வங்கக் கடலில் மே மாதத்தில்  தொடர்ந்து 5-வது ஆண்டாக புயல்: உலக வெப்பமயமாதல் காரணமா?

By ச.கார்த்திகேயன்

சென்னை: அண்மைக் காலமாக பருவநிலை மாற்றம், உலகம் வெப்பமயமாதல் குறித்து அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலக வெப்பமயமாதல் குறித்து உலக நாடுகள் கூடி அவ்வப்போது பேசி வந்தாலும், அதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. தற்போது வங்கக் கடலில் புயல்கள் உருவாவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அண்மையில் 'ரீமல்' தீவிர புயல் உருவாகி மேற்கு வங்க மாநிலம் மற்றும் வங்கதேசத்தை புரட்டிப் போட்டுள்ளது. இதற்கு உலக வெப்பமயமாதலும் ஒரு காரணமாக இருக்கலாம் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் அதிக அளவில் புயல்கள் உருவாவது வழக்கம். மே மாதத்தில் மேற்கூறிய மாதங்களை விட குறைவாகவே புயல்கள் உருவாகும்.

மே மாதத்தில் புயல்கள் உருவாவது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: ‘இந்திய வானிலை ஆய்வு மையம் 1891-ம் ஆண்டு முதல் நாட்டின் வானிலை தரவுகளை பதிவு செய்து, பாதுகாத்து வருகிறது.

அவ்வாறு தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் கடந்த 134 ஆண்டுகளில் 243 புயல்கள், 291 தீவிர புயல்கள் என மொத்தம் 534 புயல் சின்னங்கள் உருவாகியுள்ளன. அதிகபட்சமாக நவம்பர் மாதத்தில் 125 புயல்களும், அக்டோபர் மாதத்தில் 94 புயல்களும், மே மாதத்தில் 66 புயல்களும் உருவாகியுள்ளன. கோடை காலம் என்றால் கடும் வெயில் வாட்டும் என்று தான் நாம் கருதுகிறோம். ஆனால் புயலும் வரும். மே மாதத்தில் புயல் உருவாவது அரிதான நிகழ்வு இல்லை. வழக்கமான ஒன்று தான்’, என்று அவர் கூறினார்.

எஸ்.பாலச்சந்திரன்

கடந்த 134 ஆண்டு வானிலை தரவுகளின்படி 1967- 71 காலகட்டத்தில் மே மாதத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து 5 புயல்கள் உருவாகியுள்ளன. அதன் பிறகு, கடந்த 2020-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக ஆண்டுதோறும் மே மாதங்களில் புயல்கள் உருவாகி மிரட்டி வருகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு மே மாதத்தில் 'ஆம்பன்' புயல், 2021-ம் ஆண்டு 'யாஸ்' புயல், 2022-ம் ஆண்டு 'அசானி' புயல், 2023-ம் ஆண்டு 'மொக்கா' புயல் ஆகியவை உருவாகின.

எம்.ரவிச்சந்திரன்

இந்த ஆண்டு மே மாதத்தில் 'ரீமல்' புயல் உருவானது. இது தொடர்பாக இந்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ‘உலக வெப்பமயமாதல் ஒரு உலகலாவிய பிரச்சினை. இதற்கு குறிப்பிட்ட ஒன்றைக் காரணமாகக் கூற முடியாது. பல்வேறு காரணங்களால் உலகம் வெப்பமயமாகிறது. இதன் தாக்கத்தால் உலக அளவில் கடல் பரப்புகள் வெப்பமாகி வருகின்றன. அதிலும் இந்திய கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாகவே ஆண்டுதோறும் மே மாதங்களில் வங்கக் கடலில் தொடர்ந்து புயல்கள் உருவாகி வருகின்றன. இதுபோன்ற புயல்களுக்கு சக்தியும் அதிகமாகவே இருக்கும்,’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE