ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக சாலை அமைக்க தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிதாக சாலை அமைத்தால் வன விலங்குகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழலியல் ஆர்வலரான திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்த டி.கவுதமன் தாக்கல் செய்திருந்த மனுவில், “ஆனைமலை புலிகள் மிகு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரந்து விரிந்துள்ளது. ஆனைமலை - பரம்பிக்குளம் யானைகள் மிகு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் இதையொட்டியே அமைந்துள்ளது.

புலிகள் மற்றும் யானைகள் மிகுந்துள்ள இப்பகுதி இந்திரா காந்தி வனவிலங்குகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாகவும், ஊர்வன, பறப்பன, மிதப்பன என விலங்கினங்கள் மற்றும் அரிய வகை தாவரங்கள், மரங்கள் நிறைந்த சர்வதேச பல்லுயிர் பெருக்க முக்கிய சுற்றுச்சூழலியல் பகுதியாகவும் உள்ளது. மலைவாழ் பழங்குடியின மக்களும் இப்பகுதியில் அதிகமாக வசித்து வருகின்றனர். முக்கிய ஆறுகளும் இவ்வழியாக செல்கின்றன.

இந்நிலையில், திருமூர்த்தி மலையில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள குருமலைக்கு ரூ. 49 லட்சம் செலவில் ஆனைமலை வனப்பகுதி வழியாக புதிதாக சாலை அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் புதிதாக சாலை அமைத்தால் அது வனவிலங்குகளின் அமைதியான வாழ்வியலுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதற்கும், மரங்கள் வெட்டி கடத்தப்படுவதற்கும், நீர் வழித்தடங்கள் தடம் மாறுவதற்கும் வாய்ப்பாகிவிடும். எனவே இந்த சாலை அமைக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புலிகள் மற்றும் யானைகள் மிகுந்த அடர்ந்த வனப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டால் வயநாடு போல நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்படும், என மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE