கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை: நெறிமுறைகள் என்னென்ன?

By கி.கணேஷ்

சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறையை தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தயாரித்துள்ளது.

தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் 128-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகளில் விதிமீறல்கள் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கை, விதிமீறல் வழக்குகளை கையாளும்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.மேலும், விதிமீறல் தொடர்பான புகார்கள் மீதான நடவடிக்கையை பொறுத்தவரை, 160 புகார்கள் பெறப்பட்டு, அந்த புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப்பகுதிகளில் விதிகளை கருத்தில் கொள்ளாமல், நகர ஊரமைப்பு இயக்ககம் போன்ற உள்ளூர் திட்டக்குழுமங்கள் மற்றும் சில ஊராட்சி தலைவர்கள் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதிகளை வழங்குவதாகவும், மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால் இவற்றை கண்காணிக்க இயலவில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசில் சுற்றுச்சூழல் துறை கடந்த 1995-ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டதாகவும், அதன்பின், 25 ஆண்டுகளாக இந்த துறைக்கென தனியாக எந்த ஒரு மண்டல, மாவட்ட அலுவலகமும் இல்லை என்பதால், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகர ஊரமைப்பு இயக்ககம், சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி உள்ளிட்டவற்றின் மூலமே கடற்கரை ஒழுங்கு முறை மண்டல விதிகளை அமல்படுத்தி வருகிறோம். எனவே, மாவட்ட கடற்கரை மண்ட மேலாண்மை ஆணையத்துக்கு என தனியான அதிகாரம் இல்லை. எனவே, விதிமீறல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை.

எனவே, வழிகாட்டு நெறிமுறைகள் தேவைப்படுகின்றன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு கடந்த மே 8ம் தேதி கோரிக்கை வைக்கப்பட்டது ஆனால், இதுவரை எந்த பதிலும் வராத நிலையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமீறல்களை கையாள, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதை ஒட்டி, வரைவு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்: > விதிமீறல் தொடர்பாக பெறப்படும் புகார்களை துறையின் ஜிஐஎஸ் செல் மூலம், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்குள் அந்த பகுதி வருகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

> விதிமீறல் கண்டறியப்பட்டால், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கையை மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணைய தலைவரான மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

> அந்த அறிக்கையின் அடிப்படையில், கடற்கரை மண்டல மேலாண்மை வரைபடத்துடன் ஒப்பிட்டு பார்த்து, விரிவான அறிக்கையை தயாரிக்க வேண்டும்.

> மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் விதிமீறல் நடைபெற்றிருப்பதை கண்டறியும் பட்சத்தில், மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

> இந்த அறிக்கையை மாநில கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்து இது தொடர்பாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

> இந்த தீர்மானத்தின் படி விதிமீறலில் ஈடுபட்டவருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்.இதனைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தேதியில் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

> விதிமீறலில் ஈடுபட்டவரின் பதில் திருப்திகரமாக இல்லையென்றால் விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறை ஏற்கப்படும் பட்சத்தில், விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE