மதுரை | ஊர் பெயருக்கேற்ற மரக்கன்றுகள் நடும் விழா - விழிப்புணர்வு ஏற்படுத்தும் பசுமையாளர்கள் குழுமம்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: மதுரையைச் சுற்றியுள்ள மரங்களின் பெயர்களையுடைய ஊர்களில், 'ஊர் பெயருக்கேற்ற மரக்கன்றுகள் நடும் விழா' இன்று நடைபெற்றது. இதில் மதுரை திருப்பாலையில் அமைச்சர் பி.மூர்த்தி, பாலை மற்றும் வெப்பாலை மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட ஊர்கள் மரங்களின் பெயர்களை கொண்டுள்ளன. ஆனால் அங்கு மண்ணுக்கேற்ற இயல் தாவரங்கள் இல்லை. அயல் தாவரங்களே அதிகமாக உள்ளன. இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த பசுமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பசுமையாளர்கள் குழுமம் என்பதை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி மண்ணுக்கேற்ற இயல் தாவரங்களை நடவும், சூழலுக்கு ஒத்துவராத அயல் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையிலுள்ள அத்திபட்டியில் அத்தி மரம், அரசப்பட்டியில் அரசமரம், ஆத்திக்குளத்தில் ஆத்தி, ஆவியூரில் ஆவி, ஆலங்குளத்தில் ஆலம், ஆலம்பட்டியில் ஆலம், இச்சிக்குளம் கண்மாயில் இச்சி, இலவங்குளத்தில் இலவம், ஈச்சனேரியில் ஈச்சம், காஞ்சரம்பேட்டையில் காஞ்சிரம், கிளாக்குளத்தில் கிளா, குராயூரில் குரா, திருவாதவூரில் வாதமரம், தேத்தாங்குளத்தில் தேத்தா, நெல்லியேந்தல்பட்டியில் நெல்லி, பனைக்குளம், பனையூரில் பனை, புங்கங்குளத்தில் புங்கம், புளியங்குளத்தில் புளி, பூவந்தியில் பூவந்தி, பூலாம்பட்டியில் கரும்பூலா, பெரிய ஆலங்குளத்தில் ஆலம், மருதங்குடியில் மருதம், மருதங்குளத்தில் மருதம், வன்னிவேலம்பட்டியில் வன்னி, வாவிடைமருதூரில் மருதம், வாகைக்குளத்தில் வாகை, விளாங்குடி, விளாச்சேரியில் விளா மரம் என மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் அவ்வூரின் பெயருக்கு பொருத்தமான நாட்டு மரக்கன்றுகள் இன்று நடப்பட்டன.

இதுகுறித்து மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன் கூறுகையில், ''பண்பாட்டு தலைநகரான மதுரைக்கும், மரங்களுக்கும் தொடர்புண்டு. கடம்ப மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் கடம்பவனம் என்றும், மருத மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் திருமருதத்துறை என்றும் மதுரை அழைக்கப்பட்டது. ஆனால் மதுரை நகருக்குள் இன்று சொற்பான கடம்ப மரங்கள், மருத மரங்களே உள்ளன. மண்ணுக்கேற்ற இயல் தாவரங்கள் இல்லாமல் அயல் தாவரங்களான தூங்கு மூஞ்சி மரம், குல்முகர் மரம் போன்றவை சாலைகளை அலங்கரிக்கின்றன.

பல இடங்களில் ஊரின் அடையாளமாக விளங்கிய மரங்கள் ஒன்றுகூட இல்லை. இன்றைய தலைமுறைக்கு தங்களது ஊரின் பெயரில் இருப்பது மரங்களின் பெயர் என்ற விழிப்புணர்வும் இல்லை. நம் மண்ணுக்கேற்ற இயல் தாவரங்களை நட வேண்டும் என முடிவெடுத்தோம். பாரம்பரிய மரங்களை இழந்து நிற்கும் மதுரையின் பல்லுயிர் சூழலை மீட்கும் நோக்கோடு ஊர் பெயருக்கேற்ற மரக்கன்றுகளை நடும் விழா தொடங்கியுள்ளோம்.

சங்க இலக்கியம் குறிப்பிட்ட மரங்கள் நடுதல், ஊர் பெயரில் உள்ள மரக்கன்றுகளை நடுதல், கோயில் தல மரங்களை அடையாளம் கண்டு நடுதல், வழிபாட்டில் உள்ள பழமையான மரங்களை பாதுகாத்தல், கோயில் கட்டில் உள்ள மரங்களை பாதுகாத்தல் என மரக்கன்று நடும் பணியை ஒரு பண்பாட்டு இயக்கமாக நடத்தி வருகிறோம். அதே சமயம் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்து செயல்படும் அறிவியல்பூர்வமான இயக்கமாகவும் மரக்கன்று நடும் பணியை மேற்கொள்கிறோம். அயல் மரங்களை தவிர்த்து, இயல் தாவர வகை மரங்கள் அல்லது நம் மண்ணின் மரங்களை நடும் சிந்தனையை பரவலாக்குவோம்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE