பெங்களூரு ஆலைகளின் கழிவுநீரால் கெலவரப்பள்ளி அணை நீர் தொடர்ந்து நுரை பொங்க வெளியேற்றம்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 455 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரில், பெங்களூரு சுற்றுவட்டார தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு கலந்திருப்பதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நுரையுடன் வெளியேறி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, நீர் வரத்து உள்ளது. கடந்த ஓர் ஆண்டாக மதகுகளில் ஷட்டர் மாற்றும் பணியால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் பணி நிறைவுபெற்று அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளிஅணைக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அணைக்கு நீர் வரத்து உயர்வதும், குறைவதாகமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை வினாடிக்கு 339 கன அடியாக இருந்த நீர் வரத்து செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 445 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 440 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

அணையின் மொத்த கொள்ளவு 44.28 அடியில் 24.60 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து அதிகப்படியான ரசாயன கழிவு நீர் திறக்கப்ட்டுள்ளதால், கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீருடன் ரசாயன கழிவு நீரும் கலந்து வெளியேறுவதால் நுரை பொங்கி செல்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE