ம
ண்ணைத் தோண்டாமல், செடியில் தங்கத்தை விளைவித்த பருத்தியை உழவர்கள், கரிசல் நிலத்தின் ‘வெள்ளைத் தங்கம்’ என்று புகழ்கிறார்கள். அந்தப் பெருமை, நாட்டுப் பருத்தியான ‘கருங்கண்ணி’க்கு மட்டும்தான்!
மரபீனி மாற்றப்பட்ட பி.டி. பருத்தியின் வேளாண்மை பிடியில் சிக்கியிருக்க, இன்று இந்தியா முழுக்கவும் நாட்டுப் பருத்தி வகையினங்கள் அழிந்து வருகின்றன. நாடு விடுதலை பெறும்வரை 97 சதவீத நாட்டுப் பருத்தி மட்டுமே பயிரிடப்பட்டு வந்தது. மூன்று சதவீதம் மட்டுமே அமெரிக்கப் பருத்தி வகை பயிரிடப்பட்டு வந்தது. இன்று நிலைமை தலைகீழ்.
இன்று நாடு முழுக்க இரண்டு சதவீதம் மட்டுமே நாட்டுப் பருத்தி பயிரிடப்பட்டுவருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஒரு சில ஏக்கர்களில், ஒரு சில மாவட்டங்களில், ஒரு சதவீதத்துக்கும் குறைவாக!
கடந்த ஆண்டு, பூச்சிகொல்லி தெளித்த விவசாயிகள் பலர் இறந்துள்ள சூழலில் மரபீனி மாற்றப்பட பி.டி. பருத்திக்கு மாற்றாக அனைத்துத் தரப்பினரும் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது.
பி.டி. பருத்திக்கு இரண்டு காரணங்கள்
தற்போது இந்தியா முழுக்கப் பயிரிடப்பட்டு வரும் மரபீனி மாற்றப்பட்ட அமெரிக்க ‘காசிபியம் ஹிர்சூட்டம்’ வகைக்கு ஆதரவாக இரண்டு கருத்துகள் கூறப்படுகின்றன. ஒன்று, அதிக மகசூலை அளிக்கக்கூடியது. இரண்டாவது, காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த, பூச்சிகொல்லிகளின் தேவை இருக்காது.
ஒப்பீட்டளவில் பி.டி. பருத்தியானது அதிக மகசூலை அளித்தாலும், மகசூலானது நிலையாக இருப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நல்ல விளைச்சலைப் பெற முடிவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
விதை முழுவதும் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு முறையும் சந்தையின் நிலைமைக்கு ஏற்ப, விதையின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. அதற்குப் பரிந்துரை செய்யப்படும் இடுபொருட்களின் விலையும் கட்டுக்குள் இருப்பதில்லை. உற்பத்தி அதிகமாகிவிட்ட காலத்தில், சந்தையில் விலைவீழ்ச்சி ஏற்பட்டு விளைவித்த பருத்திக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை.
பி.டி. பருத்தியில் காய்ப்புழுக்களின் தாக்கம் இருக்காது, பூச்சிக்கொல்லி தேவைப்படாது என்ற கருத்தும் பொய்யாகிப் போனது. இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியாமலே போய்விட்டது. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலையும், அதற்குச் செலவிடப்படும் தொகையும் அதிகமாகிவிட்டது. பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏகத்துக்கும் அச்சுறுத்துகின்றன.
வறட்சியிலும் வளரும் கருங்கண்ணி
உள்நாட்டுச் சூழலில் உருவான நாட்டுப் பருத்தி வகையினங்கள், அமெரிக்கப் பருத்தி வகையைப் போன்று பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவதில்லை. எனவே, பி.டி. பருத்திக்குத் தேவைப்படுவதுபோல பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுவதில்லை. அவ்வாறு பூச்சி விரட்டிகள் தேவைப்பட்டாலும், அவற்றை இயற்கை வழியில் எதிர்கொள்ள, செலவில்லாத எளிய வழிகள் இருக்கின்றன. மரபீனி மாற்றப்பட்ட விதைகளை ஒவ்வொரு முறையும் விலைகொடுத்து தனியார் விதை நிறுவனங்களிடம் வாங்க வேண்டும்.
ஆனால், நாட்டுப் பருத்தி விதைகளை விளைவித்து அவர்களே விதைக்கலாம், விதைகளைச் சேமித்தும் கொள்ளலாம். விதைகளை, உழவர்கள் பகிர்ந்துகொள்ளவும் செய்யலாம். மாட்டுச் சாணம், களிமண் ஆகியவற்றில் பிசைந்து, நிழலில் உலர்த்தி, கருங்கண்ணி விதைகளைப் பாதுகாத்து வந்ததாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
கருங்கண்ணி, வறட்சியைத் தாங்கி வளரும். பல நேரம் பருத்தியைப் பறித்த பின்னர், செடியை அப்படியே விட்டுவிடலாம். அடுத்த பருவத்தில் மீண்டும் துளிர்க்கும் தன்மை கொண்டவை நாட்டுப் பருத்தி வகைகள்.
ஆண்டு சராசரி மழையளவு குறைந்த பகுதிகளில், வானம் பார்த்த பயிராக நாட்டுப் பருத்தியைத் தெளித்து வந்திருக்கிறார்கள். கருங்கண்ணியை ஒற்றை ரகப் பயிராகப் பயிரிடாமல், ஒருங்கிணைந்த பயிராக உளுந்து, பச்சைப் பயறு, துவரை, சோளம், ஆமணக்கு போன்றவற்றுடன் இணைத்தே கூட்டுப் பயிராகப் பயிரிட்டு விளைச்சல் கண்டுள்ளார்கள்.
இழைகளுக்கு இயந்திரமில்லை
ஆங்கிலேயர் காலத்தில் கோழிக்கோடு துறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு ‘காலிகோஸ்’ (Calicos) என்ற உள்நாட்டுப் பருத்தி ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. உடுத்திக்கொள்வதற்கு மிகவும் மென்மையாக அவை இருந்தன. இங்கிலாந்துச் சந்தையை இந்திய நாட்டுப் பருத்தி ஆடைகளே ஆட்கொண்டிருந்ததால், அங்கு உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. எனவே, இந்திய ஆடைகளைத் தடை செய்யும் நிலைக்கு இங்கிலாந்து அரசு தள்ளப்பட்டது. உள்நாட்டுப் பருத்தியின் சிறப்புக்கு, இது ஓர் எடுத்துக்காட்டு.
இங்கிலாந்து தொழிற்புரட்சியின்போது, அமெரிக்க வகைப் பருத்தியில் துணிகள் நெய்யப்பட்டன. அமெரிக்க வகைப் பருத்திக்கு ஏற்ப இயந்திரங்களும் வடிவமைக்கப்பட்டன. தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அனைத்தும் அமெரிக்க நீண்ட இழை பருத்திக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளவை. இந்திய வகைப் பருத்திகள் அனைத்தும் கைகளால் மனித ஆற்றலைக்கொண்டு மதிப்பு கூட்டப்படுபவை.
நாட்டு விடுதலைக்குப் பின்னர், உள்நாட்டுப் பருத்தி வகையினங்களுக்கு ஏற்ப நமது இயந்திரங்களை வடிவமைக்காமல், அமெரிக்க நீண்ட இழை பருத்திக்கு ஏற்ப பருத்தி விளைச்சலை மேற்கொண்டதாலும் இயந்திரமயமானதாலும் நாட்டுப்பருத்தி குட்டை இழைகளுக்கான இயந்திரத் தேவைகளுக்கு ஏங்கி நிற்கிறோம். நாட்டுப் பருத்தி இழைகளுக்கு ஏற்ப இயந்திர வடிவமைப்புகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தால் விதைகளைப் பிரித்தல், பஞ்சை நூலாக்குதல், நெய்தல் என அனைத்து நிலைகளையும் எளிதாக்க முடியும்.
நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் கருங்கண்ணியைப் பயிரிடும் சூழலில், புதிய தலைமுறையினர் உழவுத் தொழிலுக்கு வந்துள்ளனர். எனவே, இயற்கை வழியில் நாட்டுப் பருத்தி உற்பத்தி முறைகள் குறித்து விரிவாக வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
கட்டுரையாளர், சூழலியல் ஆர்வலர்
தொடர்புக்கு: mazhai5678@gmail.com
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
7 hours ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
21 days ago