தாயுடன் சேர்க்கும் முயற்சியில் பின்னடைவு: குட்டி யானையை முகாமுக்கு கொண்டு செல்ல ஆலோசனை @ கோவை

By ஆர்.ஆதித்தன்

கோவை: கோவை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி பலனளிக்காத நிலையில், முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30-ம் தேதி உடல் நலம் பாதித்த நிலையில் 40 வயது பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டு 5 நாட்களுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். இதனிடையே, தாயுடன் இருந்த 3 மாத ஆண் குட்டி யானை, அப்பகுதியில் இருந்த மற்றொரு யானை கூட்டத்துடன் இணைந்து வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர், உடல் நலம் தேறிய தாய் யானை கடந்த ஜூன் 3-ம் தேதி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானை இரு தினங்களுக்கு முன்பு கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்துக்குள் சுற்றி வந்தது.
இதையடுத்து குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் தாய் யானை நடமாடி வந்த குப்பேபாளையம் அட்டுக்கல் வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர். ஆனால், குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்க தீவிர முயற்சி மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.

இதனால் நேற்று முன்தினம் ஆனைமலை டாப்சிலிப் கோழிக்கமுதி யானைகள் முகாமில் இருந்து அனுபவம் வாய்ந்த பாகன்கள், காவடி உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இரவு வரை குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்க முடியவில்லை. இதனிடையே பாகன்கள், காவடி ஆகிய குழுவினருடன், வனத்துறை பணியாளர்கள் குட்டி யானையை சேர்க்கும் முயற்சியில் இன்று தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் தாய் யானைக்கு நெருக்கமாக குட்டி யானை விடப்பட்ட நிலையில், தாய் யானை ஏற்றுக் கொள்ளாமல் உள்ளது. இந்நிலையில், மற்றொரு யானை கூட்டத்தில் குட்டி யானையை சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரமாக குட்டியை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி பலனளிக்கவில்லை.

இதுகுறித்து, வனத்துறையினர் கூறும்போது, “தாய் யானையுடன் குட்டி யானையை இணைக்க தீவிர முயற்சி கொண்டோம். ஆனால், தாய் யானை குட்டி யானையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுகுறித்து, தலைமை வன உயிரின காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவரது உத்தரவின்பேரில் குட்டியை முகாமுக்கு கொண்டு சென்று பராமரிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE