இந்தியா முதல் சவுதி வரை: உலக மக்களை வதைத்த ஜூன் மாத வெப்பம்

By செய்திப்பிரிவு

சென்னை: உலக அளவில் கடந்த ஜூன் மாதம் நிலவிய அதீத வெப்பம் மக்களை வாட்டி வதைத்துள்ளது. இதற்குக் காரணம் எல்-நினோ மற்றும் மக்கள் விதைத்த வினை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இந்தியாவில் வீசிய வெப்பத்தின் தாக்கத்தால் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவலாக பல நாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெப்பநிலை வரலாற்றில், மிக வெப்பமான ஜூன் மாதம் இது என்கிறது ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை கண்காணிப்பு திட்ட அமைப்பு. அதோடு வெப்பத்தின் தாக்கத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டு முன்னிலை பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெர்க்லி எர்த் விஞ்ஞானி ஒருவர் உறுதி செய்துள்ளார். இந்த வெப்பத்தின் தாக்கம் உலக அளவில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் நிலவிய கடும் வெப்பநிலை காரணமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதில் டெல்லி போன்ற நகரங்களில் வசித்தவர்களும் அடங்குவர். தொடர்ந்து பல நாட்கள் 45 டிகிரி வரை வெப்பம் நீடித்தது. மேலும், மருத்துவ ரீதியாகவும் அவசரகால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

சவுதியில் நிலவிய வெப்பம் காரணமாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட மக்களில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தனர். இதே போல வெப்பத்தினால் கிரீஸ் நாட்டுக்கு சுற்றுலா நிமித்தமாக சென்று இருந்தவர்களும் உயிரிழந்தனர். இது உலக அளவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது.

“நம்மால் எல்-நினோவை தடுக்க முடியாது. ஆனால் நாம் எரிவாயு, பெட்ரோல், நிலக்கரி போன்ற எரிபொருள் பயன்பாட்டை சற்றே குறைக்கலாம். அது நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது” என லண்டனை சேர்ந்த காலநிலை விஞ்ஞானி ஓட்டோ தெரிவித்தார். இது பசுமை இல்ல வாயுக்கள் எந்த அளவுக்கு காலநிலை மாற்றத்துக்கு வழிவகை செய்கிறது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த உலக அளவின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த வாயு உமிழ்வுக்கு முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதில் மாற்றம் நிகழ்ந்தால்தான் உலக அளவில் வெப்பம் அதிகரித்து வருவதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டின் பிற்பாதியில் ‘லா நினா’ நிகழ்வு ஏற்படும் என்பதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகும் என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE