பிளாஸ்டிக் பேக்கேஜிங் உற்பத்தியாளர்கள், மறுசுழற்சியாளர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

By கி.கணேஷ்

சென்னை: பிளாஸ்டிக் பேக்கேஜிங் உற்பத்தியாளர்கள், மறு சுழற்சியாளர்கள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ‘பிளாஸ்டிக் பேக்கேஜிங்’க்கான விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு இணையதளம் (இபிஆர்) குறித்த வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

அந்த வழிகாட்டுதல்படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், வியாபார தர அடையாள உரிமையாளர்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் எண்ணெய் எடுப்பவர்கள், இணை செயலாக்க சிமென்ட் தொழிற்சாலைகள், தங்கள் பொறுப்பை நிறைவேற்ற மத்திய மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் உருவாக்கிய இபிஆர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, இம்மாதம் 31-ம் தேதிக்குள், தங்கள் முழுமையான விவரங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அனைத்து பிளாஸ்டிக் பேக்கேஜிங் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், வியாபார தள அடையாள உரிமையாளர்கள், கையாள்பவர்கள் தங்கள் ஆண்டு அறிக்கையை பொறுப்பு தளத்தில் வரும் மே 31-ம் தேதிக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும். தளத்தில் உள்ள முக்கிய ஆவணங்களைப் பார்க்கவும் மற்றும் கேள்விகளுக்கு 9500076438 என்ற மொபைல் எண் மற்றும் pwmsec@tnpcb.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE