வஉசி பூங்காவில் இருந்த 5 கடமான்கள் சிறுவாணி வனத்தில் விடுவிப்பு

By ஆர்.ஆதித்தன்

கோவை: கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 5 கடமான்கள், சிறுவாணி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

கோவை வஉசி வன உயிரியல் பூங்காவிற்கு, உயிரியல் பூங்கா அந்தஸ்து இந்திய அரசால் மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதில் பராமரிக்கப்படும் அட்டவணை வன உயிரினங்களை வனப்பகுதியில் விடுவிக்க சென்னை முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆணை பிறப்பித்தார். அதன்பேரில் வஉசி உயிரியல் பூங்காவில் இருக்கும் அட்டவணை வன உயிரினங்களை மாற்றம் செய்திட தமிழக வனத்துறையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு அங்கமாக வஉசி பூங்காவில் பராமரிக்கப்படும் புள்ளி மான்களை கடந்த மே மாதம் மாற்றம் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பூங்காவில் உள்ள கட மான்களை மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு, கடந்த மார்ச் முதல் மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு கூடுதலாக பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகளை மான்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 4-ம் தேதி ஐந்து கடமான்களும், ஜூலை 12-ம் தேதி 6 கடமான்களும் போலம்பட்டி சரக காப்பு காட்டில் விடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் மொத்தம் 5 கடமான்கள் பிரத்யேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சராகம் வனப்பகுதியில் இன்று விடுவிக்கப்பட்டது. இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, “வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கட மான்கள் தீவனம் உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE