தாமிரபரணி ஆற்றில் 21 நாள் தூய்மை பணி நிறைவு: மொத்தம் 96 டன் கழிவு துணிகள் அகற்றம் @ நெல்லை

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற 21 நாள் கோடைகால தூய்மை பணி நிறைவடைந்துள்ளது. இந்த தூய்மை பணியின்போது மொத்தம் 96 டன் கழிவு துணிகள் அகற்றப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயனின் வழிகாட்டுதலின்படி, நெல்லை நீர்வளம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி துணையோடு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் 2-ம் தேதி வரையில் மொத்தம் 21 நாட்களுக்கு பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கோடைகால தூர்வாரும் தூய்மைப்பணி நடைபெற்றது. இந்த பணியின்போது யானைப்பாலம் முதல் தலையணை வரை நதிவழி 3 கி.மீ தூரம் நீரில் மூழ்கிக் கிடந்த துணிகள் அகற்றப்பட்டன. துணிகளோடு பலவகையான கழிவுகளும் வெளியேற்றப்பட்டன. அவ்வாறு அகற்றப்பட்ட கழிவு துணிகளை மூட்டைகளாகக் கட்டி நகராட்சி வாகனங்களில் ஏற்றி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் பாபநாசம் ஐயா கோயில் செல்லும் பிரதான சாலையில் பொதுமக்களுக்கு இடையூராய் நின்ற முட்செடிகளை வெட்டியும் துப்புரவு பணியும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் ஆற்றங்கரையோர முட்செடிகளும் வெட்டி அகற்றப்பட்டது. இப்பணியுடன் ஆற்றில் துணிகளை போடுவதால் விளையும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. நீரில் துணிகளை போடாமல் அதற்கென்று அமைக்கப்பட்ட தொட்டி, கம்பிவேலி தொட்டிகளில் போட வலியுறுத்தப்பட்டது. ஆற்றின் ஆழமான பகுதிகளில் குளிக்க வேண்டாம் எனவும், உடமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த 21 நாள் தூய்மை பணியில் மொத்தம் 96 டன் கழிவு துணிகள் ஆற்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி நதி தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் கிரிக்கெட்மூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: ‘21 நாட்களில் ஆற்று நீரிலிருந்து, டன் கணக்கில் கழிவு துணிகள் மட்டுமின்றி, 325 கிலோ பாட்டில்கள், 550 கிலோ செருப்புகள், 2,445 கிலோ சோப்பு, சேம்பு, பேக்கிங் கவர், பாலீதீன் பைகள், மாலை உள்ளிட்ட கழிவுகளும், 699 கிலோ சுட்ட கலயங்கள், 23.5 டன் வெட்டி அகற்றப்பட்ட முட்செடிகள் அகற்றப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதுடன் பங்கேற்றனர். விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மூலம் 3 கட்டங்களாக துணிகள் கழிவுகள், வாகனங்கள் மூலம் குப்பை கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மணிமுத்தாறு 9 மற்றும் 12 அணி சிறப்பு காவல்படையினர் தூய்மைப் பணியில் ஒருநாள் ஈடுபட்டனர். இதுபோல் தன்னார்வலர்கள், பல சமூகஅமைப்புகள், பல அறக்கட்டளைகள், நன்கொடையாளர்கள், நிறுவனங்களும் தூய்மை பணிக்கு உதவியிருந்தன. அதிகளவில் துணிகள் அகற்றப்பட்டுள்ளதால் தற்போது தண்ணீரின் pH அளவு குறைந்துள்ளது. மாசுபாடும் குறைந்துள்ளது. நீர் சுத்தமாக காணப்படுகிறது. துணிகள் அதிகம் எடுத்ததால் மீன்கள் கொண்டாட்டமாய் நீரில் துள்ளுவதை காணமுடிகிறது, என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE