நாளாக மாறும் வகையில் ஒரு முழுமையான அணுகுமுறையை உருவாக்கும்போது கடலை மட்டுமல்ல அந்த கடலை நம்பி இருக்கக்கூடிய மக்களையும் காப்பாற்றமுடியும்.

செப்டம்பர் 21 : சர்வதேச கடல் தூய்மை தினம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE