சென்னை நகரில் வெப்ப தடுப்பு செயல் திட்டத்தை உடனே அமல்படுத்த தென்னிந்திய ராணுவ தலைமை அதிகாரி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நகரின் வெப்பநிலையை கட்டுப்படுத்த சிஎம்டிஏ உருவாக்கியுள்ள வெப்ப தடுப்பு செயல் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று தென்னிந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார் வலியுறுத்தினார்.

சென்னை பல்கலைக்கழக புவியியல் துறை சார்பில் சென்னை நகரை வெப்ப அலைகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான உத்திகளை மேம்படுத்துவது என்ற தலைப்பிலான 3 நாள் தேசிய பயிலரங்கம் நேற்று தொடங்கியது. இப்பயிலரங்கை தென்னிந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பெருவெள்ளம், புயல்காற்று என இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது மீட்பு பணிக்கு உடனடியாக வருபவர்கள் ராணுவத்தினர். அந்த வகையில், மீட்பு பணி மற்றும் துயர் தணிப்பு பணிகளில் மட்டுமின்றி இயற்கை பேரிடர்களை கையாளும் அனுபவமும் ராணுவத்தினருக்கு உண்டு.

சென்னை நகரம் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் வெள்ளம், புயல் ஏற்படும்போது மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெருவெள்ளம் ஏற்படுவதற்கு அதிக மழைப்பொழிவு காரணம் அல்ல. மழைநீர் வடிந்து செல்வதற்கு போதிய வடிகால் வசதி இல்லாததே காரணம்.

புவி வெப்பமயமாதல் காரணமாக பருவநிலை மாற்றம், கடல்மட்டம் உயர்வு போன்றவை நிகழ்ந்து வருகின்றன. புவி வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணம் வளர்ந்த நாடுகள்தான். வளர்ந்த நாடுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை வளரும் நாடுகள் அனுபவிக்க நேரிடுகிறது. ஏசி பயன்பாடு அதிகரிப்பதன் காரணமாக வெப்பநிலை அதிகரித்த வண்ணம் உள்ளது.

புவி வெப்பமயமாதல் காரணமாக தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படுவது சென்னை நகரம். இந்தியாவில் மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னை நகரில் பசுமைவெளி குறைவாக உள்ளது. கிண்டியில் பசுமைவெளி அதிகளவில் இருப்பதால் நகரின் மற்ற பகுதிகளுடன் ஒப்பீடும்போது இங்கு வெப்பநிலை 10 டிகிரி வரை குறைவாக இருக்கிறது. சென்னை நகரின் வெப்பநிலையை கட்டுப்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ) வெப்ப தடுப்பு செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

வெப்பநிலை அதிகரிப்பதால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகள்தான். இதன் விளைவாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நகரமயமாக்கல் அதிகம் நிகழ்கிறது. 67 சதவீத மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். நகர்ப்பகுதிகளில் திட்டமிடப்படாத வளர்ச்சிதான் பிரச்சினைகள் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. திட்டமிட்ட வளர்ச்சி இருந்தால் எந்த பிரச்சினையும் எழாது. மரக்கன்றுகளை நட்டு, பசுமைவெளியை அதிகரித்தால் வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியும். கூவம் ஆற்றை சுத்தப்படுத்தினால் அது சென்னை மாநகரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை தலைமை தாங்கி பேசும்போது, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி உள்ளிட்ட காரணங்களால் நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அசுர தொழில் வளர்ச்சி காரணமாக நகர்ப்புற இடப்பெயர்வு அதிகரித்து அது பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது என்று குறிப்பிட்டார்.

அண்ணா பல்கலைக்கழக பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மைய கவுரவ பேராசிரியர் ஏ.ராமச்சந்திரன் பேசும்போது வெப்பநிலையை குறைக்க வேண்டுமானால் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். 1997-ம் ஆண்டு வரை வெப்பநிலை இயல்பாகவே இருந்தது. அதற்குப் பின்னர்தான் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. பருவநிலை மாற்றம் என்பது ஒரு சர்வதேச பிரச்சினை. எனவே அதற்கு உலக அளவில்தான் தீர்வு காண வேண்டும் என்றார்.

முன்னதாக, புவியியல் துறை தலைவர் எம்.சக்திவேல் வரவேற்றார். பெங்களுரு தக்சசீலா கல்வி நிறுவன பேராசிரியர் ஒய்.நித்தியானந்தம் அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக, புவியியல் துறை பேராசிரியர் ஆர்.ஜெகநாதன் நன்றி கூறினார். இந்த தேசிய பயிலரங்கம் நாளை (ஜூன் 21) நிறைவடைகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE