பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் விட்ட 5 லாரிகளின் பெர்மிட் ரத்து - அதிரடி நடவடிக்கை

By ச.கார்த்திகேயன்

சென்னை: விதிகளை மீறி பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீரை திறந்துவிட்ட 5 லாரிகளின் பெர்மிட்டை சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரத்து செய்துள்ளார்.

சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் வழித் தடங்களில் கழிவுநீர் லாரிகள் தொடர்ந்து கழிவுநீரை விட்டு மாசுபடுத்தி வந்தன. இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தலையிட்டு, கழிவுநீர் லாரிகளுக்கு பெர்மிட் வழங்குதல், அவை உறிஞ்சி வரும் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்தல் ஆகியவற்றை முறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சென்னை மாநகரப்பகுதி கழிவுநீர் மேலாண்மை விதிகள்-2022, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள்-2022 உருவாக்கப்பட்டன. அவற்றில், அனைத்து கழிவுநீர் லாரிகளும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் பெற வேண்டும். உரிமத்தில் குறிப்பிட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.

நீர்நிலைகளில் கழிவுநீரை விடக்கூடாது. அனைத்து கழிவுநீர் லாரிகளும் முறையான பராமரிப்புடன் இருக்க வேண்டும். லாரிகளின் இயக்கங்கள் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். விதிளை மீறும் லாரிகளுக்கு முதல்முறை ரூ.25 ஆயிரம், 2-ம் முறை ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் தொடர்ந்து திறந்துவிட்டதாக 5 லாரிகளை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றுக்கு வழங்கப்பட்ட பெர்மிட்டை ரத்து செய்யுமாறு, சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்திருந்தனர். அதனடிப்படையில் 5 கழிவுநீர் லாரிகளின் பெர்மிட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ரத்து செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE