தேனியில் அடுத்தடுத்து வெட்டப்படும் சாலையோர மரங்கள்: தடுத்து நிறுத்த போராடும் தன்னார்வலர்கள்

By என்.கணேஷ்ராஜ்

தேனி: தேனியில் நூற்றாண்டு பழமையான சாலையோர மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. இதற்கு கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையின் இரண்டு பக்கமும் பழமையான மரங்கள் அதிகம் உள்ளன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி நெடுஞ்சாலைத் துறையினர் இவற்றை வெட்டத் தொடங்கினர். நேற்று 5 மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர். கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவர் ராமராஜ், நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜ் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் புரட்சித் தமிழர் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வீரகுரு தலைமை வகித்தார்.

மரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். மேலும் தமிழக வெற்றிக்கழக மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் தலைமையிலான நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தொடர்ந்து எதிர்ப்பு ஏற்பட்டதால் மரம் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தேனி-பெரியகுளம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள். படம்:என்.கணேஷ்ராஜ்.

இந்நிலையில் இன்று (செவ்வாய்) மீண்டும் இப்பணி தொடங்கியது. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த தன்னார்வலர்கள் மரத்தை சுற்றி அமர்ந்து மரத்தின் முக்கியத்துவம் குறித்த கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மரம் வெட்டும் பணி பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் தன்னார்வலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

பேச்சுவார்த்தை தொடர்பாக தன்னார்வலர் பிரகாஷ் கூறுகையில், பாலம் கட்டவோ, சாலை விரிவாக்கப் பணியோ இங்கு நடைபெறவில்லை. மண்டபம், காம்ப்ளக்ஸ், கடைகளின் முகப்பு மறைக்கிறது என்பதற்காகவே இந்த மரங்கள் வெட்டப்படுகின்றன. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரங்களை காக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும்." என்று பிரகாஷ் கூறினார்.

நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், "போக்குவரத்துக்கு இடையூறாக மட்டுமல்ல ஆபத்தான நிலையிலும் இம்மரங்கள் உள்ளன. ஆகவே முதற்கட்டமாக 23 மரங்களை வேரோடு வெட்டி அகற்ற ஏலம் விடப்பட்டது. அதன்படி ஒப்பந்ததாரர் இப்பணியை மேற்கொண்டு வருகிறார். விதிமுறை மீறல் எதுவும் இல்லை" என்று நெடுஞ்சாலைத் துறையினர் கூறினர். பொதுமக்கள் கூறுகையில், "மாவட்டம், நகராட்சி என்ற அந்தஸ்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே இந்த மரங்கள் இருந்து வருகின்றன. மலரும் நினைவுகளாக இருந்து வந்த மரங்களின் வீழ்ச்சி வருத்தத்தை ஏற்படுத்துகிறது" என்று மக்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

மேலும்