ஓமலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் உறுதியானது: சுற்று வட்டார மக்களுக்கு எச்சரிக்கை

By எஸ்.விஜயகுமார்

சேலம்: ஓமலூரை அடுத்த காருவள்ளி என்ற கிராமம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதை, கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, சுற்று வட்டார கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 5 கூண்டுகளை வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை வனச்சரகத்தை ஒட்டியுள்ள காருவள்ளி, எலத்தூர், மேச்சேரி உள்ளிட்ட கிராமங்களில், கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் மாடு, ஆடு, நாய் ஆகியவற்றை மர்ம விலங்கு கடித்து கொன்று வந்தது. சிலர், சிறுத்தை நடமாட்டத்தைப் பார்த்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, வனத்துறையினர் மர்ம விலங்கினை கண்டறிய, அதன் நடமாட்டம் இருந்ததாக கூறப்பட்ட இடங்களில், மண்ணில் பதிந்திருந்த கால் தடம், விலங்கின் எச்சம் ஆகியவற்றை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர்.

மேலும், மர்ம விலங்கு நடமாட்டம் இருந்ததாக கூறப்பட்ட இடங்களில், கண்காணிப்பு கேமராக்களையும் வைத்து, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, காருவள்ளியை அடுத்த கோம்பைக்காடு என்ற கிராமத்தில், சீனிவாசன் என்ற விவசாயியின் வீட்டில் கட்டி வைத்திருந்த மாடுகளில் ஒன்றை, மர்ம விலங்கு கடித்து கொன்று, அதனை தின்றுவிட்டு தப்பியது. இதேபோல், வனப்பகுதியை அடுத்த மூக்கனூர் என்ற இடத்தில் ஒரு மாட்டை மர்ம விலங்கு கொன்று போட்டது. இதையடுத்து, அந்த இடத்தின் அருகே வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்து, தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஞாயிற்றுக்கிழமை இரவு வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, அதில், சிறுத்தை ஒன்று வந்து செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து, சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து, சேலம் மாவட்ட வன அலுவலர் ஷஷாங் காஷ்யப் ரவி, உதவி வனப்பாதுகாவலர் செல்வமுருகன், வனச்சரகர் தங்கராஜ், வன உயிரின ஆர்வலர் சரவணன் உள்ளிட்டோர், சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட மூக்கனூர் உள்ளிட்ட இடங்களில் இன்று (ஜூன் 3) நேரில் ஆய்வு மேற்கொண்டனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டுகளை வைத்து, அதனை உயிருடன் பிடிக்க திட்டம் வகுத்தனர்.

தற்போது, காருவள்ளி, எலத்தூர், மேச்சேரி உள்ளிட்ட இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூறப்பட்ட எலத்தூர், காருவள்ளி, ராமசாமி மலை காப்புக்காடுகளை ஒட்டிய இடங்களில் மொத்தம் 5 கூண்டுகளை வைத்து, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது குறித்து உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார் கூறியது: ‘காருவள்ளி அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில், ஏற்கெனவே கொன்று போட்ட மாட்டினை, சிறுத்தை மீண்டும் மீண்டும் வந்து தின்று சென்றது.

இதையடுத்து, அங்கே கண்காணிப்பு கேமரா வைத்தபோது, அதில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவானது. எனவே, சிறுத்தைப் பிடிக்க, சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 5 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கூண்டுகளில் இறைச்சி, ஆடு ஆகியவற்றை வைத்து, சிறுத்தையைப் பிடிக்க திட்டமிட்டுள்ளோம். வனத்துறையின் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ளார். சிறுத்தை பிடிபட்டதும் அதனை பாதுகாப்பாக கொண்டு சென்று, வனப்பகுதியில் விட திட்டமிட்டுள்ளோம்,’ என்றார்.

இதனிடையே, சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், வனத்துறை, வருவாய்த்துறை ஆகியவை இணைந்து, கிராம மக்களுக்கு வாகனங்களில் ஒலிபெருக்கியைப் பொருத்தி, அதன் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை மக்களுக்கு தெரிவித்து, எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி வருகின்றனர்.குழந்தைகளை வெளியே விட வேண்டாம். பொதுமக்கள், மாலை நேரத்துக்குப் பின்னர் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். பெரியவர்களும் வெளியே அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனச்சரகர்கள் தலைமையில் 3 குழுக்கள் அமைத்து, 24 மணி நேரமும் தொடர்ச்சியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE