பொது கடல் பகுதியில் பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

சென்னை: பொது கடல் பகுதியில் பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தத்தில் இந்தியா அடுத்தமாதம் கையெழுத்திட உள்ளதாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆலோசகர் பி.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடா திட்ட அரசு நிறுவனங்களுக்கு இடையிலான அமைப்பு, ஹை சீஸ் அலையன்ஸ், ரைஸ் அப் நிறுவனம் ஆகியவை சார்பில், நாடுகளின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பல்லுயிர் பெருக்கம் குறித்த 2 நாள்கருத்தரங்கு சென்னையில் நேற்றுதொடங்கியது.

இதில், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆலோசகர் பி.கே.ஸ்ரீவஸ்தவா பேசும்போது, ‘‘நாடுகளின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பொது கடல் (ஹைசீஸ்) பகுதியில் பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தத்தில் இந்தியா அடுத்த ஆண்டு கையெழுத்திட உள்ளது. இதற்குமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தால் ஏற்படும் வளர்ச்சியை கண்காணிக்க புவி அறிவியல் அமைச்சகம் பிரத்யேக நிறுவன அமைப்பை உருவாக்கும். ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் உள்ள ஒழுங்குமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த அமைப்பு ஆய்வு செய்யும்’’ என்றார்.

இந்த ஒப்பந்தம் மற்றும் கருத்தரங்கு குறித்து, வங்காள விரிகுடா திட்ட அரசு நிறுவனங்களுக்கு இடையிலான அமைப்பின் இயக்குநர் பி.கிருஷ்ணன் கூறியதாவது:

நாடுகள் தங்கள் கடல் எல்லை பகுதியில் 200 நாட்டிகல் மைல் தொலைவுக்கு உட்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள கடல் வளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். 200 நாட்டிகல் மைல் தொலைக்கு அப்பாற்பட்டது பொது கடல் பகுதி.எந்த நாடும் இங்கு மீன்பிடித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனினும், இதை முறைப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் மீன்வளம் உள்ளிட்டவை பாதிக்கப்படும்.

இதை கருத்தில் கொண்டு, பொது கடல் பகுதியில் உள்ள பல்லுயிர்களை காப்பதற்காக, ஐ.நா. சபை சட்டம் இயற்ற தீர்மானித்தது. இதற்காக, கடந்த 20ஆண்டுகளாக பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு, கடந்த 2023மார்ச் மாதம் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

வரும் 2025-ம் ஆண்டுக்குள் 60 நாடுகள் இதை ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டால் மட்டுமே சட்டமாக இயற்றி செயல்படுத்த முடியும். இதுவரை 10 நாடுகள் மட்டுமே கையெழுத்திட்டுள்ளன. ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இந்தியா அடுத்த மாதம் கையெழுத்திடும்.

இந்த நிலையில், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் என்னென்ன தேவைகள் ஏற்படும், எவ்வளவு நிதி தேவை, கையெழுத்திடுவதால் ஏற்படும் நன்மை உள்ளிட்டவை குறித்துஆலோசனை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. 5 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர். 2 நாள் கருத்தரங்கு 28-ம் தேதி (இன்று) நிறைவடைகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE