கோவையில் உடல்நலம் தேறிய பெண் யானை விடுவிப்பு

By ஆர்.ஆதித்தன்

கோவை: கோவையில் உடல்நலம் தேறிய பெண் யானை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. கோவை மருதமலை அடிவார வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த மே 30-ம் தேதி முதல் 5 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தது.

இந்நிலையில், படுத்து கிடந்த யானையை கிரேன் உதவியுடன் பெல்ட் மூலம் தூக்கி நிறுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் யானைக்கு தேவையான குளுக்கோஸ், ஊட்டச்சத்து மாத்திரைகள், தர்பூசணி, மாம்பழம், விளாம்பழம் ஆகியவை அளிக்கப்பட்டது.மேலும் மலக்குடல் வழியாக 30 லிட்டர் தண்ணீர் செலுத்தப்பட்டது. இதனால் நீர் சத்து இழப்பு, காய்ச்சல் போன்றவை குறைந்தது. பெண் யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.

மேலும், அந்த பெண் யானை தாமாக உணவு உட்கொள்ள துவங்கியது. இதனிடையே பெண் யானையுடன் உடனிருந்த 3 மாத ஆண் குட்டி யானை, கடந்த 3 நாட்களுக்கு முன்பு மற்றொரு யானை கூட்டத்துடன் இணைந்து வனப்பகுதிக்குள் சென்றது. குட்டி யானையின் நடவடிக்கைகளை, ட்ரோன் மற்றும் 25 களப் பணியாளர்கள் அடங்கிய நான்கு தனிக் குழுக்கள் அமைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், யானைக் கூட்டத்துடன் திரும்பி வந்த குட்டி யானை தனது தாயை சந்தித்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

நான்கு நாட்களாக சிகிச்சைப் பெற்று உடல்நலம் தேறிய பெண் யானை நலமுடனும், சுறுசுறுப்பாகவும் நன்றாக உணவருந்தி வந்தது. இதையடுத்து மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணி, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், உதவி வனபாதுகாவலர் தினேஷ், வனச்சரகர்கள் திருமுருகன், அருண் மற்றும் வனக்கால்நடை அலுவலர் டாக்டர் சுகுமார், உதவி அலுவலர் ராஜேஷ் மற்றும் கால்நடை மருத்துவர் ப்ரியங்கா மற்றும் ஓய்வு பெற்ற வனக்கால்நடை மருத்துவர் மனோகரன், தன்னார்வலர்கள் ஜலாலுதீன், பூமிநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திங்கள்கிழமை காலை யானையின் உடல்நலத்தை ஆய்வு செய்தனர்.

இதில் யானை முழு உடல் ஆரோக்கியத்துடன், தானாக உணவு உட்கொள்வதை ஆய்வு செய்து விடுவிக்க முடிவு செய்தனர். இதையடுத்து கிரேனில் பெல்ட் மூலம் இணைக்கப்பட்டிருந்த பெண் யானையை வனத்துறையினர் விடுவித்தனர். பின்னர், அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, குட்டி யானையுடன் அந்த யானையை சேர்த்து வைக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.

தற்போது யானை மடுவு என்ற இடத்தில் குட்டி யானை உள்ளதாகக் கூறப்படுகிறது. குட்டி யானையை நோக்கி தாய் யானை சென்று கொண்டிருப்பதாகவும், யானை கூட்டத்துடன் இணைந்துவிடும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE