வேலூர் பாலாற்றங்கரை குப்பை தரம் பிரிப்பு மையத்தால் மாசடையும் பாலாறு!

By வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாலாற்றங்கரையில் செயல்படும் மாநகராட்சி குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் வண்டி, வண்டியாக கொட்டப்படும் குப்பையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாலாறு மாசடைந்து வருகிறது. எனவே, இந்த குப்பை தரம் பிரிக்கும் மையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 261 வீடுகள், 17 ஆயிரத்து 169 வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து தினசரி 241 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகின்றன. குப்பை அகற்றும் பணி யில் மாநகராட்சி ஊழியர்கள் 200 பேர் மற்றும் 900 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதில், 128 டன் குப்பைகள் மக்கும் குப்பையாகவும், மக்காத குப்பையாக 90 டன் மற்றும் பிற கழிவுகள் 23 டன் சேகரமாகிறது. இதில், 4 டன் குப்பைகள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பயன்படுத்தும் பேம்பர்ஸ், நாப்கின், டயாப்பர்களாக உள்ளன. சுமார் 109 டன் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுவதாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.

வேலூர் மாகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் 50 நுண் உரமாக்கும் மையங்கள் மூலம் தரம் பிரிக்கப்படுகின்றன. இதில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாலாற்றங்கரையில் செயல்படும் குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் மலைபோல் கொட்டப்படும் குப்பையை அவ்வப்போது இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுகிறது.

இதை மாநகராட்சி தூய்மை பணியாளர்களே செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தாலும், மர்ம நபர்கள் தீ வைப்பதாக மாநகராட்சி நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் எரிக்கப்படும் குப்பையால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல், வேலூர் முத்துமண்டபம் பகுதியில் குடியிருப்புக்கு அருகிலேயே பாலாற்றில் தனியார்கள் மற்றும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் குப்பையை கொட்டி எரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பாலாறு தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் மாசுபடுத்தப்பட்டு வருகிறது. இதை மாவட்ட நிர்வாகமும் கவனிக்காமல் இருப்பது வேதனையாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். பாலாற்றங்கரையில் செயல்படும் குப்பை தரம் பிரிக்கும் மையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.

அபராதம் விதிப்பு: பாலாற்றில் குப்பை கொட்டி மாசுபடுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ரூ.87 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு, மாநகராட்சி தரப்பில் குப்பை கொட்டப்படுவதை தவிர்க்கவும், அபராதத் தொகையை செலுத்த கால அவகாசம் கோரியும் கடிதம் எழுதினர். ஆனாலும், மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அதே தவறுகளை செய்து வருகிறது.

திடக்கழிவு மேலாண்மை திட்ட 2016 விதிகளின் படி, வீடுகளில் குப்பை சேகரிக்கப்பட்டு அதை தரம் பிரிக்க வேண்டும். ஏற்கெனவே தேங்கி யுள்ள குப்பையை முழுமையாக அகற்ற வேண்டும் என்பதுதான். மேலும், குப்பையை தரையில் கொட்டி தேக்கி வைக்கக்கூடாது என்பதுதான் விதியாக உள்ளது. ஆனால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் விருது பெற்ற மாநகராட்சி நிர்வாகம் விதிகளை காற்றில் பறக்கவிட்டு வருகிறது.

வேண்டும் விழிப்புணர்வு: இதுதொடர்பாக, வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூர் மாநகராட்சியில் பொதுவெளியில் குப்பை தொட்டிகளை வைத்து குப்பை சேகரிக்கப்படு வதில்லை. மாறாக தூய்மை பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக தினசரி இரண்டு முறை சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது. (ஒரு நாளைக்கு ஒருமுறை வருவதே பெரிதாக இருக்கிறது. ஒரு சில வார்டுகளில் இரண்டு நாட்கள் கூட ஆகிறது).

வீடுகளில் இருந்து கொடுக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பையை ஒரே குப்பையாக கொடுப்பதால் தரம் பிரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. பலர் பொதுவெளியில் குப்பையை வீசிவிட்டு செல்கிறார்கள். ஆகவே மக்கள், குப்பையை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் அல்லது குப்பையை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம்.

மக்காத குப்பைகள் பெரிய பண்டல்களாக செய்து வாரத்துக்கு 2 லோடு அளவுக்கு சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கிறோம். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்தும் பேம்பர்ஸ், நாப்கின்கள், டயபர்கள் உள்ளிட்டவற்றை ஒரு நாளைக்கு மேல் தேங்க வைக்கக் கூடாது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும் என்பதால் அதனை எரித்து வருகிறோம்.

மேலும், மாசற்ற முறையில் குப்பையை ஏரிக்க ‘இன்ஸ்சனரேட்டர்’ எனும் இயந்திரத்தை சர்கார் தோப்பு பகுதியில் நிறுவி உள்ளோம். இந்தப் பணி முழுமை அடைந்தவுடன் மக்காத குப்பைகள் மாசற்ற முறையில் ஒரே இடத்தில் எரிக்கப்படும். பாலாற்றில் குப்பையை கொட்டும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மீது அவ்வப்போது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

‘தூய்மை பாரத இயக்கம் மூலம்’ குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வீடு, வீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து கொடுக்காததற்கான காரணம், தூய்மை பணியாளரிடம் குப்பைகளை ஒப்படைக்காததற்கான காரணம் குறித்தும் வீடு, வீடாக கணக்கெடுத்து வருகிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE