மேகமலை வனப்பகுதியில் நெகிழி பொருட்களுக்கு தடை

By என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: சுற்றுச்சூழலை பாதுகாக்க மேகமலை வனப்பகுதியில் நெகிழி பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மேகமலை.இதில் 21 கி.மீ. தூரம் மலைப் பாதையாகும். இச்சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. வழிநெடுகிலும் தேயிலைத் தோட்டங்கள் பச்சை பசேலென கண்களுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கின்றன. ஹைவேவிஸ், மணலாறு, மேகமலை, மகாராஜமெட்டு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன.

வனப்பகுதியில் காட்டுப்பன்றி, யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இதனால் மாலை 6 முதல் காலை 6 மணி வரை இந்த வனச்சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மூடுபனி, சில்லென்ற குளிர்காற்று, பசுமை போர்த்திய பள்ளத்தாக்குகள் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பலர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், நெகிழி (பாலித்தீன்) பைகளை வனப்பகுதியில் வீசிச் சென்றதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. மண்ணில் மட்காத நெகிழி பொருட்களால் விலங்குகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

மேகமலை வனச்சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக்
பொருட்களை பறிமுதல் செய்த வனத்துறை ஊழியர்.

இதைத் தொடர்ந்து மலையடிவாரத்தில் உள்ள தென்பழனி சோதனைச் சாவடியில் சுற்றுலா பயணிகளிடமிருந்து நெகிழி பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை வனத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இருசக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்ட பிறகே இவ்வழியாக அனுப்பப்படுகின்றன. பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் நெகிழி பைகள் சணல் சாக்குகளில் சேகரிக்கப்படுகிறது. இவற்றை எடுத்துச் சென்று மறுசுழற்சி செய்வதற்கு ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மலைப் பகுதிக்குள் ஒரு பிளாஸ்டிக் பொருள்கூட செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்காக வாகனங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. வாரம் 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதால், அவர்கள் அடுத்தமுறை வரும்போது பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்கின்றனர் என்று கூறினர். வனத்துறையினரின் இந்தச் செயல்பாடு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE