சுற்றுச்சூழல் பாதிப்புக்கு தீர்வு காண அனைவரும் பாடுபட வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சுற்றுச்சூழல் பாதிப்பு உலகளாவிய பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு தீர்வு காண நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வலியுறுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி, வழக்கறிஞர் நவீன்குமார் மூர்த்தி ஆகியோர் எழுதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு சட்டங்கள் (Comprehensive Commentary on Environmental Protection and Pollution Control Laws) குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:

சுற்றுச்சூழல் பிரச்சினை உலகளாவியது. ஆனால், அதற்கான தீர்வு உள்ளூரில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். யாரும்தனித்து இயங்க முடியாது. செடி,கொடிகள், காற்று, குடிநீர் போன்றவற்றை சார்ந்துதான் நாம் இயங்கியாக வேண்டும். நமது முன்னோர்கள் சொன்னபடி செயல்படாததால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம்.

சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மனிதர்கள் இடம்பெயர்தல் முக்கிய காரணமாக இருக்கிறது. தனது தேவைக்காக மனிதன் இயற்கையை அழித்தான். கட்டிடத்தின் மதிப்பை கணக்கிடும் மனிதன், மரங்களின் மதிப்பை அறிவதில்லை. நகரமயமாக்கல் போன்ற செயல்பாடுகளால் சில உயிரினங்கள் காணாமலேயே போய்விட்டன. மாசுபட்ட தண்ணீரால் பல நோய்கள் வருகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பை நாம் இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் மனிதனின் ஆயுள்காலம் குறைகிறது. சமுதாயத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.

மாசு இல்லாத எதிர்காலம்: எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு தேவையான மாற்றம் நம் ஒவ்வொருவரிடத்தில் இருந்தும் வர வேண்டும். இந்த நோக்கம் குறுகிய கண்ணோட்டமாக இருக்கக்கூடாது. பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், காடுகள் அழிப்பு, கார்பன் மாசு போன்றவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். காலநிலை மாற்றத்தை தணிப்பது, வனப்பாதுகாப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு போன்றவற்றை செய்வதன்மூலம் மாசு இல்லாத எதிர்காலத்தை உருவாக்கிட முடியும். சரியான நேரத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இவ்வாறு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார்.

இவ்விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விசுவநாதன் பேசுகையில், “இந்த புத்தகத்தில் 11 பகுதிகள் இடம்பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் குறித்து சர்வதேச மாநாடுகள், கடலோர மண்டல மேலாண்மை ஒழுங்குமுறை அறிவிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், அதுதொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், அதன்பேரில் மாநில அரசுகள், மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிக்கைகள் உள்ளிட்டவை விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்தால் வயநாடு, உத்தராகண்ட்டில் அண்மையில் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்னமும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது." என்று தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் காணொலி காட்சி வழியில் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, புத்தக ஆசிரியரும் வழக்கறிஞருமான நவீன்குமார் மூர்த்தி வரவேற்றார். நிறைவில், புத்தக ஆசிரியரும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி.ஜோதிமணி நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE