பழவேற்காடு, எண்ணூரில் காக்கா ஆழி சிப்பிகளை அகற்றும் தொழில்நுட்பம் என்ன? - பசுமைத் தீர்ப்பாயம் 

By ச.கார்த்திகேயன்

சென்னை: எண்ணூர் முகத்துவாரம், பழவேற்காடு பகுதிகளில் காக்கா ஆழி வகை சிப்பிகளை அகற்ற எத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூரை சேர்ந்த மீனவர் குமரேசன் சூளூரான் என்பவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பழவேற்காடு உவர் நீர் ஏரி, எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் தென் அமெரிக்க பகுதி உயிரினமான காக்கா ஆழி வகை சிப்பிகள் அதிக அளவில் பெருகி வருகின்றன. இவை மீன்கள், இறால், நண்டு உற்பத்தியை தடுப்பதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் அவை தரை பரப்பில் பாறை போன்று படிந்திருப்பதால் படகுகளையும் இயக்க முடியவில்லை. எனவே இந்த காக்கா ஆழி வகை சிப்பிகளை முழுவதுமாக அகற்ற தொடர்புடைய துறைக்கு உத்தரவிட வேண்டும், என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அமர்வின் உறுப்பினர்கள், “தலைமைச் செயலர் தலைமையில், சுற்றுச்சூழல், மீன் வளம், நீர்வளம் ஆகிய துறைகளின் செயலர்கள், ஈரநில ஆணைய உறுப்பினர் செயலர், 3 துறைமுகங்களின் தலைவர்கள் கூடி, கலந்தாலோசித்து சிப்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் இன்று (செப்.9) விசாரணைக்கு வந்தது. அப்போது நவீன தொழில்நுட்பத்தின் மூலம் காக்கா ஆழி சிப்பிகளை அகற்ற இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காக்கா ஆழி சிப்பிகளை அகற்றும் தொழில்நுட்பம் குறித்து, வரும் செப்.11-ம் தேதி விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE