கும்பகோணம்: விநாயகர் சதுர்த்திக்காக மரவள்ளிக் கிழங்கில் சிலைகள் வடிவமைப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி கும்பகோணத்தில் எளிதில் நீர் நிலைகளில் கரையக்கூடிய மரவள்ளிக் கிழங்கினாலான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்களில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். பின்னர், ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைப்பார்கள். சிறப்புப் பெற்ற இந்த விழாவையொட்டி, கும்பகோணம் வீர சைவ மடத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி, ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சுற்றுப்புறச் சூழலுக்கு கெடுதல் விளைவிக்காத இந்த விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு ஏராளமானோர் இப்போதே ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு காகிதக் கூழ் மொம்மை தொழிலாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் யு.குமார் நம்மிடம் பேசுகையில், "ரசாயனங்களால் வடிவமைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது, அதில் உள்ள உயிரினங்களுக்கு உபாதைகள் ஏற்படும். சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, பழங்காலத்து முறைப்படி, முற்றிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலையை வடிவமைத்து வருகிறோம்.

இதற்காக, சேலத்திலிருந்து மரவள்ளிக் கிழங்கு தூளையும், கோயம்புத்தூரிலிருந்து காகிதத்தூளையும் மொத்த விலைக்கு வாங்கி வந்து, மரவள்ளிக் கிழங்கு தூளை அடுப்பில் காய்ச்சி, அதனுடன் காகித்தூளைச் சேர்த்துப் பிசைந்து கூழாக்கி, நடுவில் மூங்கில் குச்சிகளை வைத்து விநாயகர் சிலைகளை வடிவமைத்து, அதில் வர்ணம் பூசி விற்பனை செய்வோம்.

இந்த சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது, எளிதில் கரைவதுடன், மரவள்ளிக் கிழங்கு - காகிதக்கூழை, நீர் நிலைகளில் வாழும் உயிரினங்கள் சாப்பிட்டுவிடும். இதனால் நீர் நிலைகளில் மாசு ஏற்படாது. எங்களிடம் 1 அடி முதல் 9 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு, ரூ.100 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், நிகழாண்டு, ரங்கநாதர் விநாயகர், சூரசம்ஹார விநாயகர், குழந்தை வரம் தரும் விநாயகர், சிவ உருவ விநாயகர் என 4 வகையான புதிய விநாயகர் சிலைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். மேலும், 30 வகையான சிலைகள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன” என்று குமார் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE