கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பகலிலேயே யானைகள் ஊர்வலம் - மக்கள் அச்சம்

By ஆர்.டி.சிவசங்கர்


கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பகல் நேரங்களிலேயே யானைகள் சாலைகளில் வலம் வருகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

உலகில் 15-வது நீண்ட மலைத்தொடராக உள்ளது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலை. குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு வரை 60 ஆயிரம் கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மலைத்தொடரில், 37 சதவீத பகுதிகளுடன் சூழலியல் முக்கியத்துவம் கொண்டது நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம். நீலகிரி மாவட்டம் வனம் சார்ந்தது. அரசின் கணக்கெடுப்பின்படி, 56 சதவீதம் வனங்களை கொண்டுள்ளது.

குறிப்பாக, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்கள் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கேரளா, கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் பகுதியில் அமைந்துள்ளன. அடர்ந்த வனத்தினிடையே உள்ள நிலங்களில் தேயிலை தோட்டங்கள், வாழை, நெல், இஞ்சி, காபி ஆகியவை பயிரிடப்படுகின்றன. வனத்தை ஒட்டியே தோட்டங்கள் உள்ளதால் விலங்குகளின் ஊடுருவல் அடிக்கடி நிகழ்கிறது. குறிப்பாக, தோட்டங்களுக்குள் யானைகள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன.

வனத்துறையினர் உதவியுடன் மக்கள் யானைகளை விரட்டுவதும், மீண்டும் யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதும் இந்த இரண்டு தாலுகாக்களிலும் தொடர் கதையாகிவிட்டது. அதன்படி, சமீப காலமாக காட்டு யானைகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள், உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பகல் நேரங்களிலேயே கூடலூர், பந்தலூர் சாலைகளில் யானைகள் நடமாடி வருகின்றன.

கூடலூர் அருகே தொரப்பள்ளியில் ஒரு காட்டு யானை அடிக்கடி கர்நாடகா, கேரளாவுக்கான முக்கிய போக்குவரத்து சாலையில் வலம் வருகிறது. அதேபோல், நெலாக்கோட்டை பகுதியில் திடீரென சாலையில் வந்த யானையை பார்த்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.

கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலுள்ள பல்வேறு கிராமங்களில் மின்சாரம் தடைப்பட்டது. இருளில் மூழ்கிய இந்த கிராமங்களில் யானைகள் குடியிருப்புகளின் அருகிலேயே வலம் வந்ததால், அச்சத்தில் உறைந்த மக்கள், வீடுகளிலேயே முடங்கினர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் யானை தாக்குதல் பிரச்சினை தொடர்கதையாகி வரும் நிலையில், இதற்கு தீர்வு காண மக்கள் போராட்டம் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், காட்டு யானை தாக்குதல் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, மாக்கமூலாவில் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால், அதற்கு காவல்துறை அனுமதி வழங்காதது, அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “கூடலூரில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் வருகின்றன. மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம், நல்வாழ்வை பாதிக்கும் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சிக்கலை தீர்ப்பதற்கு அடிப்படை காரணங்கள் குறித்த விரிவான புரிதல் மற்றும் பயனுள்ள நீண்ட கால தீர்வுகளை் செயல்படுத்த வேண்டும். யானைகள் உட்பட ஒவ்வோர் உயிரினத்துக்கும் ஒரு நியமிக்கப்பட்ட வாழ்விடம், உணவு ஆதாரம் உள்ளது. இந்த சமநிலையை சீர்குலைப்பதால் வன விலங்குகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன.

உணவுப் பற்றாக்குறை மற்றும் இதர காரணங்களால் அவை வாழ்வதற்கு ஏற்ற முதுமலை வனப் பகுதி சாதகமற்றதாக மாறிவருவதால், வன எல்லைக்கு அருகில் வசிக்கும் விவசாயிகளின் விவசாய நிலங்களுக்கு எளிதான உணவுக்காக இடம்பெயர்ந்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக காட்டு யானைகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன.

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள யானைகளுக்கு இயற்கையான உணவு ஆதாரங்களான மூங்கில், கரும்பு போன்றவை பற்றாக்குறையாக உள்ளதால், அவை விவசாய நிலங்களுக்கு வந்து உணவு தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும், முதுமலையில் வேகமாக பரவி வரும் நச்சு செடிகளால் வன விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதும் இதற்கு காரணமாகும்.

குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்த யானைகளை விரட்டும்
பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள்.

கூடலூர் பகுதியில் காட்டு யானைகளை நிர்வகிக்க போதிய பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரிகள் இல்லை. மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் ஒவ்வொரு காட்டு யானைக்கும் 20 முதல் 50 பணியாளர்கள் வரை பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக பதிவுகள் இருந்தும், அந்த அளவுக்கு பணியாளர்கள் களத்தில் காணப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதிகளை வனத்துறை உயர் அதிகாரிகள் பார்வையிடாததால், பயனுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. யானைகள் பொதுவாக பழங்குடியின மக்களை தாக்குவதில்லை அல்லது அவர்களின் வாழ்விடங்களுக்குள் நுழைவதில்லை. மக்கள் குடியிருப்புகளுக்குள் யானைகள் நுழைவதை தடுப்பதற்கான யுக்திகளை பழங்குடியின மக்களிடம் இருந்து வனத்துறை அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

காட்டு யானைகள் ஊடுருவலை தடுக்க வனத்துறைக்கு நீண்டகால திட்டங்கள் இல்லை. முறையான அகழிகள், சூரிய மின் வேலிகள், தேனீக்கள் போன்ற பயனுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். யானைகளின் நடத்தை, அசைவுகள் மற்றும் மனித - யானை மோதல்களுக்கான காரணங்களை நன்கு புரிந்துகொள்ள தொடர்ச்சியான ஆராய்ச்சி அவசியம்.

இந்த காரணிகளை கருத்தில் கொள்ளாமல், கூடலூரில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுப்பது வெற்றி அளிக்காது. கூடலூர் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த இப்பிரச்சினைகளை களைய அரசு மற்றும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

பழங்கால முறைகளை கையாள வேண்டும்: நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் கூறும்போது, “நீலகிரி, கோவை பகுதிகளில் யானைகள் ஊடுருவல் பல காலமாக தொடரும் பிரச்சினை. இதற்கு பழங்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வழியே தீர்வாக அமையும். கிழக்கிந்திய கம்பெனி தங்கள் ராணுவம், வேட்டை மற்றும் வர்த்தகத்துக்கு இலங்கையிலிருந்து யானைகளை இறக்குமதி செய்தது. இந்த யானைகளால் வேளாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. குடியிருப்புகள் மற்றும் பயிர்களை சேதம் செய்யும் யானைகளை அழிக்க நிர்வாகம் முடிவு செய்தது.

1822-ம் ஆண்டு அப்போதைய கோவை ஆட்சியராக இருந்த ஜான் சலீவன், கோவைக்கு உட்பட்ட 8 ஆயிரம் சதுர மைல்களில் 3,700 மைல்கள் யானைகளின் அச்சுறுத்தல் உள்ள பகுதி என, வருவாய் வாரியத்துக்கு வரைபடம் தயாரித்து அனுப்பினார். யானைகளை கண்காணிக்கவும், பயிர்களை சேதங்களிலிருந்து பாதுகாக்கவும் 7 முதல் 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், பொருளாதாரம் காரணமாக இந்த திட்டத்தை கிழக்கிந்திய கம்பெனி கைவிட்டது. இந்நிலையில், கோவை ஆட்சியர் சலீவனின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட வருவாய் வாரியம், மேற்குவங்க மாநிலம் சிட்டகாங் பகுதியிலிருந்து வேட்டையாளர்களை வரவழைத்து உள்ளூர் மக்களுக்கு யானைகளை கட்டுப்படுத்த பயிற்சி அளித்தனர். கோவையை ஆண்ட திப்புசுல்தானும் இதே யுக்தியை பயன்படுத்தினார்.

நீலகிரி, கோவை பகுதிகளில் மனித - விலங்கு மோதல் அதிகரித்துள்ளது. வனத்தையொட்டி விவசாயம், குடியிருப்புகள் அதிகரித்துவிட்டதால் தவிர்க்க முடியாததாகிவிட்டது. தற்போது விலங்குகளை வேட்டையாட முடியாததால், யானைகளை கட்டுப்படுத்த பல யுக்திகளை வனத்துறை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பிரச்சினையை தீர்க்க வனத்துறை ஊழியர்களுக்கு உதவியாக உள்ளூர் வேட்டைத்தடுப்பு கண்காணிப்பாளரை பணியமர்த்தி அவர்களுக்கு பயிற்சி மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகளை வழங்க வேண்டும். அதிகரித்து வரும் மனித - விலங்கு மோதலில் பாதிக்கப்படுவது வனத்தை ஒட்டி வசிக்கும் ஏழை மக்களே. எனவே, மனித - விலங்கு மோதலை அலட்சியப்படுத்த முடியாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

மேலும்