பாம்பன் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இறந்து கரை ஒதுங்கும் முள்ளம்பன்றி பேத்தை மீன்கள்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பன் மன்னார் வளைகுடா கடற்கரையில் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான விஷத்தன்மை கொண்ட முள்ளம்பன்றி பேத்தை மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருவதால் மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உலகின் வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் பேத்தை மீன்கள் (puffer fish) காணப்படுகிறது. பெரும்பாலான பேத்தை மீன்கள் நச்சுத்தன்மை கொண்டவை. பேத்தை மீன்கள் உடல் குட்டையாகவும், தடித்த, உருளை வடிவமாகவும் தோற்றமளிக்கக்கூடியது. இதன் மேலுதடும் பார்ப்பதற்கு மனிதனின் வாயமைப்பை போன்று இருக்கும்.

பொதுவாக பேத்தை மீன்கள் தன்னை தற்காத்துக் கொள்ள கடல் நீர் மற்றும் காற்றைக் கொண்டு தனது உடலை பத்து மடங்கு பெரியதாக ஊதிப்பெருக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதனால் ஆங்கிலத்தில் பலூன் மீன் என்ற செல்லப்பெயரும் இதற்கு உண்டு. பேத்தை மீன்களில் ஒருவகை மீனில் உடலில் முள்ளம்பன்றி போல் முட்கள் காணப்படுவதால் அவை முள்ளம்பன்றி பேத்தை மீன் என அழைக்கப்படுகிறது.

பேத்தை மீன்களின் கல்லீரல், கருப்பை, தோல் மற்றும் தசைகளில் டெட்ரோடோடாக்சின் எனும் விஷம் உள்ளது. இதனால் வலையில் பேத்தை மீன்கள் சிக்கினால் அவற்றை தனியாக எடுத்து மீனவர்கள் எறிந்து விடுவார்கள். இந்நிலையில் சில நாட்களாக ராமேசுவரம் அருகே பாம்பன் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் முள்ளம்பன்றி பேத்தை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவதால் மீனவர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய மீன்வளத்துறை அதிகாரிகள், “மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பேத்தை மீனினங்கள் உள்ளன. தற்போது மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் கரை ஓரங்களில் பேத்தை மீன்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் கடலில் ஏற்பட்டுள்ள சூழலியல் மாற்றங்களால் பேத்தை மீன்கள் அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்குவது அதிகரித்து உள்ளது. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடந்த ஓராண்டில் பேத்தை மீன்கள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குவது இது இரண்டாவது முறையாகும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE