சென்னையில் காற்று மாசுவால் 12 ஆண்டுகளில் 28,674 பேர் மரணம்: ஆய்வறிக்கையில் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் காற்று மாசுவால் 12 ஆண்டுகளில் 28 ஆயிரத்து 674 பேர் உயிரிழந்திருப்பதாக ‘தி லான்செட்’ இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

‘தி லான்செட்’ என்ற இதழ், சுகாதாரம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் காற்று மாசு தொடர்பான ஆய்வறிக்கையை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் இடம் பெற்றிருப்பதாவது: காற்று மாசு என்பது ஒரு உலகளாவிய பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. காற்று மாசுவால்இறப்பு, சுவாசம் மற்றும் இருதய நோய்கள், நரம்பியல் பாதிப்பு குறைபாடுகள் உட்பட பல விதமான ஆரோக்கியத்துக்கு எதிரான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்தியா போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் அதிக அளவு காற்று மாசுவை பொதுமக்கள் அனுபவித்து வருகின்றன. இந்தியாவில் பல பகுதிகளில் காற்று மாசு, உலகசுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக மாக உள்ளது. இது தொடர்பாக அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா மற்றும்வாராணசி ஆகிய 10 மாநகராட்சிகளில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகளில் பதிவான காற்று மாசு, இறப்புப் பதிவேடுகள், மரணத்துக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

டெல்லியில் அதிகபட்சம்: அதன்படி, மேற்கூறிய 10 மாநகரங்களில் சராசரியாக மிக நுண்ணியஅளவு கொண்ட காற்று மாசுவின் அளவு அதிகபட்சமாக டெல்லியில் 113 பிபிஎம் ஆகவும், வாராணசியில் 82 பிபிஎம் ஆகவும், சென்னையில் 33 பிபிஎம் ஆகவும் உள்ளது. இறப்பு விவரங்களின்படி 2008 முதல் 2019-ம் ஆண்டு வரை டெல்லியில் அதிக பட்சமாக 95 ஆயிரத்து 719பேர், கொல்கத்தாவில் 45 ஆயிரத்து 458, மும்பையில் 30 ஆயிரத்து 544,அகமதாபாத்தில் 28 ஆயிரத்து 680, சென்னையில் 28 ஆயிரத்து 674 பேராக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை: இதற்கிடையே, சென்னையில் காற்று மாறுவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறும்போது, ‘‘சென்னையில் காற்று மாசுவை குறைக்க வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பசுமை போர்வையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிவப்பு நிறத்தில் வகைப்படுத்தப்பட்ட அபாயகரமான தொழிற்சாலைகளில் இருந்து புகை மாசு வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ரூ.5 கோடியில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை 50 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்து, பசுமை போர்வையை அதிகரித்து, காற்று மாசுவை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE