விரிவாக்கப் பணிகளால் போடிமெட்டு மலைச்சாலை பாறைகளில் பிளவுகள் அதிகரிப்பு

By என்.கணேஷ்ராஜ்

போடி: விரிவாக்கப் பணிகளால் போடிமெட்டு மலைச்சாலையில் உள்ள பெரிய பாறைகளில் அதிகளவில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாறைகள் உடைந்து விழும் அபாயம் தொடர்கிறது.

தேனி மாவட்டத்தில் தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இந்த வனப்பாதை அமைந்துள்ளது. மலையடிவாரமான முந்தலில் இருந்து 20 கி.மீ நீளத்துக்கு இந்த மலைப்பாதை உள்ளது. சாலையின் ஒருபக்கம் செங்குத்தான கற்பாறைகளும் மறுபக்கம் பள்ளத்தாக்குகளும் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இச்சாலை அடுத்தடுத்து பல்வேறு காலகட்டங்களில் அகலப்படுத்தப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் இச்சாலை விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக பல இடங்களிலும் வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்பட்டன. இதனால் 18 அடியாக இருந்த சாலையின் அகலம் தற்போது 24 அடியாக மாறி உள்ளது. இதுபோன்ற விரிவாக்கப் பணியினால் சில ஆண்டுகளாகவே மலை மற்றும் பாறைகளின் தன்மையில் பெரும் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநேரங்களில் இப்பாதையில் மண், பாறை சரிவுகள் அதிகரித்து வருகின்றன.

மேலும், பல பாறைகளிலும் வெடிப்புகளும், பிளவுகளும் அதிகரித்துள்ளன. லேசான கீறலாக தொடங்கும் இப்பாதிப்பு சில மாதங்களில் பெரிய பிளவுகளாக மாறிவிடுகின்றன. இதனால் பெரிய பாறைகள் பல பகுதிகளாக பிளவுற்று அவ்வப்போது சாலையில் துண்டுகளாக விழுகின்றன. இதனால் மழை நேரங்களில் இப்பாதையானது ஆபத்தான பாதையாக மாறி வருகிறது. ஆகவே, பாறைகள் மேலும் வெடிப்பு ஏற்பட்டு சாலைகளில் விழாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், “அந்தச் சாலை செல்லும் இடமும் அதையொட்டிய பாறைகளும் வனத்துறைக்குச் சொந்தமானதாகும். இருப்பினும் ஆபத்தான இடங்களில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் பாறை, மண் சரிவு ஏற்படுவது வெகுவாய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE