வி
வசாயத்தில் இறங்கத் தயங்குபவர்கள், அந்தத் தயக்கத்துக்கான காரணங்களாகப் பல விஷயங்களை முன் வைக்கிறார்கள். சரியான முதலீடு இல்லை, போதிய அனுபவம் இல்லை, நிலையான வருமானம் இல்லை, லாபம் தரும் சந்தை இல்லை என ‘இல்லை’களின் பட்டியல் நீளும்.
‘விவசாயம் செய்வதற்கு இவை எல்லாம் எதற்கு? மனமிருந்தால் போதும். மகசூல் கொழிக்கும்!’ என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துக்கிறார்கள் பெரம்பலூரைச் சேர்ந்த தந்தையும் மகனும்!
இயற்கையில் ஐக்கியம்
மேற்கண்ட ‘இல்லை’களுடன், இவர்களுக்குச் சொந்தமாக நிலமும் இல்லை. என்றபோதும் முழு மனதாக இயற்கை வேளாண்மையில் 10 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்கள். பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராம எல்லையில் அவர்களின் குத்தகை வயலில் இருவரையும் சந்தித்தோம்…
“சின்ன வயசுல இருந்தே நமக்கு ஜீவனம் விவசாயம்தாங்க. பூர்வீக நிலம் நான்கு ஏக்கர். அதை 11 வாரிசுகளுக்குப் பங்கிட்டதுல எனக்கு ஒண்ணும் கிடைக்கலை” என்று தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கினார் ஆறுமுகம்.
“போர்வெல் லாரி டிரைவரா சில வருஷம் ஓடினேன். அதில் பல ஊரு, பல தண்ணி, பல வகையான விவசாயம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு விபத்துல அடிபட்டு வீட்டில் முடங்கியபோது, இனி விவசாயம்தான்னு முடிவாச்சு. அப்போ நிறைய வாசிச்சதுல இயற்கை விவசாயம் ஈர்த்தது. முன்னோடி விவசாயிகளைத் தேடிப் பிடிச்சு சிலதைக் கத்துக்கிட்டேன். குத்தகைக்குக் கிடைச்ச நிலத்துல குடும்பத்தோட இறங்கி உழைச்சோம். பெரிசா வருமானம் கிடைக்கலைன்னாலும் உடம்புக்கு நோய் நொடி வராம இயற்கை வேளாண்மை காப்பாத்திச்சு. சுயசார்பு வேளாண்மை பத்தியும் நம்மாழ்வார் ஐயா காட்டிய வழிமுறைகள் பத்தியும் தெரிஞ்சதும், முழுசா இயற்கை வேளாண்மையில் ஐக்கியமாகிட்டேன்” என்கிறார்.
பிள்ளைகளின் பெருமிதம்
இப்படி உழைத்து தன் வாரிசுகளைக் கல்லூரிவரை படிக்க வைத்துள்ள அதேநேரம் அவர்களை இயல்பாக வேளாண்மையில் நாட்டம் கொள்ளவும் வைத்திருக்கிறார். இவருடைய இளைய மகன் கார்த்திகேயன் பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றும், தந்தையுடன் சேர்ந்து வயலில் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
“வாழ்க்கையில் நம்ம பிள்ளைங்க உழைக்கணும், உயரணும்னு எல்லாப் பெற்றோர்களும் நினைக்கிறாங்க. ஆனா எது உயர்வுங்கிற புரிதல் இல்லாமப் போச்சு. நான் படிச்ச படிப்புக்குப் பொருத்தமில்லாம, என்னை என் அப்பா, சகதியில இறக்கிவிட்டதா பலரும் வருத்தப்பட்டிருக்காங்க. உண்மை என்னன்னா, வயலில் விளைந்த காய்கறி, கீரையைத் தெருத்தெருவா நாங்களே கொண்டுபோய் வித்துதான் எங்களோட படிப்பைச் சமாளிச்சோம். அதுல எங்களுக்குப் பெருமிதம் உண்டு. கார்பரேட் வேலையைவிடக் கழனியில் இறங்கி செய்யிற வேளாண்மைதான் உயர்வானதுன்னு முடிவெடுத்து என் அப்பாவுக்கு உதவியா இருக்கேன்” என்று பெருமை பொங்கச் சொல்கிறார் கார்த்திகேயன்.
உள்ளங்கையில் உருளும் சந்தை
சாமந்தி, கோழிக்கொண்டை எனப் பூக்கள்; கத்தரி, வெண்டை, தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை எனக் காய்கறிகள்; துவரை, தட்டைப்பயறு, நரிப்பயறு உள்ளிட்ட பருப்பு வகைகள்; கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, திணை, வரகு, பனிவரகு, இருங்குசோளம் உள்ளிட்ட சிறுதானிய வகைகள்; பாரம்பரிய நெல் ரகங்கள் என இவர்கள் பரவலாகப் பயிரிடுகிறார்கள். எளம்பலூரிலும் அருகிலுள்ள கிராமங்களிலுமாக சுமார் 20 ஏக்கரில் இவற்றை விளைவித்து விற்பனை செய்து வருகின்றனர்.
அறுவடை செய்வதுடன் அவற்றைத் தூய்மை செய்வது, அரைப்பது, மதிப்புக்கூட்டுப் பொருளாக்குவது எனச் சந்தைப்படுத்தலிலும் வெற்றிகரமாக ஈடுபடுகிறார்கள். தாங்கள் பயிரிடாத கரும்பு போன்றவற்றை வெளியிடங்களில் வாங்கி, இயற்கை முறையில் வெல்லமாக்கி அவற்றையும் விற்கிறார்கள். சந்தை அனுபவம் இல்லாத விவசாயிகளிடமிருந்து பருப்புகளையும் எண்ணெய் ரகங்களையும் பெற்று விற்க உதவுகிறார்கள்.
சந்தை உத்திகள், மதிப்புக் கூட்டலின் மகத்துவம் போன்ற களச்செயல்பாடுகளுக்கு கார்த்திகேயனின் படிப்பு கைகொடுக்கிறது. வாட்ஸ் அப், முகநூல் குழுக்களை உருவாக்கி, சிரமமின்றி மெய்நிகர் சந்தையை இவர் கையாளுகிறார்.
விவசாயப் பயிற்சி வீடு
“இயற்கை உணவுப் பொருட்கள் மேல மக்களுக்கு ஆர்வமிருந்தாலும், நடைமுறைச் சிக்கல்களால தடுமாறுறாங்க. உதாரணத்துக்கு, சிவப்பரிசையை விரும்பி வாங்குறாங்க. ஆனா அவற்றைச் சோறா வடிச்சு சாப்பிட கஷ்டப்படுறாங்க. அதனால அவற்றை அவல், புட்டு மாவு எனவும், சிறுதானியங்களை பிஸ்கெட், இனிப்புகளாக்கியும் கொடுத்தா சீக்கிரமா வித்துத் தீருது. ரசாயனம் சேர்க்காத வெல்லம், எண்ணெய்யைத் தேடி வந்து வாங்குறாங்க. எனவே, உழவுத் தொழிலில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் கார்த்திகேயன்.
படிக்கும், பணியில் இருக்கும் இளைஞர்கள் பலர் இவரைத் தேடிவந்து பயிற்சி பெற்றுச் செல்கிறார்கள். தந்தையும் மகனுமாக இயற்கை வேளாண்மைப் பயிலரங்குகள், மாற்றுச் சந்தை விழிப்புணர்வுக் கூட்டங்கள் ஆகியவற்றை ஊர் ஊராகச் சென்று நடத்துகின்றனர். வேளாண் கல்லூரி மாணவர்கள் பலர் அனுபவப் பாடத்துக்காக ஆறுமுகம் வீட்டில் தங்கியிருந்து கார்த்திகேயனுடன் வயலில் இறங்குகின்றனர். பாரம்பரிய ரகங்களைத் தேடிப் பிடித்து அவற்றை மீட்டுருவாக்கி வருவது, இயற்கை வேளாண் விதைகளைப் பரப்புவது, இயற்கை உழவர்களை ஒருங்கிணைப்பது, பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களை மொத்தமாக உற்பத்தி செய்வது, மாற்றுச் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவது எனப் பல நிலைகளில் இருவரும் செயல்பட்டு வருகின்றனர்.
வாழ்க விவசாய வித்தகர்கள்!
கார்த்திகேயன் தொடர்புக்கு: 75022 61622
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
6 hours ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
21 days ago