தி
ருவான்மியூரில் எங்கள் வீட்டிலுள்ள கிணற்றில் ஒரு பூனைக்குட்டி விழுந்துவிட்டதாகத் தொலைபேசியில் எனக்குச் செய்தி வந்தது. தீயணைப்புப் படையைத் தொடர்புகொண்டு உதவி கேட்டு, வீட்டுக்கு நான் திரும்புவதற்குள் அவர்கள் வந்து அதை மீட்டிருந்தார்கள்.
அந்தப் பூனைக்குட்டி எங்கள் வீட்டுக்குத் தினமும் வர ஆரம்பித்தது. அதிலும் நாய் ஜேனுவுக்குச் சாப்பாடு வைக்கும் நேரம் பார்த்து வந்தது. நாய் உண்ட மிச்ச உணவைச் சாப்பிடும். சில நாட்களில் நாயும் பூனையும் நன்கு பழகி ஒன்றாக ஒரே தட்டில் சாப்பிடத் தொடங்கின.
சில மாதங்களுக்குப்பின், பெருமழை பெய்துகொண்டிருந்த ஒரு மாலையில் தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்தபோது ‘பாஸ்கர்... அங்கே பார்’ என்றார் என் மனைவி திலகா. நான்கு குட்டிகள் பின்தொடர வீட்டுக்குள் மெல்ல மெல்ல அடியெடுத்து நுழைந்த அந்த தாய்ப்பூனை, உரிமையுடன் கட்டிலுக்கு அடியில் குடியேறிவிட்டாள். இது நடந்தது 19 ஆண்டுகளுக்கு முன்பு!
‘மைக்கண்ணி’
நல்ல வீடுகள் பார்த்து குட்டிகளைக் கொடுத்தபின், ‘புளூ கிராஸ்’ மருத்துவமனைக்கு பூனையை எடுத்துச் சென்று கருத்தடை செய்துவிட்டோம். அதன் பின் எங்களுடனேயே தங்கிவிட்ட பூனை, இரவில் வெளியே சுற்றிவிட்டுக் காலையில் வந்து கார் ஷெட்டில் தூங்கிவிடுவாள். மஞ்சள், கறுப்பு, வெள்ளை ரோமப்போர்வை கொண்ட அவ்வகை ‘கேலிகோ’ பூனை என்று குறிப்பிடப்படுவதைப் பின்னர் அறிந்துகொண்டேன். ஆனால், அது ஒரு தனி ஜாதி அல்ல. எங்கள் பூனையின் வலது கண்ணைச் சுற்றிக் கறுப்பாக இருந்ததால் ‘மைக்கண்ணி’ என்று பெயரிட்டோம்.
ஒரு நாள் வீட்டுச் சுற்றுச்சுவரில் உட்கார்ந்திருந்த அவளை ஒரு நரிக்குறவன் பிடித்து சாக்கில் போட்டு எடுத்துக்கொண்டு போனதை பார்த்த சில சிறுவர்கள், எங்கள் வீட்டுப் பெண் உதவியாளரிடம் கூறினார்கள். குறவன் போன திசை நோக்கி ஓடிய அவர், இரண்டாம் தெருவில் பிடித்து சண்டை போட ஆரம்பித்துவிட்டார். வழியில் சென்ற சிலர் விவரம் அறிந்து நரிக்குறவனை எங்கள் வீடுவரை கூட்டி வந்து, மைக்கண்ணியை எடுத்து வெளியில் விட்டனர். சாக்கினுள் பல பூனைகள் இருந்தன. பூனை இறைச்சி நரிக்குறவர்களுக்குப் பிடித்தமானது.
இரண்டு கட்சிகள்
உலகில் செல்லப்பிராணி வளர்ப்போரில் நாய்க் கட்சி, பூனைக் கட்சி என்று இரு பிரிவு உண்டு. இரண்டையும் வளர்க்கும் வெகு சிலருக்கே இந்தச் செல்லங்களின் வேறுபாடு தெரியும். பூனை தன்பாட்டில் சுதந்திரமாக இருக்கும். பெரிய சிந்தனையாளர் போன்ற ஒரு பாவனையுடன் இருக்கும். கூப்பிட்டால், கேட்காததுபோல் போகும். தான் விரும்பும்போது வாலை உயர்த்திக்கொண்டு நம் காலில் வந்து உரசி அன்பை வெளிப்படுத்தும்.
நாய் போலவே பூனையும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதருடன் பழகி வளர்ப்புப்பிராணி யாகி விட்டது. ஆனால் நாயைப் போலல்லாது, பூனை தனது காட்டுயிர் இயல்பை முழுமையாக விட்டுவிடவில்லை. மைக்கண்ணி அவ்வப்போது எலி பிடித்துக்கொண்டு வந்து பாதி தின்றுவிட்டு, மீதியை வீட்டில் எங்காவது போட்டுவிடுவாள்.
‘மம்மி’ பூனை
எகிப்தில் பூனை, கடவுளரின் ஒரு வடிவமாக வணங்கப்பட்டது. அரசர் குடும்பத்தைப் போலவே பூனைகளும் இறந்தபின் பாடம் பண்ணிக் காக்கப்பட்டன. ஐரோப்பாவில் பல அருங்காட்சியகங்களில் இந்தப் பூனை ‘மம்மி’களைப் பார்க்கலாம். பிரமிடுகளிலுள்ள சுவரோவியங்களில் இந்தப் புனிதப் பூனைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. தமிழகக் கலை வரலாற்றில் பிரபலமானது மாமல்லபுரத்து ‘அர்ஜுனன் தபசு’ சிற்பத்தின் கீழ்ப் பகுதியிலுள்ள தவம் செய்யும் பூனைதான். மகாபாரதத்தில் வரும் ஒரு கதையை இது சித்தரிக்கிறது என்கிறார் மாமல்லபுர விற்பன்னர் பேராசிரியர் பாலுசாமி.
நாய், பூனை, ஆடு என்று ஏதாவது ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பது, நமக்கும் விலங்கு உலகுக்கும் ஒரு பாலத்தை அமைப்பது போலாகும். வாழ்வைச் செறிவுள்ளதாக்கும் பிணைப்பு அது. நம் வீட்டுப் பூனையின் மூதாதையர், காட்டுப்பூனை. இன்றும் புதர்க்காடுகளில் வாழ்கிறது. பெருமாள் முருகன் தனது ‘பூனாச்சி’ நாவலில் இவ்விலங்கைப் பற்றி எழுதியிருக்கிறார்.
(தோட்டத்துக்கு வந்த தேன்பருந்து
- ஏப்ரல் 28 இதழில்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
சு. தியடோர் பாஸ்கரன், பிரபல சூழலியல் எழுத்தாளர். அஞ்சல் துறைத் தலைவர் பதவி வகித்து ஓய்வுபெற்ற அவர் தமிழ் சினிமா, சூழலியல் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக’, ‘தாமரை பூத்த தடாகம்’, ‘வானில் பறக்கும் புள்ளெலாம்’, ‘சோலை எனும் வாழிடம்’ ஆகிய சூழலியல் நூல்களை எழுதியுள்ளார். தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
11 days ago