‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ‘நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் சங்கத்தினரின் ஆலோசனையுடன் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய நீர் வளஆணையம் ‘நடந்தாய் வாழிகாவிரி' திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், பொறுப்பேற்கும் புதிய மத்திய அரசு இதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டு, உரிய நிதியை ஒதுக்கீடு செய்யும் என அறிவித்துள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.

கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம்போல், காவிரி மற்றும் இதன் நீர்வரத்து மற்றும் பங்கீட்டு நீர் நிலைகளை தூய்மைப்படுத்தும் திட்டமாக முந்தைய மாநில அரசால் 2019-ம் ஆண்டுசட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, திட்ட அனுமதிக்கும், உரிய நிதி ஒதுக்கீடு கோரியும் மத்திய அரசுக்கு அப்பொழுதே அனுப்பப்பட்டது.

தற்போதைய மாநில அரசும் தொடர்ந்து எடுத்த முயற்சியின் பயனாய், மத்திய நீர்வள ஆணையம் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்டமாக ரூ.3,090 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு நிதி உதவி கேட்டு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

வெப்பநிலை உயர்வு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் மக்களின் வாழ்நிலை மிக மோசமாகி வருகிறது. எனவேதான் இந்த திட்டம் மக்களின் உயிர் காக்கும்சுவாச திட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதை, திட்டநோக்கத்தின்படியே செயல்படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்திட வேண்டும். இந்த திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர்களை கொண்ட குழுக்களை அமைத்து அதன் ஆலோசனை மற்றும் அவர்களின் பங்கேற்புடன் இதை சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE