உலக யானைகள் தினம் | யாங்கோன் உயிரியல் பூங்காவின் 71 வயது யானை! - பார்வையாளர்களின் அனுபவப் பகிர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக யானைகள் தினத்தை கொண்டாடும் வகையில், மியான்மரின் யாங்கோன் உயிரியல் பூங்காவில் உள்ள ஆசியாவின் வயதான யானையாக அறியப்படும் மோ மோ ( 71 வயது) பற்றி பார்வையாளர்கள் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான கருத்துகள் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. யாங்கோன் உயிரியல் பூங்கா மியான்மரில் உள்ள மிகப் பழமையான மற்றும் இரண்டாவது பெரிய பூங்காவாகும்.

2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக யானைகள் தினத்தை கொண்டாடும் வகையில், மியான்மரில் உள்ள யாங்கோன் உயிரியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யாங்கோன் உயிரியல் பூங்கா மியான்மரில் உள்ள மிகப் பழமையான மற்றும் இரண்டாவது பெரிய பூங்காவாகும்.

யானைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை யாங்கோன் உயிரியல் பூங்காவின் தலைமை கால்நடை மருத்துவர் டாக்டர் துன் மைன்ட் வலியுறுத்திப் பேசினார். அப்போது அவர், “யானைகள் அழியும் நிலையில் இருப்பதால், அவற்றை நாங்கள் சிறப்பு கவனத்துடன் பாதுகாத்து வருகிறோம். சுற்றுச்சூழலை பராமரிப்பதில் யானைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, எனவே மக்களிடையே யானைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். அதற்கான நிகழ்ச்சிகளை நாங்கள் அவ்வப்போது நடத்தி வருகிறோம். யானைகளை பராமரிப்பதன் மூலம் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க முடியும்” என்றார்.

யாங்கோன் உயிரியல் பூங்காவில் நான்கு யானைகள் உள்ளன. அவற்றில், 'மோ மோ’ (Mo Mo) என்ற ஆசிய யானை எப்போதும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுவிடுவதாக கூறுகின்றனர். மோ மோ என்ற பெண் யானை 1961 இல் யாங்கோன் உயிரியல் பூங்காவுக்கு வந்தபோது அதற்கு ஏழு வயது. இப்போது அதற்கு கிட்டத்தட்ட 71 வயதாகிறது. 'மோ மோ’ யாங்கோன் உயிரியல் பூங்காவின் ஒரு சின்னமாகவே மாறியிருக்கிறது. பல தலைமுறை பார்வையாளர்களால் போற்றப்படுகிறது என்று யாங்கோன் உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் நெகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

‘மனிதர்களின் மொழி புரிகிறது...’ யானைகள் மற்றும் உலக யானைகள் தினம் பற்றி கூறும்போது பார்வையாளர்கள் 'மோ மோ பற்றிய தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதில், Daw Ohmar Htay (39 வயது) என்ற பெண் பார்வையாளர் தனது அனுபவத்தை பகிர்ந்த போது, “சுமார் எட்டு வயதில் நான் முதல்முறையாக இங்கு வந்திருந்தபோது, ​​நான் 'மோ மோ’வுக்கு கரும்பு ஊட்டினேன். இப்போது, ​​நான் இரண்டாவது முறையாக இங்கு வந்து என் மகளுக்குத் துணையாக இருக்கிறேன். நான் மோ மோவை கடைசியாகப் பார்த்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. 'மோ மோ’- வை நான் மிகவும் நேசிக்கிறேன். அவள் ஒரு புத்திசாலி. மோ மோ மனித மொழியைப் புரிந்துகொள்கிறது” என்றார் நெகிழ்ச்சியாக...

’மோ மோவை சந்தித்தால்..’ Antt Htoo Myat என்ற பத்து வயது சிறுவன் மோ மோ மீதான தனது தனிப் பிரியத்தை வெளிப்படுத்தினான். அப்போது பேசிய அச்சிறுவன், “"மோ மோ என் நண்பனைப் போன்றவள். நான் இங்கு வரும் ஒவ்வொரு முறையும் மோ மோ வைச் சந்திக்கிறேன். சுமார் 7 முறை இங்கு வந்திருக்கிறேன். யானைகள் மீதான எனது பாசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனது பெரும்பாலான நண்பர்கள் யானைகளை நேசிப்பதில்லை. ஆனால் அவர்கள் இங்கு வந்து மோ மோ-வைச் சந்தித்தால் அவர்களும் அனைத்து யானைகளையும் நேசிப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.

யாங்கோன் உயிரியல் பூங்காவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் மூத்த யானைப் பராமரிப்பாளரான ஆங் வின் தாங், மோ மோ உடனான தனது ஆழமான உறவைப் பற்றிப் பேசினார். "எனக்கு சிறு வயதில் இருந்தே யானைகளை மிகவும் பிடிக்கும். இப்போது, ​​​​நான் மோ மோவை கவனித்துக்கொள்கிறேன்.நாங்கள் ஒரு குடும்பம் போல் வாழ்ந்து வருகிறோம். மோ மோ மிகவும் புத்திசாலி, அவளை கவனித்துக் கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE