செங்கல் சூளைகள் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் புதிய உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: செங்கல் சூளைகளுக்கு இடையே 1 கி.மீ. இடைவெளி இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகள், பழத்தோட்டங்களில் இருந்து குறைந்தது 800 மீட்டர் தொலைவில் செங்கல் சூளைகள் இயங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது.

இந்த வழிகாட்டுதல்கள், புதிதாக தொடங்கப்படும் செங்கல் சூளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என கடந்த 2023-ம் ஆண்டு பிப்.14-ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு அடிப்படையில் கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் உரிய அனுமதி இன்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளை, இயக்குவதற்கான இசைவாணை கோரி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பித்தனர். இதை எதிர்த்து தடாகம் பகுதியை சேர்ந்த எம்.மாணிக்கராஜ் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு, அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதிபுஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த 22-ம்தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2023-ம்ஆண்டு பிறப்பித்த உத்தரவை அனுமதித்தால், சட்டவிரோத செங்கல் சூளைகள் எந்த கண்காணிப்பும் இன்றி இயங்க வழிவகுக்கும்.

எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மேற்கூறிய உத்தரவு ரத்துசெய்யப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வழிகாட்டுதல் குறித்த அறிவிக்கைபடி செங்கல்சூளைகள் இயக்கம் தொடர்பாக உத்தரவுகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE