வடகரை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை - 16 மணி நேர போராட்டத்துக்கு பின் வனப்பகுதிக்குள் சென்றது!

By த.அசோக் குமார்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து மா, தென்னை, வாழை, நெல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருகின்றன. விவசாய நிலங்களில் உள்ள தண்ணீர் குழாய், வேலிகளையும் உடைத்து சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை சுமார் 6 மணியளவில் வடகரை அருகே கரிசல் குடியிருப்பு கிராமத்தில் விவசாய நிலங்களில் ஒற்றை யானை ஒன்று சுற்றித் திரிந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறைக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும், யானையை பார்க்கச் செல்ல வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரித்தனர். பகல் நேரத்தில் கிராமப் பகுதி வழியாக யானையை வனப்பகுதிக்குள் விரட்டினால் சேதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கருதிய வனத்துறையினர், பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானையை அருகில் உள்ள குளத்துப் பகுதிக்கு விரட்டினர்.

அப்போது யானை விரட்டியதால் ஆறுமுகச் சாமி (53) என்பவர் கீழே விழுந்து காயமடைந்தார். அவரை யானை தாக்க முயன்றபோது, வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டினர். பின்னர், ஆறுமுகச் சாமி மீட்கப்பட்டு, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். யானை குளத்துக்குள் சென்று அங்கேயே சுற்றித் திரிந்தது.

பகல் நேரத்தில் யானை கிராமப் பகுதிக்குள் புகுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு இருந்ததால் குளத்தைச் சுற்றிலும் வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட வன அலுவலர் முருகன், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு ஆலோசனை நடத்தினர்.

பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். பகல் முழுவதும் குளத்தை விட்டு யானை வெளியேறாதவாறு தொடர்ந்து கண்காணித்தனர். யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தினால் அதற்கு மயக்க ஊசி செலுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையின் கால்நடை மருத்துவரும் வரவழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு வடகரையில் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டுக்கு பின்புறம் யானை சென்றது. இதனால் பொதுமக்கள் மேலும் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, பண்பொழி - வடகரை சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, யானை தொந்தரவின்றி சாலையை கடந்து செல்ல ஏற்பாடு செய்தனர். இரவு 10 மணிக்கு மேல் பண்பொழி - வடகரை சாலையை கடந்து யானை வனப்பகுதியை நோக்கிச் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சுமார் 16 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் யானை கிராமத்தைவிட்டு வெளியேறியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். யானையின் பாதுகாப்பு கருதி நேற்று காலையில் இருந்து கரிசல் குடியிடிப்பு, வடகரை, பண்பொழி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு மேல் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று இரவு வடகரை - மேக்கரை பிரதான சாலையில் அன்பு இல்லம் அருகே புகுந்த வேறு 2 யானைகள் சுமார் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை சேதப்படுத்தியது. நெல் பயிர்களையும், வரப்புகளையும் சேதப் படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, யானைகள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து வடகரைச் சேர்ந்த விவசாயி ஜாகிர் உசேன் கூறும்போது, "வடகரை சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். யானைகளுக்கு வனப்பகுதியில் வேறேதும் தொந்தரவுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டு, அவை மீண்டும் விவசாய நிலங்களுக்குள் வராதவாறு அகழி அமைத்தும், வேலி அமைத்தும் யானைகள் வருகையை தடுக்க வேண்டும்" என்று விவசாயி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE